சாந்தபுரம் பாலியல் வன்கொடுமைச் சம்பவம் போதைப்பொருளுக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்!
கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் கடந்த 08.11.2026ஆம் திகதி இடம்பெற்ற கூட்டு பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தைக் கண்டித்தும், கிராமத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தக் கோரியும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சாந்தபுரம் கிராம பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த கூட்டு பாலியல் வன்கொடுமைச் சம்பவத்திற்கு போதைப்பொருள் பாவனையே காரணம் எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டியதுடன், கிராமத்தில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும், போதைப்பொருள் பாவனையால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவும், பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது, தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரனிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்துள்ளனர்.