பள்ளிக்கூடத்தில் மாணவன் துப்பாக்கிச்சூடு - 3 மாணவர்கள் உயிரிழப்பு

#United_States #School #Student #Death
Prasu
4 years ago
பள்ளிக்கூடத்தில் மாணவன் துப்பாக்கிச்சூடு - 3 மாணவர்கள் உயிரிழப்பு

அமெரிக்காவில் பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். வெறிச்செயலில் ஈடுபட்ட சக மாணவனை போலீசார் கைது செய்தனர்.

அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணமான மிச்சிகனில் உள்ள ஆக்ஸ்போர்டு நகரில் உயர்நிலை பள்ளி ஒன்று உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.


இந்த நிலையில் இந்திய நேரப்படி நேற்று காலை இந்த பள்ளிக்கூடம் வழக்கம் போல் இயங்கி கொண்டிருந்தது. மாணவர்கள் வகுப்புகளை கவனித்து கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த பள்ளிக்கூடத்தில் படித்து வரும் 15 வயது மாணவன் ஒருவன் திடீரென தனது பையில் இருந்து துப்பாக்கியை எடுத்து, சக மாணவர்களை சுடத் தொடங்கினான்.

இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பீதியும், பதற்றமும் உருவானது. மாணவர்கள் பலரும் தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்ள மேஜைகளுக்கு அடியில் சென்று ஒளிந்து கொண்டனர்.

இருந்தபோதிலும் அந்த மாணவன் தொடர்ந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே இருந்தான். இதில் மாணவ-மாணவிகள் பலரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து, அவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

அவர்களில் 14 மற்றும் 17 வயதான 2 மாணவிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு ஆசிரியர் மற்றும் 8 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

இதற்கிடையில், இந்த துப்பாக்கிச்சூடு குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பள்ளிக்கூடத்தை சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த மாணவனை தங்களிடம் சரணடைந்துவிடும்படி எச்சரித்தனர். அதன்படி அந்த மாணவன் துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு போலீசாரிடம் சரணடைந்தான்.

அதைத்தொடர்ந்து போலீசார் இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நபர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே டேட் மைர் என்கிற 16 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

மற்ற 8 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 2 பேரின் நிலைமை சற்று கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என்கிற அச்சம் நிலவுகிறது.

கைது செய்யப்பட்ட மாணவனிடம் துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, பள்ளிக்கூடத்தில் மீண்டும் இதுபோன்ற ஒரு தாக்குதல் நடக்கலாம் என வதந்திகள் பரவி வருவதால் பாதுகாப்பு கருதி மாணவர்கள் வீட்டிலேயே இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த டேட் மைர் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்று கூறப்படுகிறது. எனவே பள்ளிக்கூடத்தின் மைதானத்துக்கு அந்த மாணவனின் பெயரை சூட்ட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

அமெரிக்காவில் சமீப ஆண்டுகளாகவே துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளிக்கூடங்களில் அதிக அளவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடக்கின்றன.

இந்த ஆண்டில் மட்டும் பள்ளிக்கூடங்களில் 138 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாக புள்ளி விவர தகவல்கள் தெரிவிக்கின்றன.


 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!