உருத்திரபுரத்தில் அமைத்த புராதனமான கோயில்கள்

#SriLanka #Temple #spiritual
Kanimoli
11 months ago
உருத்திரபுரத்தில் அமைத்த புராதனமான கோயில்கள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே அம்பாறைத் தேர்தல் தொகுதி தவிர்ந்த இடங்கள் பலவற்றில் மிக அண்மைக் காலத்தில் நடைபெற்ற கள ஆய்வுகளின் விளைவாக, ஆதிவரலாற்றுக் காலத்திலே (கி.மு.300-கி.பி.400) தமிழ் மொழியின் செல்வாக்கு மேலோங்கிய நிலையில் இருந்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. வவுனியா அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அரும்பொருட்கள் மூலமாகவும் இந்தக்கருத்து உறுதியாகின்றது. அங்குள்ள சின்னங்களிலே தமிழைத் தவிர்ந்த வேறெந்த மொழியின் அடையாளங்களும் இல்லாமை எல்லோரதும் சிந்தனைக்கு உரியதாகும். ஆனால், அங்கு பௌத்தம் தொடர்பான சின்னங்களைத் தெரிவு செய்து, அவற்றைக் காட்சிக்கு வைத்துள்ளனர். உன்னதமான கலைவனப்புடைய துர்க்கை அம்மனின் படிமம் ஒன்றுதான் அங்குள்ள சைவசமயம் சார்ந்த வடிவமாகும்.

உருத்திரபுரத்துச்-சிவன்கோயில்
வன்னியிலே காணப்படும் பௌத்த சின்னங்கள் எல்லாம் அங்கு வாழ்ந்த சிங்கள மக்களின் அடையாளங்கள் என்ற தவறான கருத்தினை ஹீயூ நெவில் (Hugh Neville) முன்னிலைப்படுத்தினார். புரிந்துணர்வில்லாது அவர் சொன்னவை சுருதிப் பிரமாணமாகக் கொள்ளப்பட்டன. அது வரலாற்று ஆசிரியர்களுக்கும் அரச சார்புடைய தொல்லியல் நிறுவனங்களில் உள்ளவர்களுக்கும் வலிமையான நம்பிக்கையாகிவிட்டது. ஆனால் அவருக்கு முன்பு நீரப்பாசனமுறை பற்றி ஆய்வுகள் செய்த ஹென்றி பார்க்கர் (Henry Parker) வேறு விதமான கருத்தை வெளிப்படுத்தினார். தமிழ்ப் பேசும் நாகரே மண்மலைக் குளத்தைக் (முத்தையன்கட்டு) கட்டினார்கள் என்றும் வன்னியில் வாழ்ந்த பௌத்தர்கள் தமிழராய் இருக்கக்கூடும் என்னும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உருத்திரபுரத்துச்-சிவன்கோயில்-வளாகத்தின்-மேற்கொண்ட-ஆய்வின்போது
பார்க்கர் பதிவு செய்துள்ள கருத்துகள் மிக அண்மைக் காலத்திலே கள ஆய்வுகளின் மூலம் கிடைத்த விபரங்களால் உறுதி பெறுகின்றன. தமிழ்ப் பிராமி வரிவடிவங்களிலே தமிழ்ப் பெயர்கள் பொறித்த பல நூற்றுக்கணக்கான தொல்பொருட் சின்னங்கள் கிடைத்துள்ளன. அவை வழிபாட்டுச் சின்னங்கள், பாவனைப் பொருட்கள் என இரு வகைப்படும். அவை அனைத்தும் நாகரோடு தொடர்புடையவை. நாகசிற்பங்களிலும், சிவலிங்கம், நந்தி, மயூரம் முதலானவற்றிலும் புத்தர்பாதம், புத்தர் படிமம் போன்றவற்றிலும் மணிணாகன் என்ற பெயரை எழுதுவது வழக்கம். வழிபாட்டுக்குரிய தெய்வங்களையும் அவற்றோடு தொடர்புடைய சின்னங்களையும் நாகர் மணிணாகன் என்றே குறிப்பிட்டனர். அதுபோல நாகர் கோட்டம், சைவக்கோயில், பௌத்தப் பள்ளி, சேதியம் போன்ற வழிபாட்டு நிலையங்களை மணிணாகன் பள்ளி என்று குறிப்பிட்டனர். இந்தப் பெயர்கள் எழுதிய சின்னங்கள் வன்னி மாவட்டங்களிற் செறிந்து காணப்படுகின்றன.

