இலங்கைக்கு நிதியை உடனடியாக வழங்க முடியும்! சர்வதேச நாணய நிதியம்

இலங்கைக்கு அனுமதிக்கப்பட்ட மொத்தக் கடன் தொகையான கிட்டத்தட்ட 03 பில்லியன் அமெரிக்க டொலர்களில் 330 மில்லியன் டொலர்களை உடனடியாக வழங்க முடியும் என சர்வதேச நாணய நிதியத்தின் தூதரகத் தலைவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்தார்.
இலங்கைக்கு நீட்டிக்கப்பட்ட நிதி வசதியை வழங்க எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர்களினால் தற்போது ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
கடன் நிலைத்தன்மையை அடைவதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை அடைய 2023 ஏப்ரல் இறுதிக்குள் கடன் மறுசீரமைப்பு மூலோபாயத்தை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பீட்டர் ப்ரூவர் கூறினார்.
பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கு இலங்கை எடுத்துள்ள சவாலான கொள்கை நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடப்போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எந்தவொரு நாட்டின் தேர்தல் நடவடிக்கைகளிலும் சர்வதேச நாணய நிதியம் தலையிடாது என மசாஹிரோ நோசாக்கி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க சர்வதேச நாணய நிதியம் ஒருபோதும் பரிந்துரை செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் மூத்த தூதுவர் பீட்டர் ப்ரூவர் மற்றும் இலங்கை தூதரகத்தின் தலைவர் மசாஹிரோ நோசாகி ஆகியோர் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.



