1.6 மில்லியன் வாகனங்களை மீள அழைக்கும் நிறுவனங்கள் – காற்றுப்பைகளில் வெடிப்பு அபாயம்!

#world_news #LANKA4 #vehicle #Safety
Mithra
45 minutes ago
1.6 மில்லியன் வாகனங்களை மீள அழைக்கும் நிறுவனங்கள் – காற்றுப்பைகளில் வெடிப்பு அபாயம்!

உலகின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களான ஹோண்டா மற்றும் டொயோட்டா ஆகியவை, பாதுகாப்பு குறைபாடு காரணமாக சுமார் 1.6 மில்லியன் வாகனங்களை மீள அழைக்கத் தீர்மானித்துள்ளன.

குறித்த வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள டகட்டா (Takata) வகை காற்றுப்பைகளின் உள்பாகங்களில் வெடிப்பு ஏற்படக்கூடிய அபாயம் கண்டறியப்பட்டுள்ளதையடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஹோண்டா நிறுவனம் அமெரிக்காவில் 810,592 வாகனங்களையும், டொயோட்டா நிறுவனம் உலகளவில் சுமார் 790,000 வாகனங்களையும் மீள அழைக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டொயோட்டா நிறுவனம் மீள அழைக்கவுள்ள வாகனங்களில் 314,000 வாகனங்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தற்போதைய மீள அழைப்பு தொடர்பில் காற்றுப்பைகள் வெடித்த சம்பவங்களோ, அதனால் ஏற்பட்ட விபத்துக்கள் அல்லது காயங்களோ இதுவரை பதிவாகவில்லை என இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.

அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துப் பாதுகாப்பு நிர்வாகம் (NHTSA) மேற்கொண்ட சோதனைகளின்போது, சில காற்றுப்பைகளின் உட்புறப் பாகங்கள் காலப்போக்கில் பலவீனமடையக்கூடும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விபத்துக்கள் மற்றும் பாதிப்புகளைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மீள அழைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மீள அழைக்கப்படவுள்ள டொயோட்டா வாகனங்கள்:

  • Lexus SC430 (2002–2010)
  • Lexus IS250 (2011)
  • Lexus GX460 (2017)
  • Toyota Corolla (2003–2008)
  • Toyota Tundra (2005–2006)
  • Toyota Sequoia (2005–2007)
  • Toyota 4Runner (2016–2017)

மீள அழைக்கப்படவுள்ள ஹோண்டா வாகனங்கள்:

  • Honda Accord (2013)
  • Honda Civic (2012–2013)
  • Honda CR-V (2012–2013)
  • Acura ILX (2013)
  • Acura RDX (2013)

எவ்வாறாயினும், குறித்த உற்பத்தி ஆண்டுகளைச் சேர்ந்த அனைத்து வாகனங்களும் இந்த மீள அழைப்பில் உள்ளடக்கப்படவில்லை எனவும், குறிப்பிட்ட உற்பத்தித் தொகுதிகளைச் சேர்ந்த வாகனங்கள் மாத்திரமே இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், டகட்டா காற்றுப்பைகளில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக 2009ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் 28 பேர் உயிரிழந்துள்ளதுடன், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த உயிரிழப்புகளில் குறைந்தது 20 பேர் ஹோண்டா வாகனங்களில் பயணித்தவர்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த தசாப்தத்தில் டகட்டா காற்றுப்பைகளின் குறைபாடுகள் காரணமாக உலகளவில் 100 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் மீள அழைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தற்போதைய பாதுகாப்பு குறைபாட்டைச் சரிசெய்யும் வகையில், குறித்த வாகனங்களில் காற்றுப்பைகளை விரிவடையச் செய்யும் (Inflator) உபகரணங்களைப் புதியவற்றைக் கொண்டு மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்குத் தேவையான புதிய உபகரணங்களை 2027ஆம் ஆண்டின் முற்பகுதிக்குள் தயாரித்து வழங்க எதிர்பார்ப்பதாக டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!