இன்று ஜி ஜி பொன்னம்பலம் பிறந்த நாள் 8-11-2021

#history
இன்று ஜி ஜி பொன்னம்பலம் பிறந்த நாள் 8-11-2021

இராணியாரின் சட்ட ஆலோசகர் (Q. C) கணபதிப்பிள்ளை காங்கேசர் பொன்னம்பலம் 1901 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 08 ஆம் திகதி பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் புனித சம்பத்தரசியார் கல்லூரியில் கற்ற அவர், தனது மேற்படிப்பை கொழும்பு புனித ஜோசப் கல்லூரியில் தொடர்ந்தார்.

இலங்கைப் பல்கலைக்கழகத்தின் விவசாயத் துறைக்கான புலமைப் பரிசிலை 1921 ஆம் ஆண்டு பெற்றுக்கொண்ட ஜீ. ஜீ. அவர்கள் கேம்பிறிட்ஜ் நகரில் Fizwilliam House இல் இணைந்து கற்று இயற்கை அறிவியற் துறையிலும் சட்டத்துறையிலும் இரண்டாம் வகுப்பின் உயர் தரத்தில் சிறப்புச் சித்தியைப் பெற்றார். 1925 ஆம் ஆண்டு முதுகலைமாணிப் பட்டத்தை கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகம் அவருக்கு வழங்கியது. 1925 ஆம் ஆண்டு லிங்கன்ஸ் இல் சேர்ந்துகொண்ட இவர் 1927 ஆம் ஆண்டு இலங்கை உச்ச நீதிமன்ற வக்கீலாக (அட்வகேற்) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். பின்னர் 1961 ஆம் ஆண்டளவில் சென்னை உயர் நீதிமன்ற வக்கீலாகவும் அங்கீகரிக்கப்பட்டார்.

ஜீ. ஜீ. பொன்னம்பலம் சேர். பொன்னம்பலம் இராமநாதன் மறைவிற்குப் பின் தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தார். இந்நாடு சிங்கள நாடு என்றும், இந்நாடு சிங்களவருக்கே சொந்தம் என்றும் சிங்களத் தலைவர்களிடையே ஒரு எண்ணம் வலுப்பெற்ற நிலையில் சிங்கள மகாசபையை பண்டாரநாயக்கா தோற்றுவித்தார்.

சிறுபான்மையினரை ஒதுக்கும் திட்டமிட்ட சூழ்ச்சியை உணர்ந்த ஜீ. ஜீ. பொன்னம்பலம் தமிழரைப் பாதுகாக்கும் முறையிலும் தமிழரின் குரலாக இருக்கும் பொருட்டும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரசை 29.08.1944 இல் நிறுவினார்.

1945 இல் தமிழ் காங்கிரசின் சார்பில் ஜீ. ஜீ. பொன்னம்பலம் சோல்பரி கமிஷன் முன் தோன்றி சிறுபான்மை மக்களின் நிலைமையை விளக்கியதுடன், சம பிரதிநிதித்துவக் கோட்பாட்டை முன்வைத்தார்.

சிங்களவருக்கும் சிறுபான்மையினருக்கும் பாராளுமன்றத்தில் சமபலம் இருக்க வேண்டுமென்பதே இக்கோட்பாடாகும். தமிழர்களுக்கு வரப்போகும் இடர்களை முன்கூட்டியே அறிந்தபடியால் அவை வராமல் தடுப்பதற்காக இக்கோட்பாட்டை முன்வைத்தார். 1922 இல் சேர் வில்லியம் மனிங் அரசியல் சீர்திருத்தத்திற்கு அடித்தளமிட்டார், அவரின் கருத்து பின்வருமாறு “ஒரு பெரும்பான்மையினம் சிறுபான்மையினம் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடாது” என்பதாகும்.
சேர் வில்லியம் மனிங் அரசியல் சீர்திருத்தத்திற்கு அமையவே ஜீ. ஜீ. பொன்னம்பலம் சம பிரதிநிதித்துவக் கோட்பாட்டை முன்வைத்தார்.

