கொரியாவின் உதவியுடன் இலங்கையில் புதிய கடல்சார் தரவு மையம் திறந்து வைப்பு!

#SriLanka #International #Development #LANKA4 #technology
Abi
41 minutes ago
கொரியாவின் உதவியுடன் இலங்கையில் புதிய கடல்சார் தரவு மையம் திறந்து வைப்பு!

கொரியக் குடியரசின் நிதி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் இலங்கையில் நிறுவப்பட்ட தேசிய கடல்சார் மற்றும் கடற்றொழில் தரவு மையம் (SOFDC), நாரா நிறுவனத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கொரியக் கடல்சார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (KIOST) தொழில்நுட்பப் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட இந்த மையம், நவம்பர் 21ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக கடற்றொழில் தினத்தை முன்னிட்டு நேற்று (19) திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான கொரியத் தூதுவர் யூன் யொங் கிம் (Youn-Jung Kim), கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கடல்சார் அறிவியல், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் நிலைபேறான கடற்றொழில் முகாமைத்துவத்தை மேம்படுத்துவதே இந்தத் தரவு மையத்தின் பிரதான நோக்கமாகும்.

இதன் ஊடாக கடற்றொழில் வளங்கள் தொடர்பான அறிவியல் முன்னறிவிப்புகளை மேம்படுத்துதல், கடல்சார் தரவுகளை ஒருங்கிணைத்துப் பகுப்பாய்வு செய்தல், கடல்சார் சூழலியல் மற்றும் காலநிலை மாற்றங்களைக் கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன், அறிவியல் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட நிலையான கடற்றொழில் முகாமைத்துவத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், கடல்சார் ஆய்வுகளுக்கான டிஜிட்டல் வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் இந்த மையம் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை மீனவ சமூகத்தின் நலனுக்கும் கடற்றொழில் துறையின் எதிர்கால அபிவிருத்திக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மையத்தை மக்கள் பயன்பாட்டிற்குக் கையளிக்க முடிந்தமை நாரா நிறுவனத்தின் முக்கிய சாதனையாகக் கருதப்படுகிறது.

மேலும், இந்தத் திட்டம் இலங்கை மற்றும் கொரியா இடையிலான அறிவியல் ஒத்துழைப்பு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் நீலப் பொருளாதார அபிவிருத்தி ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!