"கோஹினூர் வைரம்" இந்தியா முதல் இங்கிலாந்து வரை.... முழு வரலாறு இதோ....!!
கோஹினூர் வைரம் இந்த பெயரைக் கேள்விப்படாதவர்கள் இல்லை. இந்தியாவின் வரலாற்று பொக்கிஷம், உலகின் மிகப்பெரிய வைரங்களில் ஒன்று, இங்கிலாந்து ராணியின் கிரீடத்தை அலங்கரிக்கும் விலைமதிப்பற்ற ஆபரணம் மற்றும் இன்னும் பல வரலாற்று பெருமைகளை பெற்ற ஒரு சிறிய கல் தான் இந்த கோஹினூர் வைரம். இந்த வைரத்தை இதுவரை யாரும் விற்பனை செய்ததும் இல்லை விலை கொடுத்து வாங்கியதும் இல்லை. கண்டுபிடிக்கப்பட்ட நாள் முதல் அந்த வைரம் ஒரு நபரிடம் இருந்து வேறு ஒரு நபரால் அபகரிக்கப்பட்டு கை மாறுகிறதே தவிர யாரும் இதனை விலை கொடுத்து வாங்கியது கிடையாது.

இந்தியாவுக்கு சொந்தம் என்று கூறப்படும் இந்த கோஹினூர் வைரம் முகலாயர்கள், சீக்கியர்கள் என பல கைகள் மாறி இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு எப்படி சொந்தமானது?
கோஹினூர் என்றால் பெர்சிய மொழியில் மலையின் ஒளி என்று பொருள். இந்த ஒளியால் வேட்டையாடப்பட்ட ராஜாக்களின் வரலாறும் அது பயணித்த விதமும் பயங்கரமானது. இந்த கோஹினூர் வைரத்திற்கு மிகப்பெரிய வரலாறு இருந்தாலும் ஆதாரமில்லாத வதந்திகளும் செவி வழி செய்திகளும் தான் அதிகமாக இருக்கிறது. 5000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பண்டைய சமஸ்கிருத நூலில் கோஹினூர் பற்றிய குறிப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
அதன் பின் சுமார் 4300 வருடங்களுக்கு முன்பு கோஹினூர் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. 13ஆம் நூற்றாண்டில் ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே கொல்லூர் எனும் கிராமம் கிராமத்தில் இருந்த சுரங்கத்தில் கோஹினூர் வைரம் வெட்டி எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால் இன்னும் சிலர் கோஹினூர் கண்டெடுக்கப்பட்ட போது இந்தியா உட்பட உலகில் எங்குமே வைர சுரங்கங்கள் இல்லை என்று கூறுகின்றனர். 1720களில் பிரேசில் நாட்டில் தான் முதல் வைர சுரங்கம் அமைக்கப்பட்டது. அதற்கு முன்பு அல்பேனியா கருப்பு வைரத்தை தவிர வேறு எந்த பிரசித்தி பெற்ற வைரங்கள் தொடர்பான குறிப்புகளும் இருந்தது இல்லை.

எப்படி கோஹினூர் வைரம் கண்டெடுக்கப்பட்டது?
13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குண்டூர் மசூலிப்பட்டினம் இடையே அமைந்திருந்த ஆற்றின் கரையோரத்தில் கோஹினூர் வைரம் கண்டெடுக்கப்பட்டதாக சில வரலாற்று அறிஞர்கள் வாதிடுகிறார்கள். அழிவின் விளிம்பில் இருந்த ஆறு பூமியின் கீழ் புதைந்திருந்த பல்வேறு அரிய வகை கற்களை மேற்பரப்புக்கு கொண்டு வந்ததாக அறிஞர்கள் கூறுகின்றனர். பச்சை, சிவப்பு, நீலம் என வித்தியாசமாக இருந்த கற்களில் பிரகாசமான ஒளி பிரதிபலித்து கண்களை கூச செய்ததில் வெள்ளைக் கல்லும் ஒன்று. அதுதான் கோஹினூர் வைரம். அப்போது அதுக்கு கோல்கொண்டா வைரம் என்று பெயர் சூட்டப்படுகிறது.