இந்த கோட்பாடே இலங்கையில் தற்போது ஏற்புடைய ஓர் அரசியற் தீர்வு என்பதை சில சிறுபான்மைக் கட்சிகள் இன்று உணர்ந்து உள்ளன.
சோல்பரி கமிஷன் சம பிரதிநிதித்துவக் கோட்பாட்டை ஏற்காவிடினும், ஜீ. ஜீ. யின் வாதத்தால் பிரிவு 29 போன்ற சில பாதுகாப்புக்களை சிறுபான்மையினரின் நன்மை கருதி அரசியல் சாசனத்தில் உட்புகுத்த வேண்டுமென சிபாரிசு செய்தது.

மலைநாட்டு தமிழர்களுக்கு அவர்களின் பிரஜா உரிமையைப் பறித்த மசோதாவிற்கு ஆதரவு நல்கி மலைநாட்டுத் தமிழர்களுக்கு அவர் துரோகம் செய்தார் என சிலர் அவரைக் குற்றம் சுமத்தி அவர் மீது சேறு பூச எத்தனிக்கிறார்கள். அண்மையிலும் இவ்வாறான ஒரு பொய்க்குற்றச்சாட்டு ஒரு பத்திரிகையில் வெளியாகியிருந்தது.

மலையக மக்களின் பிரஜாவுரிமையை பறித்த சட்டம் 1948 ஆம் ஆண்டு அமுலுக்கு வந்த 18 இலக்க இலங்கைப் பிரஜா உரிமைச் சட்டமாகும். அதை அகில இலங்கைத் தமிழ் காங்கிரசும் ஜீ. ஜீ. பொன்னம்பலமும் எதிர்த்தே வாக்களித்திருந்தனர். இதற்கு பல ஆதாரங்கள் உண்டு.
அமரர் எஸ். ஜே. வி. செல்வநாயகத்தைப் பற்றி ரி. சபாரத்தினம் எழுதிய நினைவு நூலில் 94, 95 பக்கங்களில் பின்ருமாறு கூறப்பட்டுள்ளது ‘இலங்கைப் பிரஜைவுரிமை மசோதாவை பிரதமர் டி. எஸ். சேனநாயக்க சமர்ப்பித்துப் பேசிய சமயம் அம்மசோதாவை எதிர்த்து இலங்கை – இந்திய காங்கிரஸ், அகில இலங்கை தமிழர் காங்கிரஸ், லங்கா சமசமாஜக் கட்சி, பெல்ஸ்சுவிக் லெனின் கட்சி மற்றும் சில உறுப்பினர்களும் எதிர்த்துப் பேசி வாக்களித்தனர்.

அம்மசோதா மீதான விவாதம் நடக்கும் சமயம் ஜீ. ஜீ. உணர்ச்சிவசப்பட்டு உரையை நிகழ்த்தினார்.’ “உங்கள் பாட்டனோ பூட்டனோ இலங்கையில் பிறந்தார் என பத்திரங்களுடன் அத்தாட்சிப்படுத்த முடியுமா” என்று டி. எஸ். சேனநாயக்காவை கேட்டார். இந்தியத் தமிழ் மக்களுக்கு அநீதி விளைவுக்கும் மசோதாவை நம் ஏற்கமாட்டோம் எனக் கூறினார்.

மேலே கூறப்பட்டதற்கு மேலும் ஆதாரமாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அ. அமிர்தலிங்கம் 1974 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் “இலட்சியப்பாதை” என்ற தலையங்கத்தில் வெளியிடப்பட்ட வெள்ளிவிழா மலரில் 15 ஆம் பக்கத்தில் பின்வருமாறு கூறப்பட்டது ‘தமிழ் காங்கிரஸ் அரசாங்கத்துடன் சேர்வதற்கு முன்னரே டி. எஸ். சேனநாயக்கா அரசாங்கம், இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டத்தை நிறைவேற்றிவிட்டது. தமிழ்க் காங்கிரஸ் சார்பில் ஜீ. ஜீ. பொன்னம்பலமும் சா. வே. செல்வநாயகமும் அச்சட்டத்தை எதிர்த்து வாக்களித்தனர்.’

