41 ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இடம்..
பூமியில் பல்வேறு மர்மமான மற்றும் விசித்திரமான இடங்கள் உள்ளன.. அந்த வகையில் நரகத்தின் நெருப்பு என்று அழைக்கப்படும் ஒரு இடம் உள்ளது.
நரகத்தின் நெருப்பு என்ற வார்த்தையை கதைகளில் நாம் கேட்டிருப்போம். ஆனால் நரகத்தின் நெருப்பு என்பது உண்மையில் பூமியில் இருக்கிறதா?
இந்த கேள்விக்கு ஆம் என்பதே பதில். பூமியில் பல ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இடம் ஒன்று உள்ளது. இதன் அருகில் சென்றால் சத்தம் வரும் அளவுக்கு நெருப்பு எரிகிறது. இது நரகத்தின் நெருப்பு என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த நெருப்பு பல ஆண்டுகளாக எப்படி எரிகிறது? அதன் பின்னணியில் உள்ள ரகசியம் என்ன? இந்த நெருப்பின் ரகசியம் என்ன.? இதுகுறித்து பார்க்கலாம்..
நரகத்தின் நெருப்பு. பேய்களின் மூச்சு. மர்மமான தீ.. என்ற பல பெயர்களால் இது அறியப்படுகிறது. இந்த இடம் துர்க்மெனிஸ்தானின் கராகும் பாலைவனத்தில் உள்ளது. இந்த தீ, பல ஆண்டுகளாக எரிவது மர்மமாக உள்ளது. இது நரகத்திற்கான கதவு என்றும் அழைக்கப்படுகிறது. இது தர்வாஞ்சா கிராமத்தில் உள்ள ஒரு குகைக்கு அருகில் காணப்படும் இயற்கை எரிவாயு பள்ளம் ஆகும். எனினும் இந்த எரியும் பள்ளம் எவ்வாறு முதலில் கண்டுபிடிக்கப்பட்டது என்பதற்கான பதிவுகள் இல்லை.
துர்க்மெனிஸ்தான் சோவியத் ஆட்சியின் கீழ் இருந்தபோது 1971 ஆம் ஆண்டு இந்த நெருப்பு பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. புவியியலாளர்கள் எண்ணெய் தோண்டலுக்காக இந்த பகுதியில் துளையிட்ட போது அங்கிருந்து மீத்தேன் வாயு வெளியேற தொடங்கியதாக கூறப்படுகிறது.. அந்த வாயு பரவுவதை தடுக்க அவர்கள் அங்கு தீ வைத்ததாகவும், அன்றிலிருந்து இன்று வரை அந்த தீ தொடர்ந்து எரிந்து வருவதாகவும் நம்பப்படுகிறது.
2013 இல் நேஷனல் ஜியோகிராபிக் சேனல் தொடரான Die Trying எபிசோடில் இந்த பள்ளம் இடம்பெற்றது. கனடா நாட்டை சேர்ந்த ஆய்வாளர் ஜார்ஜ் குரோனிஸ் என்பவர் தான் இந்த 100 அடி ஆழமுள்ள தீக்குழியில் இறங்கிய முதல் நபர் ஆவார்.
ஜார்ஜ் கோர்டோயிஸ் இதுகுறித்து பேசிய போது " இங்கிருந்து மிகப்பெரிய அளவிலான தீ வெளிப்படுகிறது. கீழே நிறைய நெருப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன். இது பகல், இரவு என எல்லா நேரத்திலும் எரிந்து கொண்டே இருக்கிறது. அதன் பக்கத்தில் நின்றால் நெருப்பின் சத்தம் தெளிவாக கேட்கிறது. இந்த பள்ளம் பாலைவனத்தின் நடுவே எரிமலை போல் காட்சியளிக்கிறது." என்று தெரிவித்தார். 2013 இல் துர்க்மெனிஸ்தான் ஜனாதிபதி குர்பாங்குலி பெர்டிமுஹமெடோ இதை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.