இன்றைய வேத வசனம் 17.10.2022: நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது

Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 17.10.2022: நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது

நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது; நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது. (#ரோமர் 5:13)

இந்த வசனத்தில், நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்பாகவே உலகத்துல பாவம் இருந்தது, நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டதினால் தான் அவைகள் எண்ணப்பட்டன என்பதாக பவுல் குறிப்பிடுகிறார்.

நாம் வாழும் இந்த காலகட்டத்தில் பாவமே இல்லை என்ற சிந்தனையை நோக்கி நகர்கிற சூழ்நிலையை நம்மால் பார்க்க முடிகிறது.

உதாரணமாக, லிவிங் டுகெதரில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? உங்களுக்கு சரி என்று பட்டால் அது சரி. உங்களுக்கு தவறு என்று பட்டால் அது தவறு.

நீங்கள் குடிக்க வேண்டும் இன்று விரும்புகிறீர்களா? உங்களுக்கு சரி என்றால் அது சரி. உங்களுக்கு தவறு என்றால் அது தவறுங்கற ஒரு மனப்பான்மையை நம்மால் பார்க்க முடிகிறது.

இதே பிரச்சனை சபைக்குள் வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. நீங்கள் ஓரினச்சேர்க்கைக்கு திருமணம் செய்கிறீர்களா சபையும் உங்களை ஏற்றுக்கொள்ளும். இயேசு உங்களை நேசிக்கிறார்.

நீங்கள் குடிக்கிறீர்களா அல்லது தவறான ஒரு உறவில் இருக்கிறீர்களா அது உங்களுக்கு சரியென்று பட்டால் சரி தவறு என்றால் தவறு. ஆனால் இயேசு இன்னும் உங்களை நேசிக்கிறார் என்று போதிக்கிற சூழ்நிலைகளையும் பார்க்கிறோம்.

இதே காரியம் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டதேயானால், அவர்களுக்கு பாவம் என்றால் என்னவென்றே தெரியாமல் போய்விடும். அவர்கள் மனசாட்சிக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்துவிட்டு கடந்து போகிற சூழ்நிலை உருவாகும்.

இதே சூழ்நிலை இதற்கு முன்பாக இருந்தது. நியாயப்பிரமாணம் கொடுப்பதற்கு முன்பாக அதாவது 10 கட்டளைகள் கொடுக்கப்படுவதற்கு முன்பாக இருந்தது.

என்னவென்றால் அப்போதுள்ள மக்கள் எல்லாம் பாவம் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் எது பாவம் என்று தெரியாததினால் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்கள்.

அப்பொழுதுதான் ஆண்டவர் அவர்களுக்கு பத்து கட்டளைகளை கொடுக்கிறார்.

ஆனால், சத்துரு இந்த கடைசி காலத்தில் இந்த அஸ்திவாரத்தையே அசைக்க பார்க்கிறான்.

இன்று சபைகளில் கொஞ்சம் கடிந்து பேசி ஆண்டவருக்கு இது பிடிக்காது இதை செய்யாதீர்கள் என்று போதித்தால், உடனடியாக இவன் நியாயபிரமான போதகன். நியாயப்பிரமாணத்தை போதிக்கிறான் என்று முறுமுறுக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

இன்று இந்த அஸ்திவாரத்தையே சாத்தான் அசைக்க நினைக்கிறான். அதாவது ஏது பாவம் என்கிற சிந்தனையை உங்களை விட்டு அகற்ற நினைக்கிறான்.

இன்று சபையை சீரழிக்கிற கிருபையின் உபதேசத்தில் நீங்கள் ஒரு காரியத்தை கவனிக்க முடியும், அதாவது பாவத்தை குறித்து பேசாதே இயேசுவின் அன்பை குறித்து பேசு என்பதாக.
ஆனால் விஷயம் என்னவென்றால் பாவம் எது என்று தெரிந்தால் தான் அதை வெறுக்க முடியும். இன்று சாத்தான் அந்த அஸ்திபாரத்தை தான் அசைத்துக் கொண்டிருக்கிறான்.

உங்களுக்கு எளிமையாக சொல்ல வேண்டுமானால், பத்து கட்டளைகள் இல்லையேன்றால் பாவம் எதுவென்று தெரியாது. பாவம் எதுவென்று தெரியாவிட்டால் அதை வெறுக்க முடியாது.

பாவத்தை வெறுக்காவிட்டால் தேவனிடத்தில் இருந்து இரக்கத்தை பெற முடியாது. இரக்கத்தை பெறாவிட்டால் பரலோகத்துக்கு போக முடியாது. அதனால்தான் இயேசு கிறிஸ்து சொல்லுகிறார்.

நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். (மத்தேயு 5:17) 
மேற்குறிப்பிட்ட வசனத்தை போதித்த இயேசு கிறிஸ்துவை நாம் பின்பற்றுகிறோமானால் அந்த பத்து கட்டளைகள் நமக்கும் பொருந்தும். ஆமென்