ஜனாதிபதி செயலணியின் தலைவரின் கையெழுத்தை போலியாக இட்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர் விளக்கமறியலில்

ஜனாதிபதி செயலணியின் தலைவர் சாகல ரத்நாயக்கவின் கையொப்பம் மற்றும் உத்தியோகபூர்வ முத்திரையைப் பயன்படுத்தி வடமத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் வடமத்திய பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு போலி கடிதம் அனுப்பிய பொலிஸ் பரிசோதகரை எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர் அநுராதபுரம் மேலதிக நீதவான் ருத்ரிகா டி சில்வா ஹேவாவசம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து,
ஜனாதிபதி செயலணியின் தலைவர் சாகல ரத்நாயக்கவின் கையொப்பம் மற்றும் உத்தியோகபூர்வ முத்திரையைப் பயன்படுத்தி 14 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்குவதற்காக இந்த இரண்டு கடிதங்களும் ஜனாதிபதி செயலகத்தின் லெட்டர்ஹெட் உடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் அடங்கிய அறிக்கையை மே மாதம் 4ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஆவார்.
சந்தேக நபர் போலி கடிதம் தயாரித்து பொலன்னறுவை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்றுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் மேலதிக நீதவானிடம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்தக் கடிதங்களை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ முத்திரைகளோ அல்லது வேறு ஆவணங்களோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.



