சுற்றிவளைப்பின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 19 வயது இளைஞன் காயம்
கம்பளை புபுரஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பதெனிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
அப்பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கம்பளை குற்றப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று குறித்த வீட்டை சுற்றிவளைத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அப்போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
பொலிஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீட்டை நெருங்கியதும், சந்தேகமடைந்த வீட்டில் வசிப்பவர்கள் பொலிஸ் அதிகாரிகளிடம் பல நாய்களை விடுவித்துள்ளனர்.
நாயை அடக்குவதற்காக பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் வீட்டில் இருந்த இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நாய் உயிரிழந்துள்ளதுடன் குறித்த இளைஞரின் காலிலும் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் காயம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த இளைஞர் கம்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.