அமேசானில் கஞ்சா இலைகள் கடத்தல்..! திடுக்கிடும் தகவல்!
ஆயிரம் கிலோ கஞ்சா இலைகளை விசாகப்பட்டினத்திலிருந்து மூன்று மாநிலங்களுக்கு அமேசான் வணிக தளத்தை பயன்படுத்தி மோசடி கும்பல் ஒன்று கடத்தி உள்ளது. இது தொடர்பாக, அமேசான் நிறுவனம் மீது போதைப்பொருள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆமதாபாத் நகரத்தை மையமாக கொண்டு செயல்படும் ஒரு நிறுவனம், கஞ்சா இலைகளை இனிப்பு துளசி இலைகள் என்று காண்பித்து அமேசான் வணிக தளத்தில் விற்பனை செய்துள்ளது.
இதுகுறித்து மத்தியபிரதேச போலீசாருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று துப்பு கிடைத்தது. உடனே, அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மத்தியபிரதேச மாநிலம் பிண்ட் மாவட்டத்தில் உள்ள கோஹத் நகரத்தில் இருக்கும் சாலையோரக் கடை ஒன்றிலிருந்து அமேசானிலிருந்து பொருட்களை பொதிந்து அனுப்பும் பார்சல் ஒன்றை பறிமுதல் செய்தனர். அதனுடன் சேர்த்து விசாகப்பட்டினத்திலிருந்து டெல்லி வரை பயணம் செய்ததற்கான இரண்டு விமான பயணச்சீட்டுகளையும் கைப்பற்றினர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த பொருள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், போலீஸ் விசாரணைக்கு முழுவதுமாக ஒத்துழைப்போம் என்றும் அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமேசான் தளத்தை பயன்படுத்தி கஞ்சா இலைகளை கடத்திய மோசடி நபர்களை மத்திய பிரதேச போலீசார் சிறை பிடித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மத்திய பிரதேச உள்துறை மந்திரி நரோட்டம் மிஷ்ரா இன்று கூறியுள்ளதாவது,
“ஆன்லைன் வணிகத்திற்கு என வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படவில்லை. ஆனால், மத்தியபிரதேசத்தில் வகுக்கப்படும். அமேசான் நிறுவன அதிகாரிகளை விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இல்லையெனில், நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.
ஆனால், போலீசார் சம்மன் அனுப்பியும் இதுவரை அமேசான் நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை என்று பிண்ட் போலீஸ் அதிகாரி மனோஜ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.