உலக நீரிழிவு நோய் தினம் 14-11-2021

#history
உலக நீரிழிவு நோய் தினம் 14-11-2021

மக்களிடையே அதிகம் பேசப்படும் ஒரு நோய், நீரிழிவு நோய்….முழுமையாக கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், இந்த சர்க்கரை வியாதியைக் கட்டுப்பாட்டில் சம்பந்தப்பட்டவர் வைத்திருக்கமுடியும். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இந்த நோய் அறியப் பட்டிருந்தாலும் இதற்கான உறுதியான சிகிச்சை முறை 20-ம் நூற்றாண்டில் தான் கண்டறியப்பட்டது.

அதுவரை இந்நோய் ஆபத்தான நோயாகவே கண்டறியப்பட்டது. 20-ம் நூற்றாண்டில் தான் இன்சுலின் கண்டறியப்பட்டது. இன்சுலினை கண்டுபிடித்த ‘பேண்டிங்க் அண்ட் பெஸ்ட்’ என்ற விஞ்ஞானியின் பிறந்த நாளான நவம்பர் 14-ந் தேதி “உலக நீரிழிவு நோய்” தினமாக 1991-ம் ஆண்டு முதல் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி, கொண்டாடி வருகிறது.

பிரசாரங்கள்:

ஐ.நா. சபை, நீலநிறத்திலான வளையம் அடையாளச் சின்னமாக வெளியிட்டு இந்த நோய் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துகிறது. சர்வதேச ரீதியில் இந்த நீரிழிவு நோய் குறித்த பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. வயது வித்தியாசம், இன பேதம் என தயவு தாட்சண்யம் பார்க்காமல் இன்றைய நாளில் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு சுகாதார அமைப்புகளும் மருத்துவமனைகளும், தன்னார்வத்  தொண்டு நிறுவனங்களும், நீரிழிவு நோய் அமைப்புகளுடன் இணைந்து இத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு தருகின்றன. வானொலி, தொலைக்காட்சி என தொடர்பு சாதனங்கள் இதற்கு ஒத்துழைப்பு தருகின்றன.

இன்சுலின் அதிகமாவதால் நீரிழிவு நோய்:

இன்சுலின் என்ற முக்கிய ஹார்மோன் உற்பத்தியாவதிலும், அதன் செயல்பாடுகளில் குறை நேர்வதாலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது. உலக அளவில் இந்தியா தான் நீரிழிவு நோயில் முதல் இடத்தில் உள்ளது. பொதுவாக, நீரிழிவு நோய் என்பதை பற்றிய விளக்கங்களை நோயாளிகள் மட்டுமில்லாது அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பெற்றோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் 80% பிள்ளைகளுக்கும் இந்த நோய் வரும் என்பது ஆய்வு கருத்து.

தடுப்பதில் அதிக கவனம் செலுத்துவோம்:

மரபணு குறைபாடு, சுற்றுப்புறம் மற்றும் உடலின் சுய எதிர்ப்பு தன்மை இவற்றால் வரும் நீரிழிவு நோய்க்கு எவ்வித தடுப்பும் உபயோகிக்கப்படாது. மனிதகுலத்தில் எண்ணற்ற நோய்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டாலும் மனிதனின் உடலை சிறிது சிறிதாக பாதிப்புக்கு உள்ளாக்குவது, நீரிழிவு நோய்தான். ஆராய்ச்சிகள் பல செய்யப்பட்டாலும், ஒவ்வொரு முறையும் புதுபுது தகவல்கள் கூறப்படுவதால், நாம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த என்னதான் வழிமுறைகளை எடுத்துக் கொண்டாலும், அதனை வராமல் தடுப்பதிலேயே அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.