வீட்டுத்திட்ட நிதி இடைநிறுத்தத்தால் கடன்சுமை – எஞ்சிய பணத்தை கோரி மக்கள் போராட்டம்!

#SriLanka #Protest #Kilinochchi #government #District #LANKA4
Mithra
1 hour ago
வீட்டுத்திட்ட நிதி இடைநிறுத்தத்தால் கடன்சுமை – எஞ்சிய பணத்தை கோரி மக்கள் போராட்டம்!

இடைநிறுத்தப்பட்ட டித்வா வீட்டுத்திட்டத்திற்கான எஞ்சிய நிதியை உடனடியாக வழங்குமாறு வலியுறுத்தி, கிளிநொச்சி மாவட்டம், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பரந்தன் கிராம மக்கள் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டித்வா வீட்டுத்திட்டத்தின் கீழ் பயனாளிகளாகத் தெரிவு செய்யப்பட்டு, ஆரம்பக் கொடுப்பனவைப் பெற்றுக்கொண்ட தாம் வீடமைப்புப் பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும், பின்னர் நிதி இடைநிறுத்தப்பட்டதால் பெரும் கடன் சுமைக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

எனவே, வீட்டுத்திட்டத்திற்கான எஞ்சிய நிதியை உடனடியாக வழங்குமாறு கோரி, தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.

இந்நிலையில், குறித்த வீட்டுத்திட்டம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்ரமணியம் முரளிதரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம் தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில், அமைச்சினால் கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார்.

தற்போது அமைச்சிலிருந்து கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தல்களுக்கமைய, பாதிக்கப்பட்ட பயனாளிகளின் ஆவணங்களை உரிய முறையில் உறுதிப்படுத்தி, மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்களின் பரிந்துரைகளுடன் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, பிரதேச செயலாளர்கள் பாதிக்கப்பட்ட பயனாளிகளின் ஆவணங்களைத் தயாரித்து அமைச்சுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த ஆவணங்கள் கட்டம் கட்டமாக அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர், விரைவில் பயனாளிகளுக்கான நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!