பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘ரொட்டும்ப அமில’ ரஷ்யாவிலிருந்து நாடு கடத்தல்!
இலங்கையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான ‘ரொட்டும்ப அமில’ இன்று (20) ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை நாட்டுக்கு அழைத்து வருவதற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழுவொன்று ரஷ்யாவுக்குச் சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு இடம்பெற்ற பல்வேறு கொலைச் சம்பவங்கள், கப்பம் பெறுதல் மற்றும் பாரிய போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இவர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்துள்ளார்.
44 வயதுடைய குறித்த சந்தேகநபர், மாத்தறை ஊறுபொக்க பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் ஆரம்பகட்ட வாக்குமூலங்களைப் பதிவு செய்யவுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகளுக்காகப் பலத்த பாதுகாப்புடன் கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத் தலைமையகத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.