இஸ்லாம் அழைக்கிறது

Keerthi
2 years ago
இஸ்லாம் அழைக்கிறது

கடவுள் பற்றி மக்கள் மத்தியில் பல கருத்துக்கள் நிலவுகின்றன.

சிலர் கடவுள் இல்லை என்கின்றனர். மற்றும் சிலர் கோடான கோடி கடவுள்கள் இருப்பதாக நம்புகின்றனர். வேறும் சிலர் மனிதர்களில் சிலரைக் கடவுளின் அவதாரம் என்கின்றனர். இன்னும் சிலர் மனிதர்களில் சிலரையே கண் கண்ட கடவுளாக வழிப்பட்டு வருகின்றனர்.

இஸ்லாம் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்று கூறுவதுடன் பல தெய்வ நம்பிக்கையைப் பலமாக எதிர்க்கின்றது. அத்துடன், மனிதன் கடவுளாகவும் முடியாது. கடவுள் மனித அவதாரம் எடுப்பதும் இல்லை எனக் கூறி கடவுளின் பெயரால் அரங்கேற்றப் படும் அத்தனை மூடநம்பிக்கைகளையும் அடியோடு மறுக்கின்றது.

கடவுள் இல்லை என்று கூறுபவர்கள் அதைப் பகுத்தறிவு வாதம் என்று கூறுகின்றனர். இந்தப் பிரபஞ்சம் அனைத்தும் தானாகவோ, தற்செயலாகவோ உருவானது என்பது எப்படி பகுத்தறிவாகும்? படைப்பினங்கள் இருப்பதே படைப்பாளன் ஒருவன் இருக்கின்றான் என்பதற்கான பலமான ஆதாரமாகும்.

நுணுக்கமான இந்தப் பிரபஞ்ச ஒழுங்குகளும் அற்புதமான மனித படைப்பும் உயிரினங்களின் அற்புதமான வடிவமைப்பும் மிகப்பெரும் ஆற்றல்மிக்க படைப்பாளன் ஒருவன் இருக்கின்றான் என்பதற்கான எடுத்துக் காட்டுக்களேயாகும்.

இந்த உண்மையை உணர்த்தும் விதத்தில் அல்குர்ஆன் பல இடங்களில் கேள்விகளை அடுக்குகின்றது.

‘எப்பொருளுமின்றி அவர்கள் படைக்கப் பட்டனரா? அல்லது அவர்கள் படைக்;கின்றவர்களா?’

‘அல்லது அவர்கள் வானங்கள் மற்றும் பூமியை  படைத்தனரா? மாறாக, அவர்கள் உறுதியாக நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.’ (52:35-36)

‘நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?’

‘அதை நீங்கள் படைக்கின்றீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?’ (56:58-59)

‘நீங்கள் பயிரிடுவதைப் பார்த்தீர்களா?’

‘அதை நீங்கள் முளைப்பிக்கின்றீர்களா? அல்லது நாம் முளைப்பிக்கின்றோமா?’ (56:63-64)

இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதை மறுப்பவர்களைப் பார்த்து குர்ஆன் இப்படி கேள்வி எழுப்புகின்றது.

‘நிச்சயமாக வானங்களும், பூமியும் இணைந்தே இருந்தன. நாமே அவ்விரண்டையும் பிரித்தோம் என்பதையும்  உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரில் இருந்து நாமே உருவாக்கினோம் என்பதையும் நிராகரித்தோர் அறியவில்லையா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?’ (21:30)

வானம், பூமி அனைத்தும் ஒன்றாக இருந்து பின்னர் வெடித்துச் சிதறியதன் மூலமாகவே வௌ;வேறாக மாறின எனும் ‘பிக்பேன்’ என்ற விஞ்ஞான உண்மை 1400 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒருவரால் கூற முடியாததாகும். வானம், பூமியைப் படைத்தவனால் மட்டுமே கூறக் கூடிய இந்த உண்மையை குர்ஆன் கூறி நீங்கள் நம்பிக்கை கொள்ள மாட்டீர்களா! என அழைப்பு விடுக்கின்றது.

இதே வேளை, இஸ்லாம் பலதெய்வ நம்பிக்கையை மறுக்கின்றது. இந்தப் பிரபஞ்சத்தில் பல தெய்வங்கள் இருந்தால் பிரபஞ்சம் அழிந்து போயிருக்கும் என்று அல்குர்ஆன் கூறுகின்றது.
‘(வானம், பூமி ஆகிய) இவ்விரண்டிலும் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருப்பின் இவையிரண்டும் சீர்குலைந்திருக்கும். அர்ஷுடைய இரட்சகனாகிய அல்லாஹ் அவர்கள் வர்ணிப்பதை விட்டும் தூய்மையானவன்.’
(21:22)

ஒரு பஸ்ஸிற்கு இரண்டு ஓட்டுனர்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

இலங்கையை ஒரு கடவுள் படைத்தார் இந்தியாவை இன்னொரு கடவுள் படைத்தார் பாகிஸ்தானை மற்றொரு கடவுள் படைத்தார்…  இப்படி பலரும் கொஞ்சம் கொஞ்சமாகப் படைத்த அனைத்தும் சேர்ந்துதான் உலகமாக உருவானது என்று கூற முடியுமா? நிச்சயமாக முடியாது!