பிரகாச கல்லின் சாபம்
ஒரு இருட்டு அறையில் வைக்கப்பட்ட விளக்கின் ஒளியை அந்த வெள்ளை கல் உமிழ்ந்தபோது அறை முழுதும் பிரகாசித்தது என்று கூறப்படுகிறது. வைரம் கண்டுபிடிக்கப்பட்ட ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளை சாளுக்கியர்கள் காகதியர்கள் ஆண்டு வந்தனர். கோஹினூர் வைரத்தை கண்டெடுத்த சாமானியன் ஒருவன் மன்னரிடம் கொடுத்து சன்மானம் பெற்றுக்கொண்டான். கோஹினூர் வைரத்தை பார்த்ததும் மக்களிடையே வதந்திகள் பரவ தொடங்கியது. இந்த வைரம் யாரிடம் இருக்கிறதோ அவரால் உலகத்தையே சொந்தம் கொண்டாட முடியும். ஆனால் ஏராளமான துரதிர்ஷ்டங்கள் அனுபவிப்பான் என்று செய்திகள் பரவத் தொடங்கியது.
இதன்மூலம் சபிக்கப்பட்ட வைரமாக பார்க்கப்பட்டது கோஹினூர். இதனால் வைரத்தை பெற்ற காகதிய மன்னன் அதனை அம்மன் கோவில் ஒன்றுக்கு தானமாக வழங்கினார். அந்த காலத்தில் அரண்மனை கருவூலங்களில் சேமித்து வைக்கப்பட்ட செல்வங்களை விட கோவில்களில் பலமடங்கு செல்வங்கள் இருந்தது. அப்போதுதான் டெல்லியை ஆண்ட மன்னர்களில் மிகவும் வலிமை மிக்கவரான அலாவுதீன் தென்னிந்திய படையெடுப்பு மேற்கொண்டார். தென்னிந்திய அரசுகளை அடக்கி ஒடுக்க நினைத்த அலாவுதீன் தனது தளபதியின் தலைமையில் பெரும் படையை அனுப்பி வைத்தார்.
கோஹினூரின் மதிப்பு
தேவகிரி , மைசூர் என ராஜ்ஜியங்களை வீழ்த்தி ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்தார் மாலிக் கபூர். கோட்டைகள் அனைத்தும் அவர்களால் சூறையாடப்பட்டன. அதோடு கோவில்களும் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட செல்வங்களை மாலிக் கபூர் டெல்லிக்கு எடுத்துச் சென்றார். அவற்றில் கோகினூர் வைரமும் ஒன்று. நாட்டு மக்கள் காணும்படி கொள்ளையடித்துக் கொண்டு வரப்பட்ட பொருட்கள் வைக்கப்பட்டது. ஆனால் காகதிய தேசத்தில் கூறப்பட்டது போன்று சில நாட்களிலேயே அலாவுதீன் நோய் உற்றார். அதோடு சில மாதங்களிலேயே அதாவது 1316 ஆம் வருடம் அலாவுதீன் உயிரிழந்தார்.
அவரின் உயிரிழப்புக்கு சபிக்கப்பட்ட வைரம் தான் காரணம் என்று பலர் கூறுகின்றனர். அதன் பிறகு 200 வருடங்களுக்கு கோஹினூர் தொடர்பான எந்த குறிப்புகளும் இல்லை. டெல்லியை ஆண்ட சுல்தானிடம் சென்று பின்னர் பல கைகள் மாறி 15ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முகலாய பேரரசர் பாபரின் கைக்கு வந்தது கோகினூர் வைரம். கோகினூர் வைரத்தின் உறுதியான வரலாற்று குறிப்பு 1526 ஆம் வருடத்தில் இருந்துதான் தொடங்குகிறது. அப்போது பாபரின் வைரம் என்று அழைக்கப்பட்டது கோகினூர் வைரம். அதன் ஒளி வீச்சை கண்ட பாபர் அதன் மதிப்பை அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டபோது உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் ஒருநாள் உணவுக்கு ஆகும் தொகை தான் இந்த வைரத்தின் மதிப்பு என அவரிடம் கூறப்பட்டது.
