23 கோடி பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளை கரைத்து நாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த யுவதி

23 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை வைத்திருந்த பொலிவிய யுவதியை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று கைது செய்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
26 வயதான பொலிவிய யுவதியொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர், பிரதி சுங்கப் பணிப்பாளர் சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரின் பைக்குள் இருந்த துணி பாகங்கள் கொக்கெய்ன் திரவத்தில் ஊறவைக்கப்பட்டு இந்த போதைப்பொருள் கையிருப்பு தயாரிக்கப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கொண்டுவரப்பட்ட கொக்கெய்ன் கரைசலில் கொக்கெய்ன் போதைப்பொருள் செறிவு அதிகமாக இருந்ததாகவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்மூலம், கொக்கெய்ன் போதைப்பொருள் கரைசலில் நனைத்த துணியில் இருந்து கொக்கெய்ன் போதைப்பொருளை அகற்றுவதற்கு மற்றுமொரு இரசாயனப் பொருள் பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருள் 04 கிலோ 600 கிராம் எடையுள்ளதாகவும் அவற்றின் பெறுமதி சுமார் இருபத்து மூன்று கோடி ரூபா எனவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