அகில உலகையும் ஒரேயொரு கடவுள்தான் படைத்தான். அந்த ஒரு கடவுள் எல்லாவிதமான பலவீனங்களை விட்டும் பரிசுத்தமானவன் என்றே இஸ்லாம் கூறுகின்றது.

இன்று மக்கள் பல தெய்வங்களை வழிப்படுகின்றனர். அந்தப் போலி தெய்வங்கள் பற்றிக் கூறப்படும் கதைகளைக் கேட்டால் சராசரி மனிதர்களை விட அவர்கள் மோசமாக நடந்தவர்களாகச் சித்தரிக்கப்படுகின்றனர்.

பெண்களைக் கேலி, கிண்டல் செய்பவர்கள், அவர்கள் குளிக்கும் போது அவர்களின் ஆடைகளைத் திருடி சில்மிஷம் செய்பவர்களெல்லாம் கடவுள்களாகச் சித்தரிப்பதாலேயே பலரும் கடவுள் இல்லை என்ற மோசமான நிலைப்பாட்டிற்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டனர். இஸ்லாம் உண்மையான ஒரே இறைவனை ஏற்கச் சொல்லும் அதே நேரம், போலிக் கடவுள்களை முற்றாக மறுக்கச் சொல்கின்றது.

தன்னைக் கடவுளின் அவதாரம் எனச் சொல்லிக் கொள்ளும் அனைவரும் ஏமாற்றுப் பேர்வழிகள் என்று கூறும் அதேவேளை, மனிதன் கடவுளாகவும் முடியாதுÉ கடவுள் மனித அவதாரம் எடுத்து தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளவும் மாட்டான் என இஸ்லாம் கூறுகின்றது.

கடவுள் அவதாரம் என்ற பெயரில் உலாவரும் பலரும் ஆன்மீகத்தின் பெயரில் மக்களை ஏமாற்றி பணத்தையும், பெண்களின் கற்பையும் சூறையாடி வருவதை அன்றாடம் கண்டு வருகின்றோம்.

இஸ்லாம் கடவுள் கோட்பாட்டை மிகத் தெளிவாக வலியுறுத்தும் மார்க்கமாகும்.

கடவுள் என்பவன் பிள்ளைகளைப் பெற்றவனாக இருக்கமாட்டான். கடவுளுக்கு குழந்தைகள் இல்லை என இஸ்லாம் கூறுகின்றது. கடவுளுக்கு குழந்தை உண்டு என்று சொன்னால் அந்தக் குழந்தையும் கடவுளாக இருக்கும். அந்தக் குழந்தைக்கும் குழந்தை பிறக்கும், அதுவும் கடவுளாக இருக்கும்… இப்படிப் போனால் மனிதப் படைப்பை விட கடவுள்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும். அது அறிவுக்குப் பொருந்தாததாகும்.

கடவுள் பிறந்தவராகவும் இருக்க முடியாது. பிறப்பவனும் இறப்பவனும் கடவுளாக இருக்க முடியாது என இஸ்லாம் கூறுகின்றது. இதுவே அறிவுக்குப் பொருத்தமான கடவுள் கொள்கையாகும். தன்னைப் படைத்த உண்மையான கடவுளை அறிந்து ஏற்பது ஒவ்வொரு மனிதனதும் அடிப்படைக் கடமையாகும். இதோ இஸ்லாம் மிகச் சுருக்கமாக அதன் இறைக் கோட்பாட்டைக் கூறுகின்றது கேளுங்கள்!

‘அல்லாஹ் ஒருவன்தான் என (நபியே!) நீர் கூறுவீராக!

‘அல்லாஹ் (எவ்வித) தேவையுமற்றவன்.

‘அவன் (எவரையும்) பெறவும் இல்லைளூ அவன் (எவருக்கும்) பிறக்கவும் இல்லை.

‘மேலும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. ‘
(112:1-4)

மனிதனால் வடிவமைக்கப்பட்ட கற் சிலைகளையும் கற்பனையில் உருவான கதாபாத்திரங்களையும், எம்மைப் போன்ற சராசரி மனிதர்களையும் வணங்கும் வழிமுறையில் இருந்து உண்மையான ஒரே இறைவனை மட்டும் வணங்கி வழிபட இஸ்லாம் உங்களை அன்போடு அழைக்கின்றது…

சாதிகள் இல்லையடி பாப்பா என பாடினான் ஒரு புலவன். ஓன்றே குலம் ஒருவனே தேவன் என்பதும் ஆன்றோர் வாக்காகும். இருப்பினும் சாதி வேறுபாடு ஒழிந்ததாக இல்லை. உலக வரலாற்றில் இரத்தக் கறை படிந்த பக்கங்கள் பலவற்றில் சாதி, இன, மொழி, மத, பிரதேச வேறுபாடுகளுக்கு முக்கிய இடம் உண்டு. மனிதன் மனிதனை அடிமைப்படுத்தக் கண்டுபிடித்த ஒன்றுதான் உயர் சாதி, தாழ் சாதி வேறுபாடு. இதை மதத்தின் பெயரிலேயே மனித மனங்களில் பதித்தனர் மத புரோகிதர்கள்.

