தேசிய நினைவுச் சின்னமாக அரசிதழில் பதிவுசெய்யப்பட்ட செந்தோசாத் தீவின் சிலோசோ கோட்டை

செந்தோசாத் தீவின் சிலோசோ கோட்டை தேசிய நினைவுச் சின்னமாக அரசிதழில் பதிவுசெய்யப்பட வுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் மிகவும் சிறந்த முறையில் பாதுகாக்கப்பட்ட 19ஆம் நூற்றாண்டு கோட்டையாக சிலோசோ கோட்டை விளங்குகிறது என தேசிய மரபுடைமை வாரியம் நேற்று கூறியது. மேலும், நாட்டின் போர்க்காலத்தை நினைவுபடுத்தக்கூடிய முக்கியமான தளமாகவும் இது விளங்குவதாக வாரியம் குறிப்பிட்டது.
தற்போது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகத் திகழும் இந்தக் கோட்டை, 1878ஆம் ஆண்டு எழுப்பப்பட்டது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வர்த்தகத் துறைமுகமாக சிங்கப்பூரை உருவாக்குவதன் அவசியத்தை கவனத்தில் கொண்டு உத்திபூர்வ கடலோரக் கோட்டைப் பகுதிகளில் ஒன்றாக இக்கோட்டை கட்டப்பட்டது.
கடல்வழித் தாக்குதலிலிருந்து சிங்கப்பூரைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சிலோசோ, இரண்டாம் உலகப் போரின்போது சிங்கப்பூரின் மேற்குப் பகுதியிலிருந்து ஜப்பானியத் துருப்புகளை நோக்கிச் சுடுவதற்குப் பயன்படுத்தப்பட்டது.
அதன் விளைவாக, புலாவ் புக்கோம், புலாவ் சிபாரோக் ஆகியவற்றின் அருகில் இருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அழிக்கப்பட்டது. ஜப்பானியத் துருப்புகள் ஒரு வளமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க அந்நிலையம் அழிக்கப்பட்டது.
தேசிய மரபுடைமை வாரியத்தின் roots.gov.sg எனும் இணையவாசல் இவ்வாறு விவரிக்கிறது. 1963ஆம் ஆண்டுக்கும் 1966ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சிலோசோ கோட்டையை 10வது சிங்கப்பூர் கூர்கா துப்பாக்கிப் படைப் பிரிவு பயன்படுத்தியது. இந்தோனீசியாவைச் சேர்ந்த எதிரிகள் சிலர் சிங்கப்பூரின் செந்தோசா தீவிலும் கெப்பல் துறைமுகத்திலும் நுழையாதபடி பார்த்துக்கொள்ள அவர்கள் அங்கு நிலைகொண்டிருந்தனர்.
மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்



