அமெரிக்காவில் குழந்தைகளுக்கு பால் பவுடர் தட்டுப்பாடு; ஜோ பைடன் போர்க்கால நடவடிக்கை

அமெரிக்க நாட்டில் 12 மாதங்களுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு தாய்மார் தாய்ப்பாலை விட புட்டிப்பால் தருவதில்தான் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் இந்த புட்டிப்பாலுக்கான பால் பவுடரை தயாரிக்கிற நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான அப்பாட் நியூட்ரிசன், பாதுகாப்பு காரணங்களையொட்டி மூடப்பட்டுள்ளது. இதன்காரணமாக குழந்தைகளுக்கு பால் பவுடர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இது ஜனாதிபதி ஜோ பைடனுக்கு அரசியல் ரீதியில் அழுத்தங்களை ஏற்படுத்தி, தலைவலியாக மாறி இருக்கிறது.
இந்தநிலையில், இதில் இருந்து மீண்டு வருவதற்கு ஏற்ற வகையில் ஜோ பைடன் போர்க்கால அடிப்படையில் ஒரு நடவடிக்கையை எடுத்து அதிர வைத்துள்ளார்.
அதாவது குழந்தைகளுக்கான பால் பவுடர் உற்பத்தியை விரைவுபடுத்துவதற்கும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட விமானங்களுக்கும் பாதுகாப்பு உற்பத்தி சட்டத்தை அவர் பிரகடனம் செய்துள்ளார்.
இந்த சட்ட உத்தரவின்படி, குழந்தைகளுக்கான பால்பவுடர் உற்பத்தியாளர்களின் வினியோகஸ்தர்கள், உற்பத்தி தடைகளை அகற்றும் முயற்சியில் இந்த நிறுவனங்களின் ஆர்டர்களை மற்ற வாடிக்கையாளர்களுக்கு முன்பு நிறைவேற்ற வேண்டும். வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு குழந்தைகளுக்கான பால் பவுடர் கொண்டுவர வணிக விமானங்களை பயன்படுத்தவும் ஜோ பைடன் பாதுகாப்பு துறைக்கு அங்கீகாரம் வழங்கி உள்ளார்.