மனிதனைப் பிறப்பின் அடிப் படையில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் எனப் பிரிப்பதை எதிர்த்து அதை ஒழித்த ஒரேயொரு மார்க்கம் இஸ்லாம்தான். சாதி வேறுபாடுகள் மக்கள் மத்தியில் போதிக்கப்பட்டதால் ஏராளமான சாதிக் கலவரங்களும், படுகொலைகளும் அன்றாடம் நடந்தேறி வருகின்றன. சாதி வெறியின் உச்சகட்டமாக கீழ் சாதி மக்கள் எனத் தாழ்த்தப்பட்ட மக்கள் செருப்புப் போடுவது, மேலங்கி போடுவது, பொதுக் குளங்களில் குளிப்பது…. என்று பல உரிமைகள் பறிக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்பட்டனர். மனித இனம் வெட்கித் தலைகுனியும் அளவுக்கு கீழ்சாதிகள் மீது மலசலம் கழிக்கப்பட்டு, அவர்களின் ஆடைகள் அவிழ்க்கப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ளனர்.

இஸ்லாம், முழு மனித சமூகமும் ஒரு ஆண்-பெண்ணிலிருந்து பிறந்தவர்கள் என்று கூறி மனிதப் படைப்பின் அடிப்படை – மூலம் ஒன்றே என்று சாதி வேறுபாட்டுக்கு சம்மட்டி அடி கொடுக்கின்றது.

    ‘மனிதர்களே! உங்களை ஒரே ஆத்மாவிலிருந்து படைத்த உங்கள் இரட்சகனை அஞ்சிக் கொள்ளுங்கள். அவன் அதிலிருந்து அதன் துணைவியைப் படைத்து, அவையிரண்டிலிருந்தும் அதிகமான ஆண்களையும் பெண்களையும் பரவச்செய்தான். எவனைக் கொண்டு நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கேட்டுக் கொள்வீர்களோ அந்த அல்லாஹ்வையும் மேலும், இரத்த உறவுகளை(த் துண்டித்து நடப்பதை)யும் அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.’ (4:1)

    முஸ்லிம், முஸ்லிம் அல்லாத அனைவரையும் விழித்தே இந்த வசனம் பேசுகின்றது.

மனித இனத்தில் குலங்களும் கோத்திரங் களும் இருப்பதை இஸ்லாம் மறுக்கவில்லை. ஆனால், சாதி குலங்களின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு கற்பிப்பதை இஸ்லாம் மறுக்கின்றது.

    ‘மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்து, நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் மிகப் பயபக்தியுடையவரே, நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிக கண்ணியத்திற் குரியவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்ளூ  நுட்பமானவன்.’ (49:13)

    இஸ்லாம் சாதி வேறுபாட்டை வெறும் கோட்பாட்டு ரீதியில் மட்டுமன்றி நடைமுறை ரீதியிலும் ஒழித்துக் கட்டியது. முஸ்லிம்கள் ஒரு தலைமையைப் பின்பற்றி அணியணியாக நின்று ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுகை நடாத்த வேண்டும். அப்படித் தொழும் போது பள்ளிக்கு முதலில் வருபவர் முதல் வரிசையில் நிற்பார். ஆண்டியானாலும் அரசனானாலும் அவர்களுக்கென தனி இடம் பள்ளிகளில் ஒதுக்கப்படமாட்டாது. தோளோடு தோள் சேர, காலோடு கால் சேர நின்று தொழ வேண்டும். சாதி வேறுபாடு இல்லாமல் இன, நிற, மொழி வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்று போல் சமமாக நிற்பார்கள்.

முஸ்லிம்களின் புனிதத் தளத்தில் கஃபாவே முதலிடமானது. இங்கே முஸ்லிம்களாக இருக்கும் எவரும் உள்ளே செல்வார். அங்கு ஏற்றத் தாழ்வுகள் எதுவும் இருக்காது. இவ்வாறு நடைமுறை ரீதியில் சாதி வேறுபாடு ஒழிக்கப்பட்டது.

இவ்வாறே நிற வேறுபாடும் மக்கள் மத்தியில் எற்றத்தாழ்வை ஏற்படுத்தி வருகின்றது. இஸ்லாம் இதையும் ஒழித்துவிட்டது. நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் பின்னர் கஃபா எனும் புனிதத் தளத்திற்குள் நுழையும் போது தனது வலமும் இடமுமாக அழைத்துச் சென்றார்கள். அவ்விருவரும் நீக்ரோ கருப்பர்கள்! அடிமையாகவும், அடிமைப் பெண்ணின் புதல்வர்களாகவும் இருந்தவர்கள். ஒருவர் பிலால்(ரழி) மற்றவர் உஸாமா(ரழி). நபி(ஸல்) அவர்கள் வெள்ளையரை விட கறுப்பரோ, கறுப்பரை விட வெள்ளையரோ சிறந்தவர் அல்லர் என்று கூறி வெள்ளை, கறுப்பு நிற வேறுபாட்டை ஒழித்தார்கள்.