பாவனைப் பொருள்களில் மேல்வரும் இரு சிறிய வசனங்களை எழுதுவது அவர்களின் வழமை:

’வேள் ணாகன் மகன் வேள் கண்ணன்’
’வேள் கண்ணன் மகன் வேள் ணாகன்’

உடைமைப் பொருள்கள், கட்டுமானங்களின் தூண்கள், சுவர்கள், அத்திபாரங்கள், தூண்தாங்கு கற்கள், குளக்கட்டுகள், கிணற்றுக் கட்டுகளை அடுத்துள்ள கற்பாறைகள், மலைக் குகைகள் போன்றவற்றில் இவற்றைக் காணலாம்.

அம்மி, குளவி, ஆட்டுக்கல், உரல், செக்கு போன்றவற்றிலும் இவற்றைக் காணலாம். ஈமக் கல்லறைகளிலும் அவற்றில் இடப்பட்ட பானை, சட்டி, குடம் போன்றவற்றிலும் இவற்றைக் காணமுடிகின்றது. எழுத்துப் பொறித்த நாகரின் பாவனைப் பொருள்களிலும் வழிபாட்டுச் சின்னங்களிலும் நாக வடிவங்களை அமைப்பதும் நாகரின் வழமையாகும்.

உருத்திரபுரத்துச்-சிவன்கோயில்-வளாகத்தின்-மேற்கொண்ட-ஆய்வின்போது-2
உருத்திரபுரத்திலுள்ள நாகரின் பண்பாட்டுச் சின்னங்களை கள ஆய்வு செய்யும் வாய்ப்பொன்று அண்மையில் எமக்குக் கிடைத்தது. அதற்கான ஏற்பாடுகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் செய்தார். அன்றைய தினம் எமக்குப் போதிய நேர அவகாசம் இன்மையால் சிவன் கோயில் வளாகத்திலுள்ள தொல்பொருட்கள் சிலவற்றையே பார்வையிட முடிந்தது. அங்கு 18 நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு சிவன் கோயிலும் பௌத்தப் பள்ளியும் இருந்தமைக்கான அடையாளங்கள் தெரிகின்றன.

கோயிலுக்குரிய பரந்த அளவிலான நிலத்தில், ஓரிடத்திலே புத்தர் படிமம் உள்ளதென்ற காரணத்தால் அதனைச் சுற்றியுள்ள ஒரு துண்டு நிலத்தை பாதுகாப்புத் தலமாகத் தொல்பொருள் திணைக்களத்தினர் வரையறை செய்து, அதற்கு எல்லையிட்டுள்ளனர். இலங்கையிலுள்ள மிகத் தொன்மையான தொல்பொருட் சின்னங்களிற் பெரும்பாலானவை சமயச் சார்புடையவை; அவை பௌத்தம், சைவசமயம், நாகவழிபாடு என்பன பற்றியவை. அவற்றைப் பாதுகாப்பது தொல்பொருள் திணைக்களத்தினரின் பொறுப்பும் பணியும் ஆகும்.