வைரம் கண்டுபிடிக்கப்பட்டது முதல் பட்டை தீட்டாமல் இருந்ததால் அதனை அழகுபடுத்த பாபர் நினைத்தார். எனவே 293 கேரட் எடை இருந்த வைரத்தை பட்டை தீட்ட பொற்கொல்லன் ஒருவனிடம் ஒப்படைத்தார். அதனை பொற்கொல்லன் என்ன செய்தார் என்பது தெரியாது 793 காரட் இருந்த வைரம் 186 கேரட் ஆக குறைந்து இருந்தது. கிட்டத்தட்ட 600 கேரட் வைரம் சேதாரம் ஆனது. இந்த கோஹினூர் வைரம் பாபரிடம் நிலைக்கவில்லை. அடுத்த சில ஆண்டுகளில் பாபரை எதிர்த்த இப்ராஹீமின் கைக்கு சென்ற கோஹினூர் வைரம் மன்னன் விக்ரம ஜித்திடம் சென்றது. இந்த காலகட்டத்தில் தான் புகழ்பெற்ற பானிபட் போர் ஆரம்பமானது.
போரில் விக்ரம ஜித் மரணம் அடைந்ததால் அவரது குடும்பம் ஆக்ரா அரண்மனைக்கு தஞ்சம் புகுந்தது. பாபரின் மகன் ஹுமாயூன் ஆக்ராவை கைப்பற்றிய போது விக்ரம ஜித் குடும்பத்தினர் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள கோஹினூர் வைரத்தை ஹுமாயூன்க்கு கொடுத்தனர். வைரத்தைப் பரிசாகப் பெற்ற ஹூமாயூன் விக்ரம ஜித் குடும்பத்தினரை ஆக்ரா கோட்டையில் இருந்து வெளியேற்றி சித்த ஊரிலுள்ள மேவாருக்கு கடத்தவும் அனுமதித்தார். ஆனால் அனைவரையும் போன்று ஹுமாயூன் கோகினூர் வைரத்தைப் பார்த்து வியந்து போகவில்லை.
மயிலாசனத்தில் கோஹினூர் வைரம்
முகலாயர்களின் பலர் தங்கத்திற்கு அடுத்ததாக பவளம் போன்ற நவரத்தின கற்களையே அதிகமாக விரும்புவர். இதனால் முகலாயர்களுக்கு பரிசளிப்பவர்கள் அதிகம் பவளங்கள் வைரங்கள் போன்றவற்றையே கொடுப்பார்கள். இந்த நவரத்தினங்களை வைத்து ஷாஜஹான் அழகான சிம்மாசனம் ஒன்றை தயார் செய்ய நினைத்தார். அந்த சிம்மாசனம் மயிலாசனம் என்று அழைக்கப்பட்டது. 1500 கிலோ தங்கத்தில் உருவாக்கப்பட்ட அந்த ஆசனத்தில் பவளம், வைடூரியம், கோமேதகம் என விலை உயர்ந்த அரிய கற்கள் பொறிக்கப்பட்டன. அவற்றில் கோஹினூர் வைரம் மிக முக்கியமானது.
1635 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் தேதி அந்த சிம்மாசனத்தில் சாஜஹான் அமர்ந்தார். சிம்மாசனத்தை உருவாக்க செய்யப்பட்ட செலவு 4 தாஜ்மஹால் கட்டுவதற்கு செய்யப்படும் செலவுக்கு சமம். இந்த காலகட்டத்தில் தான் தாஜ்மஹாலும் கட்டப்பட்டு வந்தது. முகலாய வம்சத்தின் வீழ்ச்சி முகமது ஷா ரங்கீலா காலகட்டத்தில் துவங்கியது. முன்னோர்களைக் காட்டிலும் ஆடம்பரத்தை விரும்பிய முகமது ஷா வாழ்நாள் முழுவதையும் கேளிக்கைகளில் கழித்தார். காலை வேளைகளில் யானைகளின் சண்டையை வேடிக்கை பார்த்து மகிழ்வார். மதிய நேரத்தில் விருந்துகளும் கேளிக்கைகளும் என்றால் மாலையும் இரவும் கலைஞர்களின் நடனம் இசை என பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும்.