இவ்வாறே மொழி வேறுபாடுகள் மூலமாக கலவரங்களும் போர்களும் மூண்டுள்ளன. இஸ்லாம் மொழியை ஒரு ஊடகமாக மட்டுமே பார்க்கின்றது. அறபிகள் மொழிப் பெருமை பேசுபவர்களாக இருந்தார்கள். அறபு அல்லாத மொழி பேசுபவர்களை அவர்கள் கேவலமாகக் கருதி வந்தனர்.

நபி(சல்) அவர்கள், ‘அறபு மொழி பேசுபவர்கள் அறபு அல்லாத மொழி பேசுபவரை விட எந்த விதத்திலும் சிறந்தவரல்லர். அவ்வாறே, அறபு அல்லாத மொழி பேசுபவர் அறபு மொழி பேசுபவரை விட எந்த விதத்திலும் சிறந்தவர் அல்லர். இறையச்சத்தின் மூலமே மனிதன் உயர்வைப் பெறுவான்’ எனப் பிரகடனப்படுத்தினார்கள்.

    ‘இன்னும், வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், உங்களது மொழிகளும் உங்களது நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் அறிவுடையோருக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன.’ (30:22)

    மனிதர்கள் பல நிறத்தையும் தோற்றத்தையுமுடையவர்களாக இருப்பதும் மொழிகள் வேறுபட்டிருப்பதும் ஒரு அத்தாட்சி என இந்த வசனம் கூறுகின்றது. இந்த அடிப்படையில் இஸ்லாம் மொழி வேறுபாட்டையும் நிற வேறுபாட்டையும் வன்மையாகக் கண்டிக்கின்றது.

ஏனைய சிந்தனைவாதிகள் சிலர் இன, மொழி வேறுபாடுகளைக் கண்டித்திருந்தாலும் அந்தக் கொள்கையின் அடிப்படையில் வாழும் மக்களை உருவாக்குவதில் தோல்வியடைந் துள்ளனர். ஆனால், இஸ்லாம் சாதி வெறியையும், வேறுபாட்டையும் ஒழிப்பதில் வெற்றி காண்கின்றது. இதனால்தான் பெரியார் போன்ற பேரறிஞர்கள் இன இழிவு நீங்க இஸ்லாம் ஒன்றே மாமருந்து என்று கூறினர்.

உலகில் சாதி, நிற வேறுபாட்டிற்கு எதிராக சிலர் குரல் கொடுத்திருப்பார்கள். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சாதி வேறுபாட்டை எதிர்த்திருப்பார்கள். கறுப்பர்கள் சிலர் வெள்ளை-கறுப்பு வேறுபாட்டை எதிர்த்திருப்பார்கள். ஆனால், முஹம்மது நபியவர்கள் ‘குறைஷிக் குலம்’ என்ற உயர் குலத்தில் பிறந்து சாதி வேறுபாட்டை எதிர்த்தார்கள். வெள்ளையராக இருந்து கொண்டு வெள்ளை-கறுப்பு வேறுபாடு வேண்டாம் என்றார்கள். அறபு மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட அவர்கள் அறபி-அஜ்னபி பாகுபாடு கூடாது என்றார்கள்.

ஆணாக இருந்த அவர் பெண்ணுரிமைக் காகப் போராடினார். ஆஸ்திகராகவும், மத போதகராகவும் இருந்த அவர் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடினார். ஆன்மீகவாதியான அவர் ஆன்மீகத்தின் பெயரில் நடக்கும் கொடுமைகளை எதிர்த்தார். இப்படியான ஒரு புரட்சியாளரை விட வேறு யாரையும் வரலாறு சந்தித்திராது. சாதி வேறுபாடுகளுக்கு சமாதி கட்டி சமத்துவ சகோதரத்து சமூகத்துடன் சங்கமிக்க இஸ்லாம் உ(ள்ள)ங்களை அழைக்கின்றது!

குற்றங்களைக் குறைக்கும் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள்

மனித இனம் வெட்கித் தலை குனியத் தக்க குற்றச் செயல்கள் இன்று அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. தந்தையால் கற்பழிக்கப்படும் மகள்கள், சகோதரனால் சீரழிக்கப்படும் சிறுமிகள், சிறுவர் சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள், பகிரங்கமாக பலர் பார்த்துக் கொண்டிருக்க நடக்கும் பலாத்காரங்கள், கொடூரமான கொலைகள், பட்டப்பகலில் படுகொலை, கொள்ளை, திருட்டு… என குற்றச் செயல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. உலக நாடுகள் அனைத்திலும் குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படுகின்றது. குற்றவாளிகளும் மனிதர்களே! அவர்கள் திருந்தி வாழ வாய்ப்பளிக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர்.

