குறைபாட்டுடன் பிறந்த குழந்தை - உலகிலேயே முதல்முறையாக வரலாறு காணாத வழக்கு
தன் அம்மாவின் டாக்டர் மீது வழக்கு போட்டார் அந்த 20 வயது இளம்பெண். ''கருவில் இருந்தபோதே எனக்குக் குறைபாடுகள் இருந்தன. கர்ப்பிணியான என் அம்மாவுக்கு டாக்டர் முறையாக அறிவுரை கூறியிருந்தால், நான் பிறந்திருக்கவே மாட்டேன். என்னைப் பிறக்க அனுமதித்ததே தவறு. பிறவிக் குறைபாடுகளுடன் நான் அவதிப்படுவதற்கு அந்த டாக்டரே பொறுப்பேற்க வேண்டும்'' என்பதே வழக்கு. நீதிமன்றம் இந்த வழக்கை ஏற்று, டாக்டர் அலட்சியம் காட்டி விட்டார் என்பதை உறுதி செய்திருக்கிறது. கோடிகளில் அவருக்கு நஷ்ட ஈடு கிடைக்கப் போகிறது.
பிறவிக் குறைபாடுகளுடன் தவிக்கும் ஒருவர் தன் அம்மாவின் டாக்டர் மீது வழக்கு போட்டு ஜெயித்திருப்பது அநேகமாக உலகிலேயே இதுதான் முதல்முறையாக இருக்கும். 'இந்த வழக்கு பலருக்கான கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறது' என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
இந்த வழக்கைப் போட்டவர் ஈவி டூம்பஸ் (Evie Toombes). பிரிட்டனைச் சேர்ந்த இவர், மாற்றுத்திறனாளி குதிரையேற்ற வீராங்கனை. இவருக்குப் பிறவியிலேயே Lipomyelomeningocele (LMM) என்ற குறைபாடு இருந்தது. Spina bifida என்றும் அழைக்கப்படும் இந்தக் குறைபாடு ஏற்பட்டவர்களுக்கு, கருவிலேயே முதுகுத்தண்டு முழு வளர்ச்சி அடையாது. இதனால் அவரால் எல்லோரையும் போல இயல்பாக இயங்க முடியாது. சில நாட்களில் 24 மணி நேரமும் மருத்துவமனை படுக்கையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். எதிர்காலத்தில் அவர் முழுமையாக வீல் சேரில் முடங்க வேண்டிய நிலை ஏற்படும்.
ஈவி டூம்பஸின் அம்மா கரோலின் கடந்த 2001-ம் ஆண்டு கர்ப்பமடைந்தார். ''அப்போது டாக்டர் பிலிப் மிட்செல் என்பவரிடம் என் அம்மா மருத்துவ ஆலோசனை பெற்றார். கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே ஃபோலிக் அமில மாத்திரைகளை முறையாக என் அம்மா சாப்பிட்டிருந்தால், எனக்கு இந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்காது. இதை டாக்டர் சொல்லவில்லை. சொல்லியிருந்தால், ஃபோலிக் அமில மாத்திரைகளைச் சாப்பிட்டுவிட்டு ஆரோக்கியம் மேம்பட்டதும் என் அம்மா கரு தரித்திருப்பார். எனக்கு பதிலாக ஆரோக்கியமான ஒரு குழந்தையை தாமதமாக என் அம்மா பெற்றெடுத்து இருப்பார். ஆனால் டாக்டர், 'ஆரோக்கியமான உணவை சாப்பிட்டால், ஃபோலிக் அமில மாத்திரை தேவையில்லை' என்று சொல்லிவிட்டார். கருவில் எனக்கு இருந்த பிறவிக் குறைபாடு பற்றியும் டாக்டர் சொல்லவில்லை'' என வழக்கில் குறிப்பிட்டிருக்கிறார் ஈவி.
குறைபாடுகளுக்கு மத்தியிலும் குதிரையேற்றப் பயிற்சி எடுத்து, விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்துவருகிறார் ஈவி. தற்போது நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துவரும் ஈவி, கண்ணுக்குத் தெரியாத உடல்நலப் பிரச்னைகள் குறித்து குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். தன்னைப் போல பிறவிக் குறைபாட்டுடன் குழந்தைகள் பிறப்பதைத் தடுக்க வேண்டும் என்பதே அவரது பிரசாரத்தின் நோக்கம். இந்த வழக்கையுமே அவர் இப்படிப்பட்ட விழிப்புணர்வுக்காகவே போட்டிருக்கிறார்.
வழக்கு லண்டன் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது டாக்டர் பிலிப் மிட்செல் ஆஜராகி, ''நான் போதுமான ஆலோசனை கொடுத்தேன்'' என்று வாதிட்டார். ஆனால், நீதிபதி ரோஸாலிண்ட் கோ அதை நிராகரித்துவிட்டார். ''டாக்டர் முறையான ஆலோசனை தந்திருந்தால், ஈவி டூம்பஸின் அம்மா அவரைப் பெற்றெடுத்திருக்க மாட்டார்'' என்று நீதிபதி தன் தீர்ப்பில் கூறியிருக்கிறார்.
ஈவிக்கு டாக்டர் எவ்வளவு நஷ்டஈடு தர வேண்டும் என்பது இன்னும் கணக்கிடப்படவில்லை. ஈவி தன் வாழ்நாள் முழுக்க சிகிச்சைக்காக செலவிட வேண்டிய தொகைக்கு ஈடாக அது இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
கர்ப்ப கால ஆலோசனையை சரிவரக் கொடுக்கத் தவறிய டாக்டர் மீது வழக்கு போட்டு நஷ்ட ஈடு பெறலாம் என்ற வகையில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாகக் கருதப்படுகிறது. பல நாடுகளும் இந்த வழக்கின் விளைவுகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
- விகட