அந்த காலகட்டத்தில் காபூல் முதல் வங்காளம் வரை பரவிக் கிடந்த முகலாய ஆட்சி கட்டுப்படுத்தும் தலையாய இடமாக இருந்த டெல்லி அந்த காலகட்டத்தில் உலகிலேயே மிகப் பெரிய நகரங்களின் வரிசையில் முக்கியமானதாக திகழ்ந்தது. லண்டன் மற்றும் பாரிஸ் நகரின் மக்கள் தொகையை சேர்த்தால் கூட டெல்லியின் மக்கள் தொகையை விட குறைவாகவே இருக்கும். மேலும் உலகில் உள்ள செல்வ செழிப்புமிக்க நகரங்களிலேயே டெல்லி திகழ்ந்ததால் அன்னியர்கள் டெல்லியை குறி வைக்கத் தொடங்கினார்கள். அதற்கு ஏற்றார்போல் மது கேளிக்கை போன்றவற்றிற்கு அடிமையாகி முகமது ஷா பலவீனமானது போல் அவரின் சாம்ராஜ்யமும் பலவீனமாகக் துவங்கியது.
1739 ஆம் ஆண்டு டெல்லியில் மீது பாரசீக மன்னன் நாதிர் ஷா படையெடுத்தார். அவரிடம் ஆப்கானிஸ்தான் மற்றும் பாரசீகத்தை பூர்வீகமாக கொண்ட ஐம்பத்தி ஐயாயிரம் போர் வீரர்கள் மட்டுமே இருந்தார்கள். அதேநேரம் முகமது ஷாவிடம் லட்சக்கணக்கான வீரர்கள் இருந்தார்கள் ஆனால் போர் வியூகம் அமைப்பதில் பாரசீக மன்னன் தெளிவாக இருந்தார். ஆனால் இதனை சாதாரணமாக எடுத்துக் கொண்ட முகமது ஷா எதிரிப்படை நூறு மைல் தொலைவில் வந்த பிறகுதான் தனது படையைத் திரட்டினார். முகலாய படையில் 10 லட்சம் பேர் இருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவர்களின் படையில் அனைவரும் தேர்ச்சி பெற்ற வீரர்கள் கிடையாது.
இந்தியாவிலிருந்து வெளியேறிய கோஹினூர்
எதிரி படையின் மீது இருந்த பயத்தால் தனது அரண்மனையில் இருந்த புலவர்கள், கலைஞர்கள் என அனைவரையும் படையில் சேர்த்துக் கொண்டார் முகமது ஷா. டெல்லி எங்கும் மரண ஓலங்கள் ஒழிக்க 50 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. முகலாய அரசிடமிருந்து பாரசீக மன்னன் கொள்ளையடித்த செல்வங்கள் அனைத்தும் 700 யானைகள் 4000 ஒட்டகங்கள் 12 ஆயிரம் குதிரைகள் மூலமாக கொண்டு செல்லப்பட்டது. அதன் மதிப்பு தற்போதைய நிலவரப்படி ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் ஆகும். உலக வரலாற்றில் யுத்தத்தில் வெற்றி பெற்று கொள்ளையடித்துச் செல்லப்பட்டதில் மிகப்பெரிய தொகையாக இன்றுவரை பார்க்கப்படுவது இதுதான். இதில் ஷாஜஹானின் மயிலாசனம் அடங்கும்.