கற்பழிப்புக் குற்றத்திற்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், கொலை செய்தவனுக்கும் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் இஸ்லாம் கூறுகின்றது. குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். இவ்வாறு கடுமையான தண்டனை அளிக்கப்பட்டால்தான் குற்றங்களைக் குறைக்கலாம் என இஸ்லாம் கூறுகின்றது.

இஸ்லாத்தின் இந்த நிலைப்பாடு தொடர்பில் உலக அறிஞர்கள் முரண்பட்ட இரட்டை நிலைப்பாட்டை எடுக்கின்றனர்.

கொடூரமான குற்றம் நடக்கும் போது மட்டும் கொதித்துப் போய் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று குமுறுகின்றனர்.

சாதாரண நிலைக்கு வந்த பின்னர் இஸ்லாமிய சட்டம் கொடூரமானது, கல் மனம் கொண்டது என்று கொக்கரிக்கின்றனர். இது அவர்களின் முரண்பட்ட மனநிலைக்கு நிதர்சனமான சான்றாகத் திகழ்கின்றது.

இஸ்லாமிய சட்டங்களை விமர்சிக்கும் போது கொலைக் குற்றவாளியைக் கொன்றால் கொல்லப்பட்டவனின் உயிர் மீண்டும் வரவா போகின்றது என வாதிடுகின்றனர்.

கொலைக் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை கொடுத்தால் மட்டும் கொல்லப்பட்டவனின் உயிர் மீண்டும் வந்துவிடுமா என்ன? குற்றங்களுக்கு தண்டனை வழங்குவதின் உண்மையான நோக்கம் என்ன என்பது பற்றி கொஞ்சமாவது சிந்தித்தால் இப்படிக் கேட்கமாட்டார்கள். குற்றங்களுக்குத் தண்டனை வழங்குவதன் மூலம் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும். அவன் மீண்டும் இது போன்ற தவறைச் செய்யும் துணிச்சலைப் பெறக் கூடாது. குற்றவாளிக்குக் கொடுக்கப்படும் தண்டனையைப் பார்த்து மக்கள் பயப்பட்டு குற்றம் செய்யக் கூடாது என்ற உணர்வைப் பெற வேண்டும். இஸ்லாமிய குற்றவியல் சட்டம் இதைத்தான் செய்கின்றன.

கற்பழிப்பு, கொலை, கொள்ளை, திருட்டு, போன்ற குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகளை இஸ்லாம் வழங்குகின்றது. இதன் மூலம் குற்றங்கள் குறைந்த ஒரு சமூக சூழல் உருவாகின்றது. குற்றவாளிகள் சிறை செல்வதால் அங்கிருந்து யாரும் திருந்தி வருவதில்லை. பல குற்றவாளிகள் ஒன்றாகக் கூடிப் பழகி மீண்டும் மீண்டும் புதுப் புது முறைகளில் குற்றம் செய்யும் உணர்வினைப் பெறுகின்றனர். சிறை என்பது பெரிய தண்டனையாக அமைவதில்லை. திரும்பத் திரும்ப சிறை செல்வது குற்றவாளிகளின் கூடுதல் தகைமையாகவே மாறியுள்ளது.

குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படாததால் சாதாரண மக்கள் குற்றம் செய்யும் சூழ்நிலைக்கும், சட்டத்தைக் கையில் எடுக்கும் மனநிலைக்கும் உள்ளாகின்றனர். கற்பழித்தவன் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டால் சிறை சென்று மீண்டு வருவான். எனவே, நாம் அவனை அடித்துக் கொன்றுவிடுவோம் என்ற மனநிலைக்கு மக்கள் வருகின்றனர். மக்களிடமிருந்து குற்றவாளிகளைப் பாதுகாக்க காவல் துறை தடியடி நடாத்த வேண்டிய நிலை ஏற்படுகின்றது. சட்டத்தின் மூலம் அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும் என்றிருந்தால் மக்களே குற்றவாளிகளைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவார்கள். சட்டம் சரியில்லை என்பதால்தான் மக்கள் சட்டத்தைக் கையில் எடுக்க முற்படுகின்றனர்.

தனது தந்தையைக் கொன்றவன் கைது செய்யப்பட்டால் அவன் சில காலம் சிறையில் தண்டச் சோறு சாப்பிட்டுவிட்டு வந்துவிடுவான். எனவே, பழிக்குப் பழி தீர்க்க நானே அவனைக் கொல்ல வேண்டும் என்ற உணர்வுக்குக் கொல்லப்பட்டவனின் மகன் வந்துவிடுகின்றான். இவ்வாறு இன்றைய சட்டங்கள் குற்றங்களைக் குறைப்பதை விட்டுவிட்டு குற்றவாளிகளை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

இஸ்லாம் பாதிக்கப்பட்டவனின் மனநிலையில் இருந்து பிரச்சினையை அணுகுகின்றது. எனது தந்தையை ஒருவன் கொன்றுவிட்டால் அவனைக் கொன்றுவிட வேண்டும் என நான் எதிர்பார்ப்பேன்.

