ரயிலில் விடப்பட்ட கைக்குழந்தை: குழந்தை நலனுக்காக சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளப் போவதாக வாக்குமூலம் !!

13 நாட்களே ஆன சிசுவை, மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் மீனகாயா விரைவு ரயிலின் கழிவறையில் கைவிட்டுச் சென்ற திருமணமாகாத தம்பதியினர், தமது குழந்தையின் பராமரிப்பு மற்றும் முழுமையான பாதுகாப்பிற்காக நீதிமன்ற அனுமதியை கோரியுள்ளனர்.
மேலும் , குழந்தையின் நலனுக்காக சட்டப்படி திருமணம் செய்துகொள்வதாக தெரிவித்துள்ளனர் .
குறித்த தம்பதிகள் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி லக்ஷான் டயஸ், குழந்தையின் நலனைக் கருத்தில் கொண்டு இன்றைய தினம் தனது தரப்பினர் குழந்தையைப் பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாகவும், சட்டப்பூர்வமாக திருமணம் செய்யத் தயாராக இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
உண்மைகளை கருத்திற்கொண்ட கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, சிசுவை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலை பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, தம்பதிகளை தலா 500,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.
நன்னடத்தை அலுவலரின் நேரடி மேற்பார்வையின் கீழ் சிசு கண்காணிக்கப்பட வேண்டும். இதேவேளை, டி.என்.ஏ பரிசோதனைக்காக குழந்தை மற்றும் சந்தேகநபர் தம்பதியை மார்ச் 21 ஆம் திகதி அரசாங்க பகுப்பாய்வாளர் முன்னிலையில் ஆஜராகுமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டார்.



