இன்றைய வேத வசனம் 27.03.2023: பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்

பறவைகளையும், விலங்குகளையும் பழக்குவிக்க அத்தனை கவனமும், முயற்சியும் செய்யும் மனிதன், தன் பிள்ளைகளை நல்வழியில் வளர்க்க எந்த முயற்சியையும் செய்யக் காணோமே!
"பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம்" (#சங்கீதம் 127:4) என்று வேதம் சொல்லுகிறது. அந்த சுதந்தரத்தை நீங்கள் சுதந்தரித்துக் கொள்கிறீர்களா? எத்தனை குடும்பங்களில் பெற்றோருக்கு பிள்ளைகள் அடங்குவதில்லை ஏன்?
நீதிமொழி 22:6-க்கு செவி சாய்க்காததால்தான். பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழிகளைப் பற்றி இதோ, சில ஆலோசனைகள்:
1. சிறுவயதிலேயே வேதாகம சரித்திரங்கள், கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லிக் கொடுங்கள். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள தீர்மானஞ் செய்யச் சொல்லுங்கள்.
2. அவர்களுடைய ஆர்வத்தை தூண்டுங்கள். அவர்கள் தேவைகளுக்காக அவர்களே, தேவனிடத்தில் எப்படி ஜெபிப்பது என்று சொல்லித் தாருங்கள்.
3. அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்கள் உணர்வுகளையும், தேவைகளையும், புரிந்துகொள்ளுங்கள்.
4. அவர்களோடு நேரம் செலவிடுங்கள். மனம் விட்டு அவர்களோடு பேசி உற்சாகப்படுத்தி சிரித்த மகிழுங்கள்.
5. அவர்களுக்கு முன் ஒரு முன்மாதிரி வாழ்க்கை வாழ்ந்து காட்டுங்கள். அவர்கள் அமைதியாகவே உங்கள் வாழ்க்கை மூலம் அநேக நன்மைகளைப் பெற்றுக் கொள்வார்கள்.
உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசு, (உபாகமம் 6:7) ஆமென்!! அல்லேலூயா!!!



