கிரேக்கத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு பொது சேவைகள் முடக்கம்

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு பொது சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாது என கிரேக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச சேவை,வங்கிச் சேவை,உணவகங்கள் மற்றும் சில்லரை வர்த்தக நிலையங்களுக்கு செல்பவர்கள் தொற்றுக்குள்ளாகவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தினசரி புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறான விதிமுறைகள் அமுலுக்கு வருகின்றன.
கடந்த 24 மணித்தியாலங்களில் கிரேக்கத்தில் 6700 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.
திங்கள் அன்று எண்ணிக்கை 5449 ஆக பதிவாகியிருந்தது.
இந்த நிலையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 754451 ஆகவும் கொவிட் உயிரிழப்புகள் 16050 ஆகவும் பதிவாகியுள்ளது.
தொற்று மோசமாகும் நிலையிலும் வெப்பம் குறைவடையும் நிலையிலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் தனோஸ் லெவ்ரிஸ் தொலைக்காட்சி உரையொன்றில் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அனைவரும் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தொற்றுக்குள்ளாகாத மருத்துவ அறிக்கையை காண்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நடைமுறைகள் நவம்பர் ஆறாம் திகதி முதல் அமுலுக்கு வருகின்றது.
நாட்டின் 11 மில்லியன் மொத்த சனத்தொகையில் 60.5 வீதமானவர்கள் மாத்திரமே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
இதேவேளை பூஸ்டர் தொடர்பில் வெகு விரைவில் ஒவ்வொருவருக்கும் கையடக்கத் தொலைபேசி மற்றும் கடிதங்கள் மூலம் அறிவிக்கப்படுவார்கள் என அரச தரப்பு தெரிவித்துள்ளது.



