நாட்டில் உள்ள 50 பெறுமதி வாய்ந்த இடங்களை விற்பனை செய்ய அரசாங்கம் தயார்!

தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்காக நாட்டிலுள்ள பெறுமதிவாய்ந்த 50 இடங்களை வெளிநாடுகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் விற்பனை செய்வதற்கு அவசியமான தயார்ப்படுத்தல்களை அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அதன் ஓரங்கமாக 6 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறும் நோக்கில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதிக்கு முன்னதாக 500 மில்லியன் டொலர்களை மீளச்செலுத்தவேண்டியுள்ள நிலையில், அதற்கான நிதியைத் திரட்டிக்கொள்வதற்காக பரஸ்பர பரிமாற்றல் வசதியின்கீழ் இந்தியாவிடமிருந்து நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் தற்போதைய நெருக்கடியை எதிர்கொள்வதற்கான நாட்டிலுள்ள மிகவும் பெறுமதிவாய்ந்த 50 இடங்களை வெளிநாடுகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் விற்பனை செய்வதற்கு அவசியமான தயார்ப்படுத்தல்களை அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது. அதன் ஓரங்கமாக 6 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறும் நோக்கில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருக்கின்றன.
இவ்வாறு விற்பனை செய்யப்படவுள்ள இடங்களில் டி.ஆர்.விஜேவர்தன மாவத்தையிலுள்ள விமானப்படைக்குச் சொந்தமான இடம், நாரஹென்பிட்டி, உருகொடவத்த, தும்முல்ல உள்ளிட்ட சில பகுதிகளிலுள்ள இடங்கள், மக்கள் வங்கிக்குச் சொந்தமான இடம், சதொச களஞ்சியசாலை இடம், வெளிவிவகார அமைச்சு கட்டடம், கிரான் ஒரியென்டல் ஹோட்டல், கபூர் கட்டடம், ஹில்டன் ஹோட்டல் ஆகியவையும் உள்ளடங்குகின்றன. அதுமாத்திரமன்றி காலி, மாத்தறை, கண்டி, குருணாகல், யாழ்ப்பாணம் உள்ளடங்கலாக நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள பெறுமதிவாய்ந்த இடங்களும் சீனா, டுபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தியா, மலேசியா, சுவிஸ்லாந்து ஆகிய நாடுகளுக்கும் இலங்கையைச் சேர்ந்த சில நிறுவனங்களுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளன என தெரிவித்தார்