சிவன் கோயிலின் கட்டுமானங்கள் நவீன காலத்துக்குரியவை. அவை 20 ஆம் நூற்றாண்டிற் காடுகளை வெட்டி, மீள்குடியேற்றங்கள் அமைக்கப்பட்ட பின் உருவாக்கப்பட்டவை. ஆனால், அது ஏறக்குறைய 1800 வருடங்களுக்கு முன் சிவலிங்க வழிபாடு நடைபெற்ற இடத்தில் அமைக்கப் பட்டுள்ளது. மூலஸ்தானத்தில் இருக்கும் சிவலிங்கமும் அக்காலத்திற்கு உரியதாகும். ஆவுடையாரில், நாகரின் வழமைக்கு ஏற்ப பெயர் இடப்பட்டுள்ளமை இக்கருத்துக்கு ஆதாரமாகின்றது. அத்துடன் அக்கோயிலிற் பயன்பாட்டிலுள்ள சந்தனக் கல்லிலும் நாகர் பற்றிய தமிழ்ச் சொற்கள் தமிழ் வரிவடிவங்களில் எழுதப்பட்டுள்ளன. புதிய கோயிலைக் கட்டுவதற்கு நிலத்தை அகழ்வு செய்த பொழுது இந்தச் சந்தனக் கல் கிடைத்திருக்க வேண்டும்.

கோயில் வளாகத்திற் பரவலாக எழுத்துப் பொறித்த தூண் துண்டங்கள் காணப்படுகின்றன. அவை ஆதியான சிவன்கோயிலின் கட்டுமானப் பகுதிகள் என்று கொள்ளத்தக்கவை.

உருத்திரபுரத்துச்-சிவன்கோயில்-வளாகத்தின்-மேற்கொண்ட-ஆய்வின்போது-கிடைத்த-கல்வெட்டுகள்
பௌத்தப் பள்ளியின் அடையாளங்கள்
தொல்லியல் திணைக்களத்தினர் தங்கள் பாதுகாப்புத் தலம் என அடையாளப்படுத்திய நிலத்திற்கு வெளியே அதற்கண்மையிலுள்ள ஒரு மரத்தின் கீழே சில செங்கற்களும் தூண்துண்டங்களும் காணப்படுகின்றன. அவற்றைச் சுத்தம் பண்ணி, நீரினாற் கழுவிய பின் அவற்றிலே தமிழ்ப் பிராமி எழுத்துகள் தெரிந்தன; தமிழ்ப் பெயர்களும் வசனங்களும் தெரிந்தன, அவை நாகர் பற்றியவை. நாகரின் கல்லறைகளிற் காணப்படும் இரு வசனங்களும் இவற்றிலே பதிவாகி உள்ளன.

சுடுமண் கற்கள் சதுரமானவை, அளவிற் பெரியவை, ஆதிவரலாற்றுக் காலத்திலே தமிழகத்தில்பயன்படுத்தியவற்றைப் போன்றவை அவற்றின் வரிவடிவங்கள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு உரியவை. இவற்றைப் போன்ற கற்கள் மட்டக்களப்பில் மாவடிவேம்பு என்னும் ஊரின் கிழக்குக் கரையோரமாக அமைந்த வில்லுக்காட்டிலும் உள்ளன. அங்கு, அவை நாகரின் குடியிருப்பொன்றின் அழிபாடுக்கிடையே அடையாளங் காணப்பட்டன.

