இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஒரே நாணயப் பரிவர்த்தனம்: மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்ட தகவல்

இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகளால் உள்ளூரில் இந்திய ரூபாவை பயன்படுத்த முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய வணிக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நியமிக்கப்பட்ட நாணயமாக இந்திய ரூபாவை உருவாக்குவது, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக தீர்வுக்கு உதவுவது மட்டுமல்லாமல், இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் பரிவர்த்தனைகளுக்கும் பயன்படும் என்று குறிப்பிட்டார்.
தகவல் தொழில்நுட்பம், மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பில் இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கை மத்திய வங்கியினால் இந்திய ரூபா பெயரிடப்பட்ட நாணய அலகாக மாற்றப்படுவதால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக கொடுக்கல், வாங்கல்கள் மாத்திரமன்றி இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கும் இந்திய ரூபாவை பயன்படுத்த முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதன்போது தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இலங்கையின் பொருளாதார சூழ்நிலை தற்போதைய நிலை மற்றும் முன்னோக்கி' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான எதிர்கால பொருளாதார ஒத்துழைப்பின் பகுதிகளை எடுத்துரைத்துள்ளார்.