கற்பழிக்கப்பட்ட பெண்ணிடம் உன்னைக் கற்பழித்தவனை என்ன செய்ய வேண்டும் என்று கேட்டால் 14 வருடங்கள் சிறையில் போட்டால் போதும் என்று சொல்லப் போவதில்லை. மாறாக, நடு ரோட்டில் வைத்து சுட வேண்டும் என்றுதான் சொல்வாள்.
பாதிக்கப்பட்டவர்களின் நிலையிலிருந்து தண்டனை வழங்கப்பட்டால் அது பாதிக்கப்பட்டவர் களுக்கு மன நிம்மதியைக் கொடுக்கும். பழி தீர்க்கும் நிலைக்கு அவர்களை அது இட்டுச் செல்லாது.

இதே வேளை கொலை செய்தவனை மன்னிப்பதா அல்லது தண்டிப்பதா என்ற தீர்மானத்தை எடுக்கும் உரிமையை இஸ்லாம் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்குக் கொடுக்கின்றது. அவர்கள் நினைத்தால் மன்னிக்கலாம் என்றும் இஸ்லாம் கூறுகின்றது. நாட்டு ஜனாதிபதி கூட இதில் தலையிட முடியாது என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.

இஸ்லாமிய சட்டங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் பாதிக்கப்பட்டவன் தனக்கு நியாயமான தீர்வு கிடைத்ததாக எண்ணி நிம்மதியடைவான். பழி தீர்க்கும் எண்ணத்தில் அவன் குற்றவாளியாகும் நிலை இருக்காது.

குற்றம் செய்தவனுக்கு உரிய தண்டனை கொடுக்கப்படுவதன் மூலம் அவன் மீண்டும் மீண்டும் தவறு செய்யும் நிலை உருவாகாது.

தண்டனை கடுமையானது என்பதால் குற்றம் செய்யும் துணிவை சமூகத்தில் எவரும் பெறமாட்டார்கள். குற்றத்திற்கு ஒருவருக் கொருவர் உதவவும் மாட்டார்கள். குற்றம் செய்ய ஒருவன் முற்பட்டால் அவனது உறவுகளே அதைத் தடுக்கும். இதனால் குற்றங்கள் குறைந்து அனைவரும் அச்சமற்ற மனநிலையில் நிம்மதியாக வாழ முடியும்.

இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் மூலம் குற்றங்களைக் குறைக்கலாம். அமைதியான, நிம்மதியான ஒரு சமூக சூழலை உருவாக்க முடியும். குற்றங்கள் குறைந்த அமைதியான வாழ்வின் பக்கம் இஸ்லாம் உங்களை அழைக்கின்றது.

பெண்ணின் உரிமை காக்கும் இஸ்லாம்:

இஸ்லாம் பலதார மணத்தை அனுமதித்துள்ளது. ஒரு ஆண் ஒரே நேரத்தில் நான்கு பெண்களை மணந்து அவர்களுடன் இல்லறம் நடாத்தலாம் என்பது இஸ்லாமிய சட்டமாகும். இந்த சட்டத்தின் மூலம் இஸ்லாம் பெண்ணினத்திற்கு அநீதி இழைத்துள்ளது. இஸ்லாம் ஆணாதிக்க சிந்தனையுடன் செயற்படுகின்றது! ஆண்களுக்கு அளித்த இந்த சலுகையை இஸ்லாம் பெண்களுக்கு அளிக்குமா? என்றெல்லாம் கேள்வி எழுப்பப்படுகின்றது.

இஸ்லாம் பலதார மணத்தை அனுமதித்துள்ளது என்பது உண்மையே! இருப்பினும் இது பெண்ணினத்திற்கு எதிரானது என்பது தவறான பார்வையாகும். இந்த விமர்சனத்தை உரிய முறையில் புரிந்து கொள்ள பலதார மணம் பற்றிய அடிப்படையான ஒரு உண்மையைப் புரிந்து கொள்வது அவசியமாகும்.

உலகமெல்லாம் ஏகபத்தினி விரதம் பூண்டிருந்தது போன்றும், இஸ்லாம் ஒன்றுதான் பலதார மணத்தை ஆரம்பித்து அறிமுகப்படுத்தியது போன்றும் உலகம் நோக்குகின்றது.

இந்துப் புராணங்கள் சிறப்பித்துப் பேசும் பல தம்பதிகள் பலதார மணம் புரிந்திருப்பதை ஏனோ மறந்து விடுகின்றனர். இவ்வாறே யூத, கிஸ்தவ வேதங்களும் இஸ்லாமும் சிறப்பித்துப் பேசும் ஆப்றஹாம், தாவீது, மோஸே, ஸாலமோன் போன்ற தீர்க்கதரிசிகளும் பலதார மணம் புரிந்திருந்தனர் என பைபிள் கூறுகின்றது.

