இன்றைய வேத வசனம் 11.10.2022: சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார்

Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 11.10.2022: சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார்

நாம் நற்செய்தியை அறிவிக்கும்பொழுது பலர் நம்மிடத்தில் கேள்விகளைக் கேட்டு நடைமுறை சிக்கல்களை உண்டாக்குவர்.

இப்படியான சிக்கலான கேள்விகளை கேட்கும் மக்களை நாங்கள் எங்கள் ஊழியப் பாதையில் சந்தித்து இருக்கிறோம்.

இப்படிப்பட்ட சிக்கலான கேள்விகளுக்கு சரியான பதில் கொடுத்து சுவிசேஷ ஊழியம் செய்வது எப்படி? கேள்விகளை எதிர்க்கொள்வது எப்படி?  என்பதனை பார்ப்போம்.

1. என் பாவங்களை விட முடியாது; நான் பெரிய பாவி! என்று சொல்லும் மக்கள் நமது ஆத்தும ஆதாய ஊழியத்தில் நாம் சந்திக்கிற இந்த வகை ஜனங்கள் மகா பரிதாபமானவர்கள்.

ஏனென்றால், சில பாவங்கள் மனிதனை விடுவதில்லை. மது, மாது, சூது போன்ற பாவங்களில் சிக்கினவர்கள் 'என்னால் மனந்திரும்ப முடியாது' என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். இவர்களுக்கு நாம் கூற வேண்டிய பதில் என்ன ?

இயேசு கிறிஸ்துவால் மாற்றமுடியாத பாவி என்று எவருமில்ல.இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால், மன்னிக்க முடியாத பாவம் எதுவுமில்லை எனவே, எவ்வளவு பெரிய கொடிய பாவியானாலும் மனந்திரும்ப முடியும், பாவமன்னிப்பைப் பெற்றுக் கொண்டு பரிசுத்தமாய் வாழமுடியும் என்ற நம்பிக்கையுள்ள வார்த்தைகளைக் கூறுங்கள். 

உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும் (#ஏசாயா 1:18).

எனவே, பாவங்களை விடமுடியாது என்று எவரும் தீர்மானிக்க வேண்டாம். மனந்திரும்பினால் கர்த்தர் மன்னிக்க வல்லவராயிருக்கிறார் என்று உறுதியாய் கூறுங்கள்.

2. கிறிஸ்தவர்கள் குறையுள்ளவர்கள்!

ஆத்தும ஆதாயம் செய்யும்போது நாம் சந்திக்கிற இன்னொரு வகையான மக்கள் விநோதமானவர்கள். 
கிறிஸ்தவர்களிடத்திலிருக்கிற குறைகளைக் கண்டுபிடித்து பேசி, நம்மை எதிர்த்து நிற்கிறவர்கள்.
எங்களுக்கு நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம்; உங்கள் கிறிஸ்தவர்களுக்கு போய் சொல்லுங்கள்  என்பார்கள். இவர்களுக்கு நாம் கூற வேண்டிய பதில் என்ன?

ஒருவர் கிறிஸ்தவராய் பிறப்பதினால் கிறிஸ்தவராவதில்லை. மனந்திரும்பி இரட்சிக்கப்படும் போது, விசுவாசிகளாகிறார்கள்.

ஒரு வகுப்பிலுள்ள 50 மாணவர்களில் 100 மார்க் எடுப்பவர்களும் உண்டு, பூஜ்ஜியம் மார்க் எடுப்பவர்களும் உண்டு.

அதேபோல, வேதத்தை கையில் வைத்துக் கொண்டு கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் பூஜ்ஜியமாய் இருக்கிறவர்கள் உண்டு. நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று நல்ல நிலையில் ஜீவிப்பவர்களுமுண்டு.
எனவே பூஜ்ஜியம் எடுத்தவர்களை நோக்காதிருங்கள். நூற்றுக்கு நூறு எடுப்பவர்களை மட்டும் கவனியுங்கள் என்று பொறுமையுடன் அவர்கள் சந்தேகம் நீங்கும்படி பதில் கூறுங்கள்.
3. தேவன் ஏன் தீமையை அனுமதிக்கிறார்? 

தங்கள் பார்வைக்கு ஞானிகளாயிருக்கிற சிலர் நமக்கு எதிர்படுவார்கள். அவர்கள் கேட்கிற கேள்வி என்னவென்றால், "தேவன் நல்லவரானால் ஏன் தீமையை அனுமதிக்கிறார்?

