டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் தாக்கல் செய்த மனு: கால அவகாசம் வழங்கிய உச்ச நீதிமன்றம்

ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமைகள் மனு தொடர்பில் வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை முன்வைக்க சட்டமா அதிபருக்கு உச்ச நீதிமன்றம் இன்று (07) அனுமதி வழங்கியுள்ளது.
இந்திய கடன் முறையின் கீழ் பதிவு செய்யப்படாத இரண்டு இந்திய நிறுவனங்களிடமிருந்து மருந்துகளை வாங்குவதற்கு சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சரவையின் முடிவு அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் அது தொடர்பாக முடிவெடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மருந்துகளை கொள்முதல் செய்யும் பணியில் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் முதன்மை செயல் அலுவலர் ஆகியோர் ஏற்கப்பட்ட கொள்முதல் நடைமுறையை தவறாக பயன்படுத்தியதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், குறித்த மருந்துகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதைத் தடுக்க உத்தரவிடுமாறும் உச்ச நீதிமன்றத்தை மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
மேலும், கொள்வனவு செய்யப்படும் மருந்துகளுக்கு பணம் செலுத்துவதை தடுக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அடிப்படை உரிமை மனுவில் கோரப்பட்டுள்ளது.
பிரித்தி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நிர்மலன் விக்னேஸ்வரன், இந்த மனு தொடர்பில் வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு பிரதிவாதிகளுக்கு கால அவகாசம் வழங்குமாறு நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இதன்படி, மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய எதிர்மனுதாரர்களுக்கு கால அவகாசம் வழங்கிய உச்ச நீதிமன்றம்இ பின்னர் மனுவை பரிசீலிக்க இம்மாதம் 24ஆம் திகதிக்கு அழைப்பு விடுக்க உத்தரவிட்டது.