இந்த போரினால் கோஹினூர் வைரம் சொந்த நாட்டைவிட்டு போகத் தொடங்கியது. இந்த வைரத்திற்கு பாரசீக மன்னன் நாதிர் ஷா தான் கோஹினூர் என்று பெயர் சூட்டினார். கோஹினூர் என்றால் மலையின் ஒளி என்று பொருள். தன் நாட்டிற்கு செல்லும் வழியில் இதன் பிரகாசத்தை பார்த்த நாதிர் ஷா அதன் மதிப்பை அறிந்து கொள்ள விரும்பினார். அப்போது அவரது மனைவிகளில் ஒருவர் கோஹினூர் வைரத்தை சோதித்து பார்த்து ஒரு வலிமையான மனிதன் நான்கு கற்களை எடுத்து வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும், மேற்கிலும் எரிந்துவிட்டு ஐந்தாவதாக ஒரு கல்லை விண்ணை நோக்கி எறிந்த பின் அந்த ஐந்து கற்களுக்கும் இடைப்பட்ட பகுதியில் தங்கத்தால் நிரப்பினாலும் அதன் மதிப்பு கோஹினூர் வைரத்திற்கு இணையாகாது எனும் அழகான வர்ணனை நாதிர் ஷாவிடம் கூறினார்.
விலகாத சாபம்
கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கொள்ளையடித்து சென்ற நாதிர்ஷா வுக்கு இந்த விளக்கம் கர்வத்தை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் கர்வம் தலைக்கேறியதால் போகும் வழியில் கண்ணில் தென்படுபவர்களை எல்லாம் கொன்று குவிக்கத் தொடங்கினார். காலம் செல்ல செல்ல அவரது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டு படையில் உள்ள வீரர்களையே கொல்லத் துணிந்தார். இதனால் அவர் மீது பெரும் அதிருப்தி ஏற்பட்டது. நாதிர் ஷாவின் படையில் இரண்டு பிரிவினர் இருந்தனர் ஒன்று ஆப்கானிஸ்தானை பூர்விகமாகக் கொண்டவர்கள் மற்றொன்று ஈரானை பூர்வீகமாக கொண்டவர்கள் இதில் ஈரானை சேர்ந்த படைவீரர்கள் சிலர் இந்தியாவிலிருந்து செல்வங்களை ஈரானுக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே நாதிர் ஷாவை படுகொலை செய்தனர்.
கோஹினூர் கண்டெடுக்கப்பட்ட போது கூறப்பட்ட அதன் சாபத்தின் பற்றிய தெளிவான குறிப்புகளும் இங்கு இருந்துதான் துவங்குகிறது. சபிக்கப்பட்ட கோஹினூர் வைரத்தை கவர்ந்து சென்றதால் தான் நாதிர் ஷா கொல்லப்பட்டதாக இன்றளவும் வதந்திகள் உலவுகின்றன. நாதிர் ஷா மரணத்தைத் தொடர்ந்து பாரசீக படையில் கலகம் வெடித்தது. நாதிர் ஷாவை கொன்ற ஈரானியப் படைகள் அவரது குடும்பம் மற்றும் வாரிசுகளையும் கொல்ல நினைத்தனர். ஆனால் அவர்களிடம் இருந்து ஆப்கானிஸ்தான் படையினர் நாதிர் ஷாவின் குடும்பத்தினரை பத்திரமாக மீட்டனர். இதற்கு நன்றிக்கடனாக ஆப்கான் படைத்தளபதி முஹம்மத் ஷாவுக்கு நாதிர் ஷாவின் மனைவி கோஹினூர் வைரத்தை பரிசாக வழங்கினார்.
