வங்கிகளில் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த 25 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

பிரேசில் நாட்டின் மினஸ் கிரெய்ன் மகாணத்தின் வர்ஜிஹா நகரில் உள்ள சில வங்கிக்கிளைகளில் தாக்குதல் நடத்தி கொள்ளையில் ஈடுபட கொள்ளைக்கும்பல் திட்டமிட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து வர்ஜிஹா நகரின் வெளிப்பகுதியில் உள்ள இரண்டு பண்ணைவீடுகளில் சுமார் 50 போலீசார் இன்று அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அந்த இரண்டு பண்ணை வீடுகளிலும் பயங்கர ஆயுதங்களுடன் மொத்தம் 25 கொள்ளையர்கள் பதுங்கி இருந்தது தெரியவந்தது.
போலீசார் சுற்றி வளைத்ததை உணர்ந்த கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். கொள்ளையர்களின் தாக்குதலுக்கு போலீசாரும் பதில் துப்பாக்கிச்சூடு நடத்தனர். இரு தரப்பினர் இடையேயும் பயங்கரமான துப்பாக்கிச்சண்டை நடந்தது. போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் முதல் பண்ணை வீட்டில் இருந்த 18 கொள்ளையர்கள் மற்றும் இரண்டாவது பண்ணை வீட்டில் இருந்த 7 கொள்ளையர்கள் என மொத்தம் 25 கொள்ளையர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட கொள்ளையர்களிடம் இருந்து அதீநவீன துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் என பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இதன் மூலம் வங்கிகளை கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த கொள்ளையர்களின் திட்டம் முறியடிக்கப்பட்டது.



