கைது செய்ய எதிர்ப்பு - இம்ரான்கான் கட்சி தொண்டர்கள் மற்றும் பொலிஸார் இடையே பதற்றம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது 2 வழக்குகளில் பிடி வாரண்டு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. பிரதமராக இருந்தபோது தனக்கு வந்த பரிசுப் பொருட்களை அரசு கருவூலகத்தில் கொடுக்காமல் அதை விற்றதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாததால் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது.
அதே போல் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்த பேரணியில் நீதிபதி மற்றும் போலீஸ் அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசிய வழக்கிலும் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கில் இம்ரான்கானை நாளை வரை கைது செய்ய தடை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து இம்ரான் கானை கைது செய்ய லாகூரில் ஜமான் பார்க் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு இஸ்லாமாபாத் போலீசார் சென்றனர்.
அவர்கள் இம்ரான்கான் வீட்டுக்கு முன்பு குவிந்து இருந்தனர். இதற்கிடையே இம்ரான் கான் தான் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் நான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் அல்லது கொலை செய்யப்படலாம்.
பாகிஸ்தான் மக்கள் உரிமைகளுக்காக தொடர்ந்து போரிட வேண்டும். என்னை கைது செய்துவிட்டால் நாடு தூங்கிவிடும் என்று அவர்கள் (அரசு) நினைக்கிறார்கள்.
அதை நீங்கள் தவறு என்று நிரூபிக்க வேண்டும். நான் இல்லாமல் கூட உங்களால் போராட முடியும் என்று நிரூபியுங்கள். கடவுள் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்து இருக்கிறார்.
நான் உங்களுக்காக (மக்கள்) வாழ்நாள் முழுவதும் போராடுவேன் என்று தெரிவித்தார்.



