காலியில் 4 பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காலி மாவட்டத்தில் உள்ள 04 பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது இன்று காலை 08:00 மணி முதல் அடுத்த 24 மணி நேரம் வரை அமுலில் இருக்கும்.
இதன்படி, பத்தேகம, எல்பிட்டிய, நாகொட மற்றும் யக்கலமுல்ல ஆகிய பிரிவுகளுக்கு 01 ஆம் கட்டத்தின் கீழ் மஞ்சள் நிற மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை 75 மில்லி மீற்றரைத் தாண்டியதால், தொடர்ந்து மழை பெய்தால், மண்சரிவு, சுவர்கள் இடிந்து விழுந்து, பாறை சரிவு, நிலச்சரிவு, நிலம் சரியும் அபாயம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை இன்று பிற்பகல் வேளையிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி ஷிரோமணி ஜயவர்தன இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.