முதலாளி, தொழிலாளி என்ற வித்தியாசம் ஏன் இருக்கிறது? உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற பிரிவுகள் ஏன் காணப்படுகிறது? என்று கேட்பார்கள்.

இதற்கு நாம் பொறுமையுடன் அவர்களுக்கு விளக்கமளிக்கவேண்டும். இதற்கு வேதம் கூறும் பதில் என்ன? 
தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது (#I_தீமோத்தேயு 4:4 ). தேவன் ஆதாமை சிருஷ்டித்தபோது அவனை முதலாளியாகத்தான் படைத்தார்; பணக் காரனாகத்தான் படைத்தார்; சிறந்த பண்புகளுடன் தான் படைத்தார்.

ஆனால் மனிதனுடைய தவறான தெரிந்துக்கொள்ளுதலினால் தாழ்ந்தவனாக மாறிப் போனான். தெரிந்துக்கொள்ளும் பொறுப்பை தேவன் மனிதனுக்குள் வைத்திருக்கிறார்.

"நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சி வைக்கிறேன்; ஆகையால் , நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு , நீ ஜீவனைத் தெரிந்துகொள்வாயாக" ( உபாகமம் . 30:19 ). 

எனவே, இன்று நீங்கள் ஜீவனாகிய இயேசுவைத் தெரிந்துக் கொள்ளலாமே, ஆசீர்வாதமாகிய கர்த்தரை ஏற்றுக்கொள்ளலாமே என்று எடுத்துக் கூறுங்கள்.

நீங்கள் எதை தெரிந்துக் கொள்ளுகிறீர்களோ அதைப் பெற்றுக் கொள்வீர்கள் என்பதை விளக்குங்கள்.
4, நான் சன்மார்க்கன், மனந்திரும்பவேண்டிய அவசியமில்ல.

சன்மார்க்கரான ஜனங்கள் பொய் சொல்ல மாட்டார்கள், களவு செய்யமாட்டார்கள், கோவிலுக்கு செல்வார்கள், தர்மங்கள் செய்வார்கள்.

எனவே, எனக்கு இயேசு தேவையில்லை; எங்கள் ஊரின் ஒதுக்குப் புறத்தில் பாவிகள் அநேகர் உண்டு அவர்களுக்குப் போய் சொல்லுங்கள் என்பார்கள்.

இவர்களுக்கு வேதம் கூறும் பதில் என்ன ? அந்தப்படியே நீதிமான் ஒருவனாகிலும் இல்லை (#ரோமர் 3:10).
நல்லவன் ஒருவனுமில்லை, நீதிமான் ஒருவனும் இல்லை. எல்லாரும் வழிதப்பி ஏகமாய் கெட்டுப் போனோம் (ரோமர் 3:12) என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகிறது.

அதற்கு மேலாக தேவனுடைய நியாயத்தீர்ப்பு நாளில் என்ன சம்பவிக்கும் என்றால், இந்த உலகத்தில் வாழும் வாழ்க்கை தான், மரணத்திற்கு பின்பு வாழும் வாழ்க்கையைக் தீர்மானிக்கும்.
இங்கே பாவியாய் வாழ்ந்தால் பரலோகம் செல்ல முடியாது. பாவம் மன்னிக்கப்பட்டு இயேசுவின் இரத்தத்தினால் கழுவப்பட்டால் தான் விடுதலை உண்டு.

தொடர்ந்து பரிசுத்தமாய் வாழ தேவ பெலன் தேவை, எனவே அவரைச் சார்ந்து வாழ்வது அதிக முக்கியம்.

“சகல எண்ணங்களையும் சகல செய்கைகளையும் நியாயத்தீர்க்குங்காலம் இனி இருக்கிறபடியால் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார். (பிரசங்கி 3 : 17)

என்றுவேதம் கூறுகிறபடியால் சன்மார்க்கனும் மனந்திரும்ப வேண்டும், ஞானஸ்நானம் எடுக்க வேண்டும், பரிசுத்தமாய் வாழவேண்டும். அப்பொழுதுதான் நியாயத்தீர்ப்புக்குத் தப்பி நித்திய பரலோகத்தில் சேர்க்கப்படமுடியும் என்று கூறுங்கள்.

பரிசுத்த ஆவியானவர் உங்களோடிருந்து எதிர் பேசுகிறவர்கள் மனந்திரும்பும்படி கிருபைக்குள் நடத்துவார். எனவே தைரியமாய் சுவிசேஷம் அறிவிப்போம்; அதற்கான பலனை பரலோகத்தில் பெறுவோம்! ஆமென்!!!