இந்து, யூத, கிறிஸ்தவ வேதங்கள் சொல்லும் பலதார மணம் என்பது வரையறை அற்றது. நிபந்தனைகள் அற்றது. பல்லாயிரம் மனைவியரை மணந்தவர்களும் உள்ளனர். இஸ்லாம் ஒரே நேரத்தில் நால்வருடன் மட்டுமே இல்லற வாழ்க்கை வாழலாம் என்கின்றது. அனைவருடனும் சரி சமமாக நடக்க வேண்டும் என்கின்றது. நீதமாக நடக்க முடியாதவர்கள் ஒருத்தியுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்கின்றது.

அனைவரினதும் பாலியல், பொருளாதார தேவைகளை நிறைவு செய்யும் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த அனுமதி என்கின்றது. இஸ்லாம் பலதார மணத்தை ஆரம்பித்து வைக்கவில்லை. அதற்கு கட்டுப்பாடுகள், வரையறைகள், நிபந்தனைகளை விதித்து ஒழுங்கு படுத்தியுள்ளது. முதலில் இந்த உண்மையை விமர்சகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அனுமதி மட்டுமே கட்டளை அல்ல:

முஸ்லிம் அல்லாத மக்கள் ஒருவருக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாட்டுடன் வாழும் போது முஸ்லிம்கள் அனைவரும் நான்கு பெண்களை மணந்திருப்பது போன்று சிலர் கற்பனை பண்ணுகின்றனர். வசதிவாய்ப்பும், தேவையும் உள்ளவர்களுக்கான வெறும் அனுமதியாகவே பலதார மணம் உள்ளது. ஒவ்வொருவரும் கட்டாயம் பலதார மணம் செய்தாக வேண்டும் என்ற கட்டளையும் இல்லை. இதே வேளை, முஸ்லிம்களிலும் மிகக் குறைந்த தொகையினரே பலதார மணம் புரிந்துள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

பாவம் அல்ல பரிகாரம்:

பலதார மணத்தைப் பாவமாக பலரும் பார்க்கின்றனர். இது பாவம் அல்ல. மிகப்பெரும் பரிகாரமாகும். உலக சனத்தொகையைக் கருத்திற் கொண்டால் ஆண்களை விட பெண்களே அதிகமாகப் பிறக்கின்றனர். இறப்பு விகிதத்தை எடுத்துக் கொண்டால் பெண்களை விட விரைவாகவே ஆண்கள் மரணித்து விடுகின்றனர். போர்கள், விபத்துக்கள், கலவரங்கள், மது, விபச்சாரம்… போன்ற தவறான நடத்தைகளால் நோயுற்று மரணித்தல் போன்ற அனைத்து விதங்களிலும் ஆண்களின் மரண வீதம் பெண்களின் மரண வீதத்தை விஞ்சி உள்ளது. இதனால் விதவைகள் தொகை அதிகரித்து வருகின்றது.

ஆண்களை விட பெண்கள் விரைவாகவே திருமணத்திற்குத் தயாராகிவிடுகின்றனர். ஒரு ஊரில் முறையாக ஒவ்வொரு வருடமும் 25 ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் பிறப்பதாக வைத்துக் கொள்வோம். நான்கு வருடங்கள் கழியும் போது அந்த ஊரில் (25 x 4 = 100) 100 ஆண் பிள்ளைகளும் 100 பெண் பிள்ளைகளும் இருப்பார்கள். 20 வருடங்கள் தாண்டும் போது அந்த அந்த 100 பெண் பிள்ளைகளும் திருமணத்திற்காக ஏங்கிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால், அந்த 100 ஆண் பிள்ளைகளும் இன்னும் ஓரிரு வருடங்கள் கழித்து திருமணம் செய்யலாம் என்ற மனநிலையில் இருப்பார்கள். இந்த அடிப்படையில் பார்க்கும் போது திருமண சந்தையில் ஆண்களுக்கு கிராக்கி அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனால்தான் சீதனக் கொடுமை வளர்ந்து கொண்டே செல்கின்றது.

பெண்கள் ஆண்களை விட அதிகரித்துச் செல்கின்றனர். இலங்கையில் ஆண்களை விட பெண்கள் 18 இலட்சம் பேர் அதிகமாக உள்ளனர் என புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

இப்போது அதிகமாகப் பிறக்கும் பெண் பிள்ளைகளுக்கும் இளம் விதவைகளுக்கும் தீர்வு என்ன? ஒன்றில் ஆண்களையும், பெண்களையும் சரிசமமாகப் பெற வேண்டும். இது எமது கையில் இல்லை. அல்லது ஒருவனுக்கு ஒருத்தி என்று கூறும் கடவுளாவது கணக்குத் தப்பாமல் ஆண்-பெண் படைப்புகளைச் சரியாகப் படைக்க வேண்டும். அதுவும் இல்லை. ஆண்களை விட அதிகமாக இருக்கும் பெண்களுக்கு மாற்றுத் தீர்வு என்ன? அந்தப் பெண்களுக்கு பாலியல் ஆசையே இருக்கக் கூடாதா? அவர்கள் தமது ஆசையை அடக்கிக் கொண்டு கம்மென்று இருக்க வேண்டும் என்று சொல்ல முடியுமா?

