இலங்கை மக்கள் மகிழ்ச்சியில்: முன்னேறியது இலங்கை! வெளிவந்த அறிக்கை

கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்ட உலக மகிழ்ச்சி அறிக்கை 2023 இன் படி இலங்கை 112 ஆம் இடத்தில் உள்ளது.
கடந்த வருடம் 127 ஆவது நிலையிலிருந்த இலங்கை இவ்வருடம் சற்று முன்னேறியுள்ளது.
பின்லாந்து நாடு உலகின் மகிழ்ச்சியான இடமாக தொடர்ந்தும் ஆறாவது வருடமாக முதலிடத்தை பெற்றுள்ளது.
சமுதாய ஒருங்கிணைப்பு, வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம், சமுதாயத்தின் பெருந்தன்மை மற்றும் ஊழல் அற்ற தன்மை போன்ற முக்கிய 6 காரணிகளைக் கருத்தில் கொண்டு ஆய்வாளர்கள் உலகின் மகிழ்ச்சியான இடத்தைக் கணித்துள்ளனர்.
சர்வதேச ரீதியில் பல நெருக்கடிகள் இருந்தாலும் உலக வாழ்க்கை திருப்தி, கொரோனா பெருந்தொற்றுக்கு முன்னிருந்ததைப் போல் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான ஏரிகள் மற்றும் காடுகளுடனான பின்லாந்து நாடு அதன் விரிவான நலன்புரி அமைப்பு, அதிகாரிகள் மீதான அதிக நம்பிக்கை மற்றும் அதன் 5.5 மில்லியன் மக்களிடையே குறைந்த அளவிலான சமத்துவமின்மை ஆகியவற்றிற்காக அறியப்படுகிறது.
ரஷ்யாவுடனான போர் நிலைமையிலும் கூட உக்ரேனின் நிலை 98 இலிருந்து 92 ற்கு முன்னேறியிருந்தாலும் அதன் மொத்தப் புள்ளி 5.084 இலிருந்து 5.071 ற்கு குறைந்துள்ளது.
பேராசிரியர் மற்றும் அறிக்கையின் ஆசிரியரான ஜன் இமானுவெல் டி நீவ், ”உக்ரைனின் துன்பம் மற்றும் சேதத்தின் அளவு” என்ற அறிக்கை கடந்த ஆண்டு படையெடுப்பின் பின் வெளிவந்தாலும் உக்ரைன் முழுவதுமாக சக உணர்வில் அசாதாரண உயர்வு காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
உலக மகிழ்ச்சி அறிக்கை முதன் முதலாக 2012 இல் மக்களின் மகிழ்ச்சி மற்றும் பொருளாதார சமுதாய தரவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டது.
மேலும் குறித்த அறிக்கையில் இலங்கையின் அயல் நாடாகிய இந்தியா 126 ஆவது இடத்திலும் அதேவேளையில் பாகிஸ்தான் 108 ஆவது இடத்திலும் இருக்கின்றன.