நாடு திரும்பிய கோஹினூர்
அதன்பின் முஹம்மத் ஷா ஆப்கானிஸ்தானில் ராஜ்ஜியத்தை அமைத்து தனிக்காட்டு ராஜாவாக ஆனார். கோஹினூர் வைரத்தின் சாபம் அவரையும் விடவில்லை சில ஆண்டுகளிலேயே அவரது முகத்தில் கொப்பளங்கள் ஏற்பட்டு கோரமானது. அதனை மறைக்க இரும்பினால் ஆன முகமூடியை அணிந்து அவர் வாழ்ந்தார். அவரது இந்த நிலைக்கு கோஹினூர் வைரத்தின் சாபமே காரணம் என்று கூறப்பட்டது. காலங்கள் உருண்டோட ஆப்கானிஸ்தான் நாட்டில் நிகழ்ந்த பல போர்களில் ரத்த ஆறுகளுக்கு மத்தியில் ஒவ்வொரு ஆட்சியாளரின் கையில் இருந்தும் இன்னொருவருக்கு கோகினூர் வைரம் மாறியது. பல போர்களைப் பார்த்த கோஹினூர் வைரம் கடைசியாக இந்தியாவில் ரஞ்சித் சிங் அரசாண்ட போது அவரால் மீட்கப்பட்டது.
1813 இல் கோஹினூர் வைரத்தை மீட்ட ரஞ்சித் சிங் அதனை மிகவும் நேசித்தார். ஒருவழியாக இந்தியாவின் கவுரவம் மீட்கப்பட்டதாக அவர் பெருமிதம் கொண்டார். லாகூரை உள்ளடக்கிய பஞ்சாபை ஆண்ட ரஞ்சித் சிங் தன் தந்தையுடன் பத்தாவது வயதிலேயே முதல் போர்க்களத்தை பார்த்தவர். பஞ்சாபின் சிங்கம் என்று அழைக்கப்பட்ட ரஞ்சித் சிங்கை மக்கள் போற்றினர். கோஹினூர் வைரத்தை ரஞ்சித் சிங் மீட்டது முதல் அடுத்த 20 ஆண்டுகளுக்கு அவரது வலது கை மணிக்கட்டில் தஞ்சம் அடைந்திருந்தது கோகினூர் வைரம். மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பிடித்திருந்த ரஞ்சித் 1837 ஆம் வருடம் மரணமடைந்தார்.
5 வயது சிறுவனிடம் ஆட்சி
ரஞ்சித் சிங் மறைந்த பிறகு அவருக்கு சொந்தமான கோகினூர் வைரத்தை இன்றைய ஒடிசாவில் உள்ள ஜெகநாதர் கோவிலுக்கு தானமாக வழங்க வேண்டுமென்று அவரது ஆசையை உயிலில் எழுதியிருந்தார். ஆனால் அவரது ஆசை நிறைவேறவில்லை ரஞ்சித் சிங் மறைவைத் தொடர்ந்து அவரது மூத்த மகன் பஞ்சாபை ஆள துவங்கினார். ஆனால் அரசியல் சர்ச்சைகளில் இவரும் இவருக்குப் பின் அரசரான பஞ்சாப் சிங்கத்தின் மற்றொரு மனைவியின் மகனான மன்னர் ஷேர் சிங் என்பவரும் அடுத்தடுத்து ஐந்து ஆண்டுகளுக்குள் கொலை செய்யப்பட்டு இறந்தனர். இவ்வாறு அடுத்தடுத்து ரஞ்சித் சிங்கின் அரசு வாரிசுகள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக இறந்துவிட ஆளும் பொறுப்பை ஏற்றார் இளவரசர் துலீப் சிங்.
பஞ்சாபின் மன்னராக துலிப் சிங்கிற்கு முடிசூட்டிய போது அவருக்கு ஐந்து வயது தான் ஆகியிருந்தது. அவரது தாயார் இவர் சார்பாக ஆட்சி புரிந்தார். இதற்கு அரசியின் சகோதரரும் உதவி செய்தார். ஆனால் அரசி அதிகாரிகளுடன் முறை தவறிய உறவு வைத்திருந்ததாக புரளி கிளம்பியதால் ராணுவம் கட்டுப்பாடின்றி களத்தில் இறங்கியது. இந்த சூழலில் பஞ்சாப் அரசில் நிலவிய குழப்பங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இந்தியாவின் பெரும் பகுதிகளை தங்கள் ஆளுகைக்குள் வைத்திருந்த பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பெனி முடிவு செய்தது. 1849 ஆம் வருடம் பிரிட்டிஷாரின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக பஞ்சாப் அறிவிக்கப்பட்டது.
