நாட்டுக்கு வருவதாக கூறிய சர்ச்சை போதகர் ஜெரோம் சூம் தொழிநுட்பம் ஊடாக ஆராதனையில்!
பௌத்த மற்றும் ஏனைய மதங்களை புண்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கிறிஸ்தவ போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் கட்டுநாயக்க மிராக்கிள் டோம் மண்டபத்திற்கு முன்பாக பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இன்று (21) நாட்டுக்கு வரவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டுள்ள அவர், இதுவரை நாடு திரும்பவில்லை. பௌத்த மற்றும் பிற மதங்களை அவமதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிறிஸ்தவ மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு பல தரப்பினரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில், விசாரணையும் நடைபெற்று வருகிறது.
அவர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே தடை உத்தரவைப் பெற்றுள்ளனர். இவ்வாறானதொரு சூழலில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாட்டை விட்டு வெளியேறியதாகவும், ஞாயிற்றுக்கிழமை, அதாவது இன்று இலங்கை திரும்புவதாகவும் அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், அவர் தற்போது நாடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இன்றுடன் தொடர்புடைய ஞாயிறு ஆராதனை கட்டுநாயக்க மிராக்கிள் டோம் மண்டபத்தில் நடைபெறாது என போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தனது முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
குறித்த ஆராதனை தெஹிவளையில் வேறொரு இடத்தில் இடம்பெறும் எனவும், zoom app ஊடாக தொடர்பு கொள்ள முடியும் எனவும் அந்த குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் இன்று காலை போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு சொந்தமான கட்டுநாயக்க மிராக்கிள் டோம் மண்டபத்திற்கு முன்பாக பொலிஸ் பாதுகாப்பு ஈடுபடுத்தப்பட்டிருந்தமையையும் காணக்கூடியதாக இருந்தது.