அல்லது, அவர்கள் திருமண பந்தம் இல்லாமலே கண்டவர்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள அனுமதிப்பதா? இதை ஒழுக்கத்தை விரும்பும் எந்த சமூகமாவது ஏற்றுக் கொள்ளுமா?

அல்லது, ஒருவனுக்கு ஒருத்திதான். மீதமுள்ள பெண்களை மனைவி என்று சட்டபூர்வ திருமணம் இல்லாமல் சின்னவீடாக வைத்துக் கொள்ளலாம் என்று கூறுவதா?

பலதார மணத்தை மறுக்கும் அனைவரும் இதைத்தான் தீர்வாகச் சொல்கின்றார்கள்.

இப்படி சின்னவீடாக வைத்துக் கொள்ளும் பெண்களுக்கு சட்டபூர்வ மனைவி அந்தஸ்துக் கிடைக்காது. இவளுடன் தொடர்பு வைத்திருப்பவனின் சொத்தில் பங்கு கிடைக்காது. இவனுக்குப் பிறக்கும் குழந்தை சட்டபூர்வ குழந்தையாகாது. அந்தக் குழந்தைக்கு சொத்தில் பங்கு கிடைக்காது. இது பெண்ணினத்திற்கு எதிரான கொடுமை யில்லையா?

முதல் மனைவி மட்டும்தான் பெண்ணா? இரண்டாவது வாழ்க்கைப்படுபவளும் பெண்தானே! அவளது உரிமைகள் குறித்து யாராவது சிந்தித்ததுண்டா?

இவ்வாறு சின்னவீடாக வைத்துக் கொள்வதை விட சட்டபூர்வமாகத் திருமணம் செய்து அவளுக்கு மனைவி என்ற அந்தஸ்தையும் அவளுக்குப் பிறக்கும் குழந்தைக்கு தந்தை என்ற ஸ்தானத்தை வழங்கி சொத்திலும் சமபங்கு வழங்கச் சொல்லும் இஸ்லாம் பெண்ணினத்தின் உரிமையைக் காக்கிறதா? அல்லது சின்னவீடு நடைமுறை காக்கின்றதா? நடுநிலையாகச் சிந்தித்தால் பெருகிவரும் பெண்ணினத்தின் பிரச்சினைக்கு இஸ்லாம் சொல்லும் பலதார மணத்தை விட சிறந்த தீர்வை யாராலும் கூற முடியாது.

பெண்ணுக்கு அனுமதிக்க முடியாது:

இஸ்லாம் பலதாரமணத்தை அனுமதித்ததற்கான நியாயமான பல காரணங்கள் உள்ளன. இஸ்லாமிய பலதார மணச் சட்டத்தை விமர்சிப்போர் நான்கு ஆண்களை ஒரு பெண் மணக்க முடியாதா? எனக் கேள்வி எழுப்புகின்றனர். பெண்களின் உடல் கூறுக்கும் ஆண்களின் உடல் அமைப்புக்கும் இடையில் உள்ள மாற்ற முடியாத இயல்புகளைப் புரிந்து கொண்டாலும் புரிந்து கொள்ளாதது போன்று கேள்வி எழுப்புகின்றனர்.

ஒரு ஆண் ஒரே நேரத்தில் நான்கு பெண்களை மணக்கின்றான். நான்கு பெண்களும் குழந்தைகளைப் பெறுகின்றனர். நான்கு குழந்தைகளுக்கும் தந்தை யார் என்பது அனைவருக்கும் தெரியும். அந்தக் குழந்தைகளுக்கு அவன் பொறுப்பேற்பான்.

இதே வேளை, ஒரு பெண் ஒரே நேரத்தில் நான்கு ஆண்களை மணந்தால் அவள் ஒரே நேரத்தில் ஒரு குழந்தையைப் பெறுவாள். அந்தக் குழந்தைக்கு யார் தந்தை என்பதில் குழப்பம்தான் வரும். நால்வருமே அது தன் குழந்தை என்று உரிமை கொண்டாடினாலும் பிரச்சினை, நாள்வரில் நாள்வருமே அது தனது குழந்தை இல்லை என மறுத்தாலும் பிரச்சினைதான். எனவே, பெண்கள் ஒரே நேரத்தில் பல ஆண்களுடன் வாழ்க்கை நடாத்துவது என்பது தீர்வாகாது. பிரச்சினையைத்தான் தோற்றுவிக்கும்.
இஸ்லாம் சொல்லும் பலதார மணம் என்பது பெண் இனத்திற்கான உரிமைகளை உண்மையான வடிவில் வழங்கும் தன்மை கொண்டது. பலதார மணத்தை மறுப்பதுதான் பெண்ணினத்திற்கான அநீதியாகவும் கொடுமையாகவும் அமையும்.

எனவே, பலதார மணத்தை தகுதியும் தேவையும் உள்ளவர்களுக்கு அனுமதிப்பதன் மூலம் பெண்ணினத்தின் உரிமையை உரிய விதத்தில் காத்திட இஸ்லாம் உங்களை இரு கரமேந்தி அழைக்கின்றது