மீண்டும் உயரும் எண்ணை விலை - பீப்பாய் ஒன்றின் விலை இத்தனை டொலர்களா?
ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையானது ஒரு பீப்பாய் (Barrel) 200 அமெரிக்க டொலர்களை எட்டக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்த போது, எண்ணெய் விலை 100 டொலர்களைத் தாண்டும் என கணிக்கப்பட்டது.
ஆனால், போர் ஆரம்பித்து மூன்று வாரங்களுக்குள் நிலைமை மோசமடைந்துள்ளதாக சந்தை ஆய்வாளர் ஜோன் பவர் (John Power) தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியில் மசகு எண்ணெய் விலையை தீர்மானிக்கும் 'பிரெண்ட்' (Brent) மசகு எண்ணெய் விலை மார்ச் 9ஆம் திகதி 120 டொலர்களைத் தொட்டது.
மார்ச் 13ஆம் திகதி முதல் இது 100 டொலர்களுக்குக் குறையாமல் பதிவாகி வருகின்றது.
அத்தோடு, மார்ச் 18ஆம் திகதி ஈரானின் 'தெற்கு பார்ஸ்' எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பதிலடியாக கத்தார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல்களை முன்னெடுத்தது.
இது விலை உயர்வை மேலும் தூண்டியுள்ளது. தற்போதைய மோதல் போக்கு தொடருமானால், மசகு எண்ணெய் விலை 150 டொலர்களைக் கடந்து, 200 டொலர்கள் வரை செல்ல வாய்ப்புள்ளதாக சந்தை அவதானிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
ஹோர்முஸ் நீரிணை ஊடாக முன்னெடுக்கப்படும் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளமை, உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலியில் பாரிய நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்