அமைச்சரவை அமைச்சின் எண்ணிக்கையை 30 ஆக நிர்ணயிக்க வலியுறுத்து!

அமைச்சரவை அமைச்சின் எண்ணிக்கையை 30 ஆக நிர்ணயிக்க வேண்டும். இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சரவை அமைச்சர்களை காட்டிலும் அதிக சம்பளத்தையும், சலுகைகளையும் அரச அதிகாரிகள் பெறுகிறார்கள்.
செலவு அதிகம் என்பதற்காக அரச நிர்வாகத்தை முன்கொண்டு செல்ல முடியாமல் இருக்க முடியாது என ஆளும் தரப்பின் பிரதம கொறடாவும், வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
அரச நிர்வாகத்தை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதற்காகவே இராஜாங்க அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இராஜாங்க அமைச்சுக்களை நியமிக்காமல் அரச நிர்வாகத்தை வினைத்திறனாக நிர்வகிக்க முடியாது. ஒரு அமைச்சின் கீழ் பல அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள் உள்ளதால் அவற்றை ஒரு அமைச்சரால் மாத்திரம் நிர்வகிக்க முடியாது.
பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் இராஜாங்க அமைச்சு நியமிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியினர் குற்றஞ்சாட்டுகிறார்கள். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சி காலத்தில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்த வேளை மக்கள் விடுதலை முன்னணியினர் அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொண்டதை மறந்து விட்டார்கள்.
அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கான வரபிரசாதங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பொருளதார நெருக்கடியின் பாதிப்பு அனைவருக்கும் உண்டு. அமைச்சரவை அமைச்சின் எண்ணிக்கையை 30ஆக நிர்ணயிக்க வேண்டும் இல்லாவிடின் அரச நிர்வாகத்தில் பாதிப்பு ஏற்படும்.
அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களை காட்டிலும் அரச அதிகாரிகள் அதிக சம்பளத்தையும், விசேட வரபிரசாதங்களையும் பெறுகிறார்கள். குறுகிய அரசியல் நோக்கத்திற்காகவே அரசியல்வாதிகள் மீது மாத்திரம் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன என பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.



