சீனாவில் இருந்து தெறித்து ஓடும் யாகூ.. நேரம் பார்த்து களமிறங்கும் கூகுள்

சட்ட ரீதியில் நிலவும் சவாலான சூழல் காரணமாகச் சீனாவில் இருந்து முற்றிலுமாக வெளியேறுவதாக யாகூ நிறுவனம் அறிவித்துள்ளது.
அதேநேரம் இந்தச் சூழலைப் பயன்படுத்தி கூகுள் நிறுவனம் மீண்டும் சீனாவில் நுழையத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு காலத்தில் சர்வதேச நிறுவனங்களை வரவேற்ற சீனா, தற்போது அதுபோன்ற பெரு நிறுவனங்களுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளது.
எந்தவொரு பெரு நிறுவனத்திற்கு எதிராகவும் சீனா நேரடியாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றாலும் கூட, அந்நாட்டு அரசின் தற்போதைய நடவடிக்கைகள் பெரு நிறுவனங்களுக்கு எதிராக உள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிறுவனமான யாகூ சட்ட ரீதியில் நிலவும் சவாலான சூழல் காரணமாகச் சீனாவில் இருந்து முற்றிலுமாக வெளியேறுவதாக யாகூ நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த நவம்பர் 1ஆம் தேதி முதல் சீனாவில் உள்ள பயனர்களுக்கு யாகூ தனது சேவையை நிறுத்திவிட்டது. Yahoo அல்லது AOL மெயிலுக்கு வரும் சீனா பயனாளர்கள் மற்ற தளங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக (redirect) உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து யாகூ நிறுவன்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "சீனாவில் தொழில் செய்ய ஏற்பட்டுள்ள சவாலான சூழ்நிலை காரணமாகவும் அங்கு நிலவும் சிக்கலான சட்ட நிலை காரணமாகவும் யாகூவின் சேவைகள் அனைத்தும் நவம்பர் 1 முதல் சீனா மெயின்லேண்ட் (mainland China) பகுதியில் முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது. யாஹூ நிறுவனம் பயனர்களின் உரிமைகள், இலவச மற்றும் திறந்த இணையம் ஆகியவற்றில் எப்போதும் உறுதியாக உள்ளது. இதுவரை சீனாவில் எங்களுக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.
சமீப வாரங்களில் சீனாவில் இருந்து வெளியேறிய 2ஆவது முக்கிய அமெரிக்க நிறுவனம் யாகூ ஆகும். முன்னதாக மைக்ரோசாப்ட் கடந்த மாதம் சீனாவில் தனது லிங்க்ட்இன் சேவையை நிறுத்தியது. சீனாவில் இயங்கிய அமெரிக்காவுக்குச் சொந்தமான கடைசி சமூக வலைத்தளம் லிங்க்டின் ஆகும். சவாலான சூழல் மற்றும் சீனா அரசுடன் அதிகம் இணங்கி பணியாற்ற வேண்டியுள்ளதால் அங்கிருந்து வெளியேறுவதாக மைக்ரோசாப்ட் அறிவித்தது.
யாகூ நிறுவனம் முதல்முறையாகக் கடந்த 1998ஆம் ஆண்டு சீனாவிற்குள் அடியெடுத்து வைத்தது. கடந்த 10 ஆண்டுகளாகவே யாகூ நிறுவனம் சீனாவில் அதன் இருப்பை வெகுவாக குறைத்தே வந்தது. இ-காமர்ஸ் பிரிவில் தனக்கு இருந்த பங்குகளைக் கடந்த 2012 இல் அலிபாபா குழுமத்திற்கு யாகூ விற்பனை செய்தது. அதன் பின்னர் மின்னஞ்சல் சேவை மற்றும் வலை போர்ட்டலை மூடியது. பின் 2015இல் பெய்ஜிங்கில் செயல்பட்டு வந்த சர்வதேச ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தையும் யாகூ மூடியது
சீன அரசு சமீபத்தில் டெக் நிறுவனங்கள் மீது புதிய சட்டங்களைக் கொண்டு வந்தது. அதன் பிறகே இவ்விரு நிறுவனங்களும் சீனாவில் இருந்து வெளியேறியுள்ளது. அதேநேரம் இந்தச் சூழலைப் பயன்படுத்தி கூகுள் நிறுவனம் மீண்டும் சீனாவில் நுழையத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சீன அரசின் விதிகளுக்கு உட்பட்டு ஒரு தேடுபொறி இயந்திரத்தைக் கூகுள் வடிவமைத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2010க்கு முன்பு வரை கூகுள் நிறுவனம் சீனாவில் தனது சேவைகளை வழங்கியே வந்தது. அப்போது சீன மொழியில் இயங்கும் ஒரு தேடுபொறி இயந்திரத்தைக் கூகுள் வழங்கி வந்தது. சீனாவின் கடும் விதிமுகளைக்கு உட்பட்டே அப்போது கூகுள் இயங்கி வந்தது. கடந்த 2010இல் ஹேக்கிங் தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து கூகுள் நிறுவனம் சீனாவில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.



