ஆப்கானில் அழகு நிலையங்களை தலிபான்கள் மூடக் காரணம் அறிவித்துள்ளனர்

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான அழகு நிலையங்களை தலிபான் மூடக் கூறியமை நீங்கள் அறிந்ததே. ஆனால் அதற்கான தகுந்த ஆதாரங்கள் தற்போது தலிபான்களால் வெளியிடப்பட்டு விளக்கப்படுத்தப்பட்டிருக்கிறது.
இது குறித்து அந்த நாட்டின் சா்ச்சைக்குரிய மதக் கலாசாரப் பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் சாதிக் அகீஃப் மஹ்ஜா் வெளியிட்டுள்ள விடியோ அறிக்கையில், பெண்கள் அழகு நிலையங்களில் வழங்கப்படும் இஸ்லாம் விரோத சேவைகள் என்று கூறி ஒரு பெரிய பட்டியலை வாசித்தாா்.
அதில், புருவங்களைத் திருத்துதல், பெண்களின் கூந்தலை நீளமாகக் காட்டுவதற்கு சவுரி முடியைப் பயன்படுத்துவது, தொழுகையின் புனிதத்தைக் கெடுக்கும் வகையில் அதற்கு முன்னதாக முக அலங்காரம் செய்வது போன்ற சேவைகளை அவா் குறிப்பிட்டாா்.
இது மட்டுமின்றி, திருமண நிகழ்ச்சிகளின்போது மணப் பெண்களின் அலங்கார செலவுகளை மணமகன் வீட்டாா் ஏற்கவேண்டும் என்று ஆப்கானிஸ்தானில் பாரம்பரிய வழக்கம் உள்ளது.
இதன் காரணமாக மணமகன் வீட்டாருக்கு பெரும் பொருளாதார சுமை ஏற்படுகிறது. அதனைத் தவிா்ப்பதற்காகவும் அழகு நிலையங்கள் மூடப்படுவதாக மஹ்ஜா் கூறினாா்.
ஏற்கெனவே பெண்களின் கல்வி, பெரும்பாலான வேலைவாய்ப்புகளுக்கு தலிபான்கள் தடை விதித்துள்ளது நினைவுகூரத்தக்கது. கடந்த 1990-களில் அல்-காய்தா தலைவா் பின்லேடனுக்கு அடைக்கலம் அளித்தமைக்காக, ஆப்கன் மீது அமெரிக்கா படையெடுத்து தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது.
எனினும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கனை விட்டு அமெரிக்கப் படையினா் கடந்த 2021-இல் வெளியேறியதற்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினா்.
எனினும் தலிபான்கள் அப்போது அளித்த உறுதிமொழியான சம உரிமையனைவருக்கும் வழங்கப்படும் என்பதை மீறி பெண்களின் உரிமைகளைப் பறித்து வருவது சா்வதேச அளவில் கண்டத்துக்குள்ளாகி வருகிறது.