உருத்திரபுரத்துச்-சிவன்கோயில்-வளாகத்தின்-மேற்கொண்ட-ஆய்வின்போது-கிடைத்த-கல்வெட்டுகள்-1
அவற்றிலும் வழமைப்படி தமிழ்ப் பெயர்களும் வசனங்களும் எழுதப்பட்டுள்ளன. எம்மால் அவதானிக்க முடிந்த சில உருப்படிகளில் மணிணாகன் பள்ளி என்ற பெயர் எழுதப்பட்டிருந்தது. சிவன் கோயில்களையும் நாகர் கோட்டங்களையும் பௌத்தப் பள்ளிகளையும் மணிணாகன் பள்ளி என்று நாகர் குறிப்பிட்டனர். தாந்தாமலையில் நாகர் அமைந்த பௌத்தப்பள்ளியில் அந்தப் பெயர் பொறித்த கற்றூண்கள் காணப்படுகின்றன. அவற்றுட் சிலவற்றில் நாகரின் குலமரபுச் சின்னமாகிய நாகத்தின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. உருத்திரபுரத்திலுள்ள தூண்துண்டம் ஒன்றிலே தமிழில் வாசகம் எழுதப்பட்டிருப்பதோடு நாகபந்த வடிவமும் செதுக்கப்பட்டுள்ளது. நாகபந்த வடிவங்கள் பலவிதமான கோலங்களில் அமைந்திருக்கும். அவை வெவ்வேறான இடங்களில் வெவ்வேறான கோலத்திலே செதுக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்குள்ள கற்றூணில் ஒரு சோடியான பாம்புகள் தலை நிமிர்த்திப் படமெடுத்த கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. செங்கட்டி ஒன்றில் மணிணாகன் பள்ளி என்று குறிப்பிடும் கட்டுமானம் நாகரினால் அமைக்கப்பட்டது என்பது இதனால் மேலும் தெளிவாகின்றது.

மணிணாகன் பள்ளி என்ற பெயர் மகாவம்ச ஆசிரியருக்கு அறிமுகமான ஒன்றாகும். மணிநாகபர்வத விகாரம் என்பதை மஹல்லக நாகன் (பி.பி.136-14) என்ற அநுராதபுரத்து அரசன் அமைப்பித்தானென்று மகாவம்சம் குறிப்பிடுகின்றது (34:89). சூளநாக விகாரம் என்ற வேறொரு விகாரத்தையும் அவன் கட்டுவித்தான் (மகாவம்சம்). அது சூளநாக(ன்) என்னும் இளவரசன் ஒருவனின் பெயரால் வழங்கியது (34:90). அதேபோல மணிநாக (பர்வத) விகாரம் என்பது மணிநாக(ன்) என்ற சிறப்புப் பெயரையுடையவரோடு தொடர்புடையது என்று கருதலாம். புத்தர் பெருமானை மணிநாகன் என்றே நாகர் குறிப்பிட்டனர். குசலான் மலையிலும் வேறிடங்களிலும் மணிநாகன் என்ற பெயர் எழுதிய புத்தர்பாத வடிவங்கள் உள்ளன. யாழ்ப்பாணத்திலும் திருகோணமலையிலும் கிடைத்த பல புத்தர் படிமங்களில் மணிணாகன் என்னும் பெயர் அமைந்துள்ளது.

புத்தவிகாரம் என்பதை மணிணாகன் பள்ளி என்று நாகர் குறிப்பிட்டனர். விகாரம், பள்ளி என்பன ஒரே பொருள் குறிக்கும் இருவேறு மொழிச் சொற்கள். விகாரம் என்பது தமிழியிலே தற்பவமாக வந்த சமஸ்கிருத/பிராகிருத மொழிச் சொல். ’அபயாஸ்ரய வளநாட்டு வெல்காமப் பள்ளி வெல்கம் வேரகமான ராஜராஜப் பெரும்பள்ளி புத்தர்க்கு’ என வரும் கல்வெட்டுக் குறிப்பினால் இவ்விளக்கம் தெளிவாகின்றது. எனவே மணிணாகன் பள்ளி என்ற தமிழ்ப் பெயரை மணிணாக விகாரம் என்று மகாவம்சம் குறிப்பிடுகின்றது என்பது உறுதியாகின்றது. நாகரின் வழமைகளின் அடிப்படையில் மட்டுமே மணிநாகபர்வத விகாரம் பற்றிய மகாவம்சக் குறிப்பினைப் புரிந்துகொள்ள முடியும். அந்த விகாரத்தை அமைப்பித்த மஹல்லக நாகன் நாகர்குலத்து அரசன் என்பதும் குறிப்பிடற்குரியது.

