எண்ணெய் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றை மறுசீரமைக்க திட்டம்

எண்ணெய் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை என்பன இலாபம் ஈட்டுவதற்கான ஏற்பாடுகளை ஏற்கனவே மேற்கொண்டுள்ள நிலையில், உத்தேச மறுசீரமைப்பு செயற்பாடுகளை ஒரு மாத காலத்திற்குள் உடனடியாக ஆரம்பிக்குமாறு அரசாங்க அதிகாரிகள் இரு நிறுவனங்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளனர்.
இந்த இரண்டு அரச நிறுவனங்களும் மேலும் பல அரச நிறுவனங்களும் மறுசீரமைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னர் அறிவித்திருந்த போதிலும், நடைமுறைகளை தயாரிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக உத்தேச மறுசீரமைப்பு செயற்பாடுகள் தாமதமாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை மற்றும் எண்ணெய் கூட்டுத்தாபன அதிகார சபையின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் இலங்கை மின்சார சபையை பல பிரிவுகளாக பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகமும், இலங்கை எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எண்ணெய் வர்த்தகத்தின் மூன்றில் ஒரு பகுதியும் ஏற்கனவே இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
புதிய மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், எண்ணெய் இறக்குமதி உள்ளிட்ட நடவடிக்கைகளில் நிறுவனங்கள் ஈடுபட அனுமதிக்கும் வகையில், விரிவான மேம்படுத்தல் திட்டமிடப்பட்டுள்ளது.