அதன் பிறகு தமிழ் காங்கிரஸ் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதற்கு ஆரம்பிப்பதற்கு முன் பிராஜாவுரிமையை இழந்த இந்திய வம்சாவளியினருக்கு அவ்வுரிமையை மறுபடியும் திரும்பப் பெற பண்டிட் நேருவுடன் கலந்தாலோசித்து ஒரு மசோதாவைக் கொண்டு வரவேண்டுமென டி. எஸ். சேனநாயக்காவிடம் ஒரு வாக்குறுதியைப் பெற்றது.

இப் பேச்சுவார்த்தைகளில் பொன்னம்பலமும் செல்வநாயகமும் டாக்டர் நாகநாதனும பங்குபற்றினர். இவ்வாக்குறுதியின் பயனாகவே பிரஜா உரிமையை இழந்த இந்திய வம்சாவளியினருக்கு பிரஜா உரிமை கொடுப்பதற்காக இந்தியர் – பாகிஸ்தானியர் பிரஜாவுரிமை மசோதா சட்டத்தை நேருவின் ஆசியுடன் சேனநாயக்க பாராளுமன்றத்தில் கொண்டு வந்தார்.
இழந்த மசோதாவையே ஜீ. ஜீ. பொன்னம்பலம் ஆதரித்தார்.

இதில் என்ன பிழை? இச்சட்டத்தின் பிரகாரம் ஏழு வருடம் இலங்கையில் வசித்த விவாகம் செய்த இந்தியவருக்கும் 10 வருடம் இலங்கையில் வசித்த விவாகம் செய்யாத இந்தியருக்கும் பிரஜா உரிமையைப் பெற முடியும். இச்சட்டத்தை இலங்கை இந்திய காங்கிரஸ் தலைவர்கள் பெரி. சுந்தரம் ஜோர்ச் மேத்தா போன்றோர் இது நேர்மையான முறையில் அமுல்செய்யப்பட்டிருந்தால் மலைநாட்டுத் தமிழர்களில் எழுபத்தைந்து வீதத்திற்கும் மேற்பட்டோர் பிரஜாவுரிமையைப் பெற்றிருப்பார்கள் என பகிரங்கமாகக் கூறினார்கள்.

24.04.1948 இல் நேருஜியின் செயலாற்றும் வெளிவிவகார அமைச்சு டி. எஸ். சேனநாயக்காவிற்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. “இச் சட்டத்தின் சரத்துக்களின்படி குடியுரிமை பெறத் தகுதியில்லாத இந்திய வம்சாவளியினரின் தொகை மிகக் குறைவாகவே இருக்கும்” என்பதாகும்.வெகு காலமாக 1940 ஆண்டு வரை மலைநாட்டுத் தமிழர் தமது உரிமைகளுக்காக வாதாட ஒரு ஸ்தாபனம் இல்லாதிருந்தனர்.


அக்காலங்களில் அவர்களுக்காகப் போராடியவர் யார்? அரசாங்க சபையில் அக்காலத்திலிருந்த இரண்டொரு இந்திய அங்கத்தவரின் உதவியோடு பொன்னம்பலம் அவர்களே மலைநாட்டும் தமிழரின் உரிமைகளுக்காக வாதாடினார்.

1940 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை இந்தியக் காங்கிரஸ் ஓர் அரசியல் ஸ்தாபனமாக வளம்பெறும் வரை பொன்னம்பலம் அவர்களே மலைநாட்டுத் தமிழரின் உரிமைகளுக்காக அல்லும், பகலும் வாதாடினார்.

