இந்தியா - சீனா உறவு கரடுமுரடாக இருக்கிறது: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
சீனா தொடர்ந்து ஒப்பந்தங்களை மீறி வருவதால், அந்நாட்டுடனான உறவு கரடு முரடாக இருக்கிறது என நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற ஜெய்சங்கர் கூறியதாவது:இரு தரப்பு உறவில் நாம் எங்கு உள்ளோம்; எது சரியாக இல்லை என்பதில் சீன தலைவர்களுக்கு சந்தேகம் இருக்கும் என நான் நினைக்கவில்லை. சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயை சந்தித்தேன். நான் தெளிவாகவும், நியாயமாகவும், புரிந்து கொள்ளக்கூடிய வகையில் பேசியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதை அவர்கள் கேட்டிருப்பார்கள் என நம்புகிறேன்.
இந்தியா - சீனா உறவு கரடுமுரடாக இருக்கிறது. இதற்கு இரு தரப்பு ஒப்பந்தங்களை சீனா தொடர்ச்சியாக மீறியதே காரணம். இதற்கு அவர்களிடம் உரிய காரணம் இல்லை. நமது உறவை அவர்கள் எங்கு எடுத்து செல்கின்றனர் என்பது குறித்து நாம் யோசிக்க வேண்டியது உள்ளது. இதற்கு அவர்கள் தான் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.