3546 ஆண்டுகள் பழசு.. எகிப்தில் திறக்கப்பட்ட ராஜாவின் மம்மி..

எகிப்தில் 3546 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராஜா ஒருவரின் மம்மியை ஆராய்ச்சியாளர் கணினி மூலம் திறந்து பார்த்துள்ளனர்.
ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த மம்மி மிகப்பெரிய ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.
எகிப்தில் 100க்கும் அதிகமான ராஜா, ராணிகளின் மம்மிகள் பதப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. அங்கு இறந்த ராஜாக்கள், ராணிகள், பெரிய நபர்களின் உடல்களை புதைக்காமல், எரிக்காமல் அப்படியே பதப்படுத்தி மம்மியாக மாற்றி வைத்து இருப்பார்கள்.
அங்கு இருக்கும் பிரமிடுகளில் இதுவரை பல மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டு அது திறக்கப்பட்டு ஆராய்ச்சிகளும் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில்தான் எகிப்தில் 1881ல் கண்டறியப்பட்ட பாரோ ஆமென்ஹோடேப் என்று மன்னரின் மம்மி நேற்று திறக்கப்பட்டது. இந்த மம்மி மிகவும் சிதிலம் அடைந்த நிலையில் காணப்பட்டது. 3546 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மி ஆகும் இது. இதனால் மோசமான நிலையில் காணப்பட்டது.
இதை கைகளால் திறந்தால் அது உடைந்து நொறுங்கிவிடும். இதனால் கணினி உதவியுடன் எக்ஸ்ரே கதிர்கள் மற்ற சில கதிர்களின் உதவியுடன் இதை ஸ்கேன் எடுத்து உட்பகுதி எப்படி இருக்கும் என்று துல்லியமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் உட்பகுதி ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிய ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது .
அதன்படி பாரோ ஆமென்ஹோடேப் 35 வயது இருக்கும் போது மரணம் அடைந்த காரணத்தால் மம்மியாக்கப்பட்டுள்ளார். இவர் 169 செமீ உயரம் இருந்துள்ளார். அதேபோல் இவருக்கு இப்போது ஆரோக்கியமான பற்கள் இருந்துள்ளன. இவரின் உடலில் 30 வகையான தங்க, பவள ஆபரணங்கள் இருந்துள்ளன.
அதேபோல் பாரோ ஆமென்ஹோடேப்பிற்கு மிகவும் குறுகிய கன்னம் இருந்துள்ளது. மூக்கும் சின்னதாக நீண்டு இருந்துள்ளது. சுருட்டை முடி இருந்துள்ளது. ஆனால் இவரின் மரணத்திற்கான காரணத்தை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இவரின் உடல் 3546 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இவர் எகிப்தின் 18வது அரசர் ஆவார். இவருக்கு கீழ் நிறைய கோவில்கள் இருந்துள்ளன. இவரின் உடலில் இறந்த பின் பல காயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. இதில் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால் பாரோ ஆமென்ஹோடேப் உடலில் இருக்கும் காயங்கள் அவர் மம்மியாக்கப்பட்ட பின் பல நூறு வருடங்கள் கழித்து ஏற்படுத்தப்பட்டது.
இதன் அர்த்தம் இவரின் மம்மியை திறந்து சிலர் அதில் இருக்கும் தங்கங்களை திருட முயன்று உள்ளனர். அப்போது இந்த மம்மி உடலில் காயம் ஏற்பட்டுள்ளது. பாரோ ஆமென்ஹோடேப் உடலை ஆராயும் போது அதன் உடலில் இருந்த காயங்கள் எங்களுக்கு அதிர்ச்சியை தந்தது.. மம்மியை திறக்கும் போது இதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



