ஜெனீவா தீர்ப்பாயத்தில் இலங்கைக்கு எதிராக கண்டனம்!

இலங்கையில் சித்திரவதை செய்யப்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தொடர்பில் விசாரணைகளை நடத்திய ஐக்கிய நாடுகள் தீர்ப்பாயத்தின் 17 நீதிபதிகளும் இலங்கைக்கு எதிராக ஏகமனதாகத் தீர்ப்பளித்துள்ளனர்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறிய முன்னாள் உறுப்பினர் ஒருவர் சுவிட்சர்லாந்திற்குத் தப்பிச் செல்வதற்கு முன்னர், இலங்கை காவல்துறையினரால் ஒரு மாத காலம் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட வழக்கு தொடர்பில், பதினேழு முன்னணி சர்வதேச நீதிபதிகள் ஜெனீவாவில் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்தநிலையில் தமது தீ்ர்ப்பின்போது நீதிபதிகள், இலங்கை அரசாங்கத்தை கண்டித்துள்ளனர்.
மனுதாரரின் சித்திரவதை, சுவிஸ் மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிரிக்கெட் மட்டையால் கடுமையாக தாக்கியமை, மின்சார அதிர்ச்சி மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை மருத்துவக்குழுவினால் உறுதிச்செய்யப்பட்டுள்ளது.