பிரிட்டிஷின் சூழ்ச்சி
சூழ்ச்சியின் உச்சமாக தோல்வியுற்ற நாட்டின் மன்னன் தனது மதிப்புமிக்க செல்வங்களை இங்கிலாந்து பேரரசி விக்டோரியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பஞ்சாப் சிங்கம் ரஞ்சித் சிங் தனது கையில் அணிந்திருந்த உலகப்புகழ் பெற்ற கோஹினூர் வைரம் பதித்த அணிகலன் விக்டோரியா அரசியிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் கையெழுத்திட்ட மன்னர் துலிப் சிங்கிற்கு வயது பத்து மட்டுமே. இந்த சதித்திட்டத்தில் தனி அக்கறை எடுத்துக் கொண்டு அதை வெற்றிகரமாக செயல்படுத்தியவர் டல்ஹௌசி.
கோஹினூர் வைரம் கைமாறிய விவகாரத்தில் பின்னாட்களில் கிழக்கிந்திய கம்பெனிக்கு சிக்கல் ஏற்படாமல் இருக்க இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டு இங்கிலாந்திற்கு நாடுகடத்தப்பட்டார் துலிப் சிங். ஆங்கிலேயர் கொள்கைப்படி ஆங்கிலமும் கிறிஸ்தவ மதமும் அவருக்கு போதிக்கப்பட்டது சீக்கிய மதத்திற்கு எதிராக துலிப் சிங்கின் முடி வெட்டப்பட்டு வளர்க்கப்பட்டார். இந்திய மன்னர்களில் கிறிஸ்தவ மதத்தை தழுவிய முதல் மன்னன் துலிப் சிங் ஆவார். இதற்காக ஆண்டுதோறும் அவருக்கு சன்மானம் வழங்கி அரசு விருந்தினர் தகுதியும் அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் கோஹினூர் வைரத்தின் சாபம் பிரிட்டிஷார் பக்கமும் தொடர்ந்ததாக கூறப்பட்டது.
இங்கிலாந்து ராணியின் மாற்று சிந்தனை
இந்தியாவிலிருந்து கடல் வழியாக கோஹினூர் வைரத்தை லண்டன் கொண்டு சென்றபோது கப்பலில் இருந்த ஆங்கிலேயர்கள் வாந்தி, மயக்கம், மலேரியா என கடும் நோய்களால் அவதியுற்றதாக கூறப்படுகிறது. ஒரு வழியாக வைரம் ராணி விக்டோரியாவின் கையில் ஒப்படைக்கப்பட்ட போது பாபர் நாதிர் ஷா போல் அதன் மதிப்பை கேட்டு தெரிந்து கொள்ளாமல் அதன் வரலாற்றை அறிந்துகொள்ள விரும்பினார் விக்டோரியா. அவரது ஆணைக்கிணங்க கோஹினூர் வரலாற்றை ஆராய்ந்த ஆய்வாளர்கள் கோஹினூர் வைரமானது ஒரு சாபத்தை கொண்டு வருவதாகவும் அதை வைத்திருந்த அனைத்து ராஜாக்களும் ஒன்று அவர்களின் சிம்மாசனத்தை இழந்ததாகவும் அல்லது மற்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால் கோஹினூர் வைரத்தை ஒரு பெண் வைத்திருந்தால் மட்டுமே அதன் சாபம் பலிக்காது என ராணி விக்டோரியாவிடம் தெரிவித்தனர். இதனால் பிரிட்டிஷார் விழிப்புடன் இந்த சாபத்தில் இருந்து விலகி அதனை பெண்கள் மட்டுமே அணிய வேண்டும் என்று முடிவு செய்தனர். இதனால் ராணி விக்டோரியாவிடம் வழங்கப்பட்ட கோஹினூர் வைரத்தை தனது மணிமகுடத்தில் பாதிக்கும் அளவிற்கு வெட்டி அதில் பதித்து அணிந்து கொண்டார். இதனால் 186 கேரட் இடையில் இருந்த கோகினூர் வைரம் 105 கேரட் ஆக குறைந்தது. ராணி விக்டோரியாவுக்குப் பிறகு அவரது மூத்த மகனான ஏழாம் எட்வேர்ட் மன்னனின் ராணியான அலெக்சாண்ட்ரியாவின் மகுடத்தில் அது பிரகாசித்தது.
