உயர்தர, சாதாரண தர மாணவர்கள் கட்டாயம் பாடசாலைக்கு வர வேண்டும் – பிரதமர் ஹரிணி வலியுறுத்தல்!
உயர்தர மற்றும் சாதாரண தர வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவர்கள் கட்டாயம் பாடசாலைக்கு வருகை தர வேண்டும் எனவும், 13 வருட கட்டாயக் கல்வியைப் பூர்த்தி செய்வது அவசியம் எனவும் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன், உயர் வகுப்புகளில் கல்வி பயிலும் தமது பிள்ளைகளைத் தொடர்ச்சியாகப் பாடசாலைக்கு அனுப்புவதற்கு பெற்றோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அக்கரைப்பற்று முஸ்லிம் தேசியப் பாடசாலையின் 80ஆவது ஆண்டு நிறைவு விழாவில் நேற்று (15) கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வித்துறைக்காக 749 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 562.4 பில்லியன் ரூபாய் பாடசாலைக் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் மாணவர்களின் அறிவு, தொழில்நுட்பத் திறன், சமூகத் திறன்கள் மற்றும் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.