திருமணத்திற்கு சிவலிங்கம் நேரில் தோன்றி சாட்சி சொன்ன கதை தெரியுமா?

#God #spiritual #Lanka4 #ஆன்மீகம் #திருமணம் #Marriage #சிவபெருமான் #லங்கா4
Mugunthan Mugunthan
11 months ago
திருமணத்திற்கு சிவலிங்கம் நேரில் தோன்றி சாட்சி சொன்ன கதை தெரியுமா?

தனது பக்தை ஒருத்திக்காக சாட்சி சொல்வதற்கு சிவ லிங்கமே கும்பகோணம் அருகில் உள்ள ஊரில் இருந்து மதுரைக்கு வந்துள்ளது.

 இதுவும் ஈசனின் திருவிளையாடல்களில் ஒரு கதையாக சொல்லப்படுகிறது.

இந்த கதை நிஜமாக நடந்தது என்பதற்கு இன்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும், கும்பகோணம் அருகில் உள்ள கோவிலிலும் உள்ளது.

 காவிரிபூம்பட்டினத்தை சேர்ந்த வணிகன் அரதன குப்தன். இவன் மதுரையை சேர்ந்த பெண் ஒருத்தியை திருமணம் செய்து கொண்டு, மதுரையிலேயே வாழ்ந்து வந்தான்.

 காவிரி பூம்பட்டினத்தில் வாழ்ந்த அரதன குப்தனின் தங்கைக்கும், அவரது கணவருக்கும் தங்கள் மகள் ரத்னாவளியை அரதன குப்தனுக்கே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற ஆசை. 

ஆனால் அரதன குப்தனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி இருப்பதால் தங்களின் ஆசையை எப்படி சொல்வது என தெரியாமல் தயக்கத்துடன் இருந்தனர்.

 எதிர்பாராத விதமான அரதன குப்தனின் தங்கையும் அவரது கணவரும் இறந்து விட்டதாக காவிரிபூம்பட்டினத்தில் இருந்து தகவல் வந்தது. இதனால் அரதன குப்தன் உடனடியாக புறப்பட்டு, காவிரிபூம்பட்டினம் சென்று, தங்கையின் இறுதி சடங்குகளில் கலந்து கொண்டார்.

 மீண்டும் மதுரை திரும்ப நினைத்த அரதன குப்தன், தாய் தந்தையை இழந்து தனியாக நின்ற ரத்னாவளியை தனியே விட்டு வர மனம் இல்லாமல் தன்னுடன் அழைத்துக் கொண்டு மதுரை புறப்பட்டான்.

 வழியில் திரும்புறம்பயம் என்ற இடத்தில் ஒரு புன்னைவனம், அங்கு ஒரு வன்னிமரம், அருகில் சிவலிங்கம், சற்று தள்ளி ஒரு கிணறு இருந்தது. நேரமாகி விட்டதால் இருவரும் அங்கேயே தங்கி விட்டனர். 

காலையில் கண் விழித்த போது, அரதன குப்தன் அசைவற்று கிடந்தான். நள்ளிரவில் பாம்பு கடித்ததால் அவனும் உயிர் பிரிந்திருந்தது. இதனால் கதறி அழுதாள் ரத்னாவளி. தற்செயலாக அவ்வழியாக வந்த திருஞானசம்பந்தர், அழுது கொண்டிருக்கும் ரத்னாவளியிடம் விபரம் கேட்க, அவளும் நடந்தவற்றை கூறுகிறாள்.

 அவளின் பரிதாப நிலை கண்டு இரக்கப்பட்ட திருஞானசம்பந்தர், ஈசனிடம் முறையிடுகிறார். திருஞானசம்பந்தரின் வேண்டுகோளை ஏற்று, அருதன குப்தனுக்கு உயிரை மீட்டு தருகிறார் சிவ பெருமான். 

