ரணில் விக்கிரமசிங்கவின் வீடு எரிக்கப்பட்டமை தொடர்பில் உண்மைகளை வழங்க கால அவகாசம் கோரிய இலங்கை இராணுவம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் 09.07.2022 அன்று எரிக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட விசாரணைகளுக்காக ஆயுதப்படையைச் சேர்ந்த தரப்பினர் நேற்று (21) அழைக்கப்பட்டனர்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூற்றுப்படி, இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையினர் விசாரணைக்கு வந்து உண்மைகளை வழங்கிய போதிலும், இலங்கை இராணுவம் அந்த உண்மைகளை வழங்கவில்லை.
இது தொடர்பான உண்மைகளை முன்வைப்பதற்கு எதிர்காலத் திகதியை வழங்குமாறு இலங்கை இராணுவம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, அந்த கோரிக்கையை கருத்திற்கொண்டு, இந்த விசாரணை தொடர்பான உண்மைகளை எதிர்காலத்தில் முன்வைக்க இலங்கை இராணுவத்திற்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட போது பாதுகாப்புப் படையினர் போதிய பாதுகாப்பை வழங்கினரா என்பதை அறிய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த விசாரணையை மேற்கொண்டு வருகிறது.



