போலி லிட்ரோ எரிவாயு சிலிண்டர் மோசடி - தந்தை, மகன் உட்பட மூவர் விளக்கமறியலில்!
வெற்று மஞ்சள் நிற எரிவாயு சிலிண்டர்களுக்கு நீல நிற வர்ணம் பூசி, அவற்றைப் போலி லிட்ரோ (Litro) எரிவாயு சிலிண்டர்களாக மாற்றியதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட தந்தை, மகன் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களும் எதிர்வரும் டிசம்பர் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொட்டதெனியாவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, அவர்களை டிசம்பர் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
விசாரணைகளின்போது, புதிதாக வர்ணம் பூசப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பழைய சிலிண்டர்களைப் போன்று காண்பிப்பதற்கு சந்தேகநபர்கள் நூதனமான முறையைக் கையாண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதற்காக, சமையலுக்குப் பயன்படுத்தப்பட்ட பழைய சிலிண்டர்களைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், அப்பம் தயாரிக்கும் மாவு, மிளகாய்க் குழம்பு உள்ளிட்ட உணவுக் கழிவுகள் மற்றும் உணவுத் துகள்களைச் சிலிண்டர்களின் மீது பூசியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.