பின்னர் விக்டோரியாவின் பேரனான ஐந்தாம் ஜார்ஜ் மன்னனாக அவரது மனைவி முதலாம் எலிசபெத் மகுடத்தில் 1937இல் அது ஒளி வீசியது. இங்கிலாந்து அரச குடும்பத்தின் தற்போதைய ராணியான இரண்டாம் எலிசபெத்தின் தாயார் தான் முதலாம் எலிசபெத். 2002ஆம் ஆண்டு எலிசபெத் மறைந்தபோது அவரது சவப்பெட்டியின் மீது கோஹினூர் வைரம் பதித்த மகுடம் வைக்கப்பட்டது. லண்டனில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட லட்சக்கணக்கான மக்கள் அதனை பார்த்தனர். கோஹினூர் வைரத்தை அனைவரும் கடைசியாகப் பார்த்த தருணம் அதுதான்.
கோஹினூரை மீட்கும் முயற்சி
பின்னர் கோஹினூர் பாதிக்கப்பட்ட ராணியின் மணிமகுடம் இரண்டாம் எலிசபெத் வசம் ஒப்படைக்கப்பட்டது. இப்பொது லண்டனில் உள்ள அரச குடும்பத்திற்கு சொந்தமான அருங்காட்சியகத்தில் கோகினூர் வைரம் வைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் காலனி ஆட்சி நடந்தபோது பல்வேறு நாடுகளிலும் பிரிட்டிசார் கொள்ளையடித்த அரிய வகை விலை உயர்ந்த பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 1947-ல் இந்தியா சுதந்திரம் அடையவே நமது நாட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட செல்வங்களை பற்றி நாட்டு மக்கள் சிந்திக்கத் தொடங்கினர். ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த காலத்தில் கோஹினூர் வைரத்தை மீட்க முயற்சிகள் செய்தாலும் அது பலிக்கவில்லை.
இந்தியாவின் மதிப்புமிக்க பெருமைமிக்க கருவூலம் கோஹினூர் வைரம் என்றாலும் அதை இங்கிலாந்திடம் இருந்து மீட்பதில் சிக்கல்கள் இருக்கிறது. கோஹினூர் வைரத்தை மீட்பது ஒரு நாட்டின் அருங்காட்சியகத்தில் இருக்கும் கற்சிலைகளை மீட்பது போன்று சாதாரணமான செயல் இல்லை. இங்கிலாந்து அரசியின்ன் மணி மகுடத்தில் பதிக்கப்பட்ட வைரத்தை பெயர்த்தெடுத்து கொடுக்கச் சொல்வது நடக்காத செயல். 2010ல் இந்தியா வந்த அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கோஹினூர் வைரம் இங்கிலாந்திற்கு தான் சொந்தம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
காலனி ஆதிக்கத்தின் போது கொண்டு சென்ற பொருட்களை ஒவ்வொரு நாட்டினருக்கும் திருப்பிக் கொடுத்தால் அரச குடும்பத்திற்கு சொந்தமான அருங்காட்சியகத்தில் ஒரு பொருளும் இருக்காது என்றும் கூறினார் இந்தியா மட்டுமல்ல பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளும் கோஹினூர் வைரத்தை சொந்தம் கொண்டாடி வருகின்றன. தாலிபான் கூட தங்களுக்கு சொந்தமான கோஹினூர் வைரத்தை ஒப்படைக்க வேண்டுமென ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் கோஹினூர் வைரத்தை சொந்தம் கொண்டாடி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளின் வாதம் பிரதிவாதங்கள் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.