கொலையில் முடிந்த கொத்து ரொட்டித் தகராறு

காலி - பத்தேகம - நாகொட பிரதேசத்தில் கொத்து ரொட்டி தொடர்பில் ஏற்பட்ட தகராறில் கொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,அவர் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு 9 மணியளவில் காலி - பத்தேகம - நாகொட வீதியிலுள்ள உணவகம் ஒன்றின் முன்பாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொத்து ரொட்டி வாங்க வந்த நபர் ஒருவர், கொத்துரொட்டியின் நிலை குறித்து உணவக உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து, தமது வீட்டுக்குச் சென்ற இளைஞர் கூரிய ஆயுதமொன்றுடன் மீண்டும் உணவகத்திற்கு திரும்பியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
குறித்த இளைஞர், உணவக உரிமையாளரைத் தாக்க முயற்சித்தபோது, அருகிலிருந்த உரிமையாளரின் மகன் மற்றும் சிலர் தாக்கியதில் படுகாயமடைந்துள்ளார்.
சம்பவத்தில் 26 வயதுடைய இளைஞர் பலியாகியுள்ளார்.
காயமடைந்த உணவக உரிமையாளர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வத்தேகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