இதுவரை கவனித்தவற்றின் முடிவுகளை கீழ்வருமாறு சுருக்கமாகக் குறிப்பிடலாம்.

உருத்திரபுரத்துச் சிவன்கோயில் வளாகத்தைச் சூழ்ந்த பகுதிகளிலே தமிழ்மொழி பேசும் நாகரின் குடியிருப்புகள் இருந்தன. அவற்றின் காலம் இற்றைக்கு 2000 வருடங்களுக்கு முற்பட்டது. அவர்கள் சிவலிங்க வழிபாட்டுக்குரிய கோட்டத்தினையும் அதற்கு அண்மையில் ஒரு பௌத்தப்பள்ளியினையும் அமைத்திருந்தனர். அவை இரண்டிலும் தமிழ்ப்பிராமி வரிவடிவங்களில் எழுதிய தமிழ்ச் சொற்களும் வசனங்களும் செங்கட்டிகள், கற்றூண் போன்ற தொல்பொருள் சின்னங்களிற் காணப்படுகின்றன. பிராகிருத மொழி வழங்கியமைக்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. அங்குள்ள இரு சமய நிறுவனங்களும் தமிழ் மொழி பேசும் மக்களின் வரலாற்று/பண்பாட்டுச் சின்னங்களாகும். அவை 2000 வருடங்களுக்கு முற்பட்ட காலம் முதலாக வாழ்ந்த தமிழ் மொழி பேசும் நாகரின் அடையாளங்களாகும்.

இந்நாட்களிற் போல தொன்மைக் காலத்திலே, குறிப்பாக நாகர் சமூகத்தில், நாகவழிபாட்டினர், சைவர்கள், பௌத்தர்கள் என்று மக்களை வேறுபடுத்தி, வகைப்படுத்தும் வழக்கம் ஏற்பட்டிருக்கவில்லை. கி.மு.9 ஆம் நூற்றாண்டு முதலாகத் தென்னிந்தியப் பிரதேசங்களிலிருந்தும் வந்து, இலங்கையிற் பரவிய நாகர் நாகவழிபாடு, சைவசமய வழிபாடு என்பவற்றை அறிமுகப்படுத்தினார்கள். அத்துடன் பௌத்தம் பரவிய காலம் முதலாக அதனையும் பின்பற்றத் தொடங்கினார்கள். வெடுக்குநாறி மலையிலே பரந்து காணப்படும் கல்வெட்டுகளும் வழிபாட்டுச் சின்னங்களும் தக்க உதாரணங்களாகும். அங்கு தமிழ் மொழிக் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. தமிழ்மொழிக் கல்வெட்டுகள் நாகரைப் பற்றியவை; பிராகிருத மொழிக் கல்வெட்டுகள் பௌத்த சங்கத்தாருக்கு வழங்கிய தானங்கள் பற்றியவை. அவற்றோடு நாகரின் வழிபாட்டுச் சின்னங்களான நாகக்கல், சிவலிங்கம் போன்றனவும் அங்குள்ளன. மேலும் பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்களாகிய நினைவுத் தூண்களும் மலைப்பாறையில் வெட்டிய குழிகளும் அங்குள்ளன. நாகர்மூலமே பெருங்கற்காலப் பண்பாடு இந்நாட்டிற் பரவியதென்பதும் குறிப்பிடத் தக்கது.

தொல்பொருட் சின்னங்களைப் பரந்த மனப்பான்மையோடும் அறிவியல் நோக்கிலும் புரிந்துகொள்ள வேண்டும். தலத்தில் வாழுகின்ற மக்களின் நலன்களைப் பாதிக்காத வகையிலும் அவர்களின் ஆதரவோடும் அவற்றைப் பாதுகாக்க வேண்டும். நல்லிணக்கம் ஏற்படும் வகையில் இவற்றைப் பாதுகாப்பது அரசின் கடமையும் பொறுப்புமாகும்.

முற்றும்.