தன்னை வணங்கிய அரதன குப்தனிடம், ஈசனுக்கு முன்பாக வைத்து இந்த பெண்ணுக்கு தாலி கட்டி, இவளை உன் மனைவியாகவே ஊருக்க அழைத்து செல் என சொல்கிறார்.

 தனது உயிரை மீட்டு தர உதவியவர் என்பதால் திருஞானசம்பந்தரின் பேச்சை மறுக்காமல் அரதன குப்தனும் ரத்னாவளியை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு அங்கிருந்த வன்னிமரம், கிணறு, சிவலிங்கம் மட்டுமே. 

இருவரும் திருமணம் முடிந்த கையோடு மதுரை வந்தனர். தனது கணவர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து அழைத்து வந்திருப்பதை கண்டு கோபம் கொண்ட முதல் மனைவியிடம் ரத்னாவளி நடந்த விபரங்களை எடுத்துச் சொன்னாள்.

 உள்ளது உள்ளபடி சொல்லியும் முதல் மனைவி அதை நம்ப மறுத்து விட்டாள். இந்த வழக்கு அரசனிடம் சென்றது. திருமணம் நடந்ததற்கு யார் சாட்சி என கேட்கப்பட்டது.

 மனிதர்கள் யாரும் சாட்சி இல்லை. சிவலிங்கமும், வன்னிமரமும், கிணறும் தான் சாட்சி என அப்பாவியாக கூறினாள் ரத்னாவளி. இதை கேட்டு அனைவரும் சிரித்தனர். 

முதல் மனைவியும் கேலியாக, அப்போ அந்த சிவலிங்கம் இங்கே வந்து சாட்சி சொல்லுமா? என கேட்டாள்.

 சபையில் கூடி இருந்தவர்களும் சிரித்தனர். சபையில் கூனிக்குறுகிப் போய் அழுதபடி நின்ற ரத்னாவளி, அனைவரிடமும் அழுது புலம்பினாள். கடைசியாக, ஈசனே இது என்ன சோதனை? 

இப்போது எனக்காக சாட்சி சொல்ல யார் வருவார்கள்? இந்த அவப்பெயரை போக்கி, என் தரப்பு நியாயத்தை எப்படி நிரூபிப்பேன் என பலத்த குரலில் கதறி அழுதாள்.

 அப்போது, இவர்களின் திருமணத்திற்கு நாங்கள் சாட்சி என ஒரு குரல் கேட்டது. அனைவரும் திரும்பிப் பார்க்க அங்கே சிவலிங்கம், வன்னிமரம், கிணறு மூன்றும் சாட்சியாக வந்தன.

 அப்போது அங்கு காட்சி தந்த ஈசன், இவர்களின் திருமணம் நடந்தது உண்மை தான். ரத்னாவளி திருமணத்திற்கு சாட்சியாக, திருமணம் நடந்த இடமான திரும்புறம்பயத்தில் இருந்த வன்னிமரம், சிவலிங்கம், கிணறு இவை மூன்றும் எனது சன்னதிக்கு ஈசானிய மூலையிலேயே சாட்சியாக இருக்கும் என சொல்லி மறைந்தார்.

 இந்த திருவிளையாடல் நடந்ததற்கு சாட்சியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்றும் சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு வெளி பிரகாரத்தில் மூலையில் வன்னி மரம், கிணறு, சிவலிங்கம் ஆகியவை உள்ளன.

 அது மட்டுமல்ல கும்பகோணத்தில் இருந்து சாட்சி சொல்ல மதுரை சென்றதால் திரும்புறம்பயம் கோவிலில் உள்ள சிவன், ஸ்ரீ சாட்சிநாத சுவாமி என்ற திருப்பெயராலாயே அழைக்கப்படுகிறார்.

 கும்பகோணத்தில் இருந்து 9 கி.மீ., தூரத்தில் திரும்புறம்பயம் ஸ்ரீ சாட்சிநாத சுவாமி கோவில் உள்ளது.