பாராளுமன்றத்தின் நிகழ்ச்சிகளையும் பேச்சுக்களையும் தொகுத்து வெளியிடும் ‘ஹன்சாட்’ (Hansard) என்ற உரைத்தொகுதிகளில் கடந்த முப்பத்தைந்து வருடங்களாக திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் ஓய்வின்றி மலைநாட்டுத் தமிழர் விடயத்தில் செய்த சொற்பொழிவுகளெல்லாம் பதியப்பட்டிருக்கின்றன. மலைநாட்டுத் தமிழருக்கான அரசியல் சீர்திருத்தம் சம்பந்தமாகவோ, இந்தியத் தொழிலாளரின் உரிமைகள் சம்பந்தமாகவோ, இந்தியர் இலங்கையில் குடியேறுவது சம்பந்தமாகவோ, விவாதங்கள் ஏற்படும் பொழுதெல்லாம் அவர்களுக்காக வாதாடியவர் யார்? அவர்களுடைய கோரிக்கைகளை உருவாக்கி வெளியிட்டவர் யார்? ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களே!

1930 ஆம் ஆண்டளவில் தென்னிந்தியத் தமிழர்கள் இலங்கையில் பிரவேசிப்பதனை வரையறுக்க வேண்டுமென்னும் ஒரு கிளர்ச்சி எழுந்தது. இதனை ஆராய்வதற்கு ஒரு விசாரணைக்கும் சேர் எட்வேட் ஜாக்ஸன் கே. சி. தலைமையில் நியமிக்கப்பட்டது. ஜீ. ஜீ. பொன்னம்பலம் இவ்விசாரணைக் குழுவின் முன் தோன்றி தென்னிந்தியத் தமிழர்கள் எவ்விதக் கட்டுப்பாடுமற்ற முறையில் இலங்கைக்கு வரலாமெனத் தீவிரமாகவே வாதாடினார். இதன் பயனாக தென்னிந்தியத் தமிழர்கள் இலங்கைக்கு வருவதனைத் தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் அப்போது எடுக்கப்படவில்லை!

‘நேவ்சுமயர்’ தோட்டத்தை எடுத்துக்கொண்டு அங்கு உள்ள இந்தியத் தொழிலாளரை தோட்டத்தை விட்டு வெளியேற்றி அவர்களை நிர்க்கதிக்குள்ளாக்கியது அரசாங்கம். அப்பொழுது ஜீ. ஜீ. பொன்னம்பலம் அரசாங்க சபையில் அரசாங்கத்தின் இச்செய்கையைக் கண்டித்து வாதாடினார். பின்னர் கேகாலை நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட இந்தியத் தொழிலாளர் சார்பாக வேதனமின்றி வழக்குப் பேசி அவருடைய உரிமையைப் பாதுகாத்தார்.

1947 ஆம் ஆண்டு தேர்தலின் பின் ஒரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான கட்சிகள் ஒன்று சேர்ந்து ஸ்ரீ நிசங்க அவர்களது வீட்டில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக ஓர் அரசை அமைப்பதற்கு ஆலோசனை செய்தனர். யமுனா மாநாடு என்றழைக்கப்பட்ட இந்த மாநாட்டுக்கு தலைமை தாங்கிய பெருமை அமரர் ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களையே சாரும், இடதுசாரிகளுக்கிடையில் ஒற்றுமையின்மையால் இம்மாநாடு தோல்வியில் முடிவடைந்தது.

தற்போதைய அரசாங்கம் புதிய அரசியல் சாசனமொன்றை அறிமுகம் செய்வது பற்றிச் சிந்திக்கும் இவ்வேளையில் ஜீ. ஜீ. பொன்னம்பலம் சோல்பரி கமிஷன் முன் தோன்றி ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருக்கும் சிபாரிசுகளையும் கருத்திலெடுத்து ஆராய்வது தமிழ்பேசும் மக்களது நலன்சார்ந்த மிகவும் ஆரோக்கியமான விடயமாக இருக்கும்.