நாடு கடந்து பாகிஸ்தானுக்குள் நுழைந்த அரிய வகை மான் பொதுமக்களால் மரணம்

இந்தியா மற்றும் ஆசிய காடுகளில் அரிய வகை சாம்பல் நிற மான்கள் காணப்படுகிறது. இந்த வகை மான்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளதால் இதை சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பு அழிந்து வரும் உயிரிழங்களில் சிவப்பு பட்டியலில் வைத்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் காணப்படும் இந்த வகை மான்கள் இருநாடுகளின் காடுகளிலும் சுற்றித்திரிகின்றன.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள காடுகள் வழியாக பாகிஸ்தான் நாட்டிற்குள் அரியவகை சாம்பல் நிற மான் ஒன்று சென்றுள்ளது. அங்கு வனப்பகுதியில் இருந்த காட்டுநாய்கள் இந்த மானை தாக்கியுள்ளன.
இதில் படுகாயமடைந்த மான் பாகிஸ்தானின் கசூர் நகரம் ஹவாலி படியானாவாலி கிராமம் அருகே சுற்றித்திரிந்துள்ளது. இதை பார்த்த கிராம மக்கள் சிலர் அந்த மானை பிடித்து சிகிச்சை அளித்துள்ளனர். அதேவேளை மான் காயமடைந்தது குறித்து வனத்துறை அல்லது மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு கிராமமக்கள் எந்த வித தகவலும் அளிக்கவில்லை.
காட்டு நாய்கள் தாக்கியதில் படுகாயமடைந்த அரியவகை சாம்பல் நிற மானுக்கு கிராம மக்கள் தவறுதலான சிகிச்சை அளித்துள்ளது. இதில், மான் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலை தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற கிராமத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள், உயிரிழந்த நிலையில் ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்த அந்த சாம்பல் நிற மானை கைப்பற்றினர். இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் நிலையத்தில் வனத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.



