வரவு செலவுத் திட்டத்தில் கோரிக்கைகள் புறக்கணிப்பு – அரச ஊழியர்கள் போராட்டத்தில் குதிப்பு!
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தொழில்சார் கோரிக்கைகள் மற்றும் களப் பணிகளுக்கான தேவைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, பல்வேறு அரச சேவைகளின் தொழிற்சங்கங்கள் இன்று (16) முதல் பணிப்புறக்கணிப்பு மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.
இதற்கமைய, நீர்ப்பாசனத் திணைக்களத்தில் நாடளாவிய ரீதியில் பணியாற்றும் 450க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப உதவியாளர்கள், தங்களது சொந்தப் பணத்தில் எரிபொருள் மற்றும் களப் பணிகளுக்கான செலவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகத் தெரிவித்து, நேற்று (15) நள்ளிரவு முதல் இரண்டு நாட்கள் சுகவீன விடுமுறைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தமது கோரிக்கைகளுக்கு இரண்டு நாட்களுக்குள் அரசாங்கம் தீர்வு வழங்காவிட்டால், அடுத்தகட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக நீர்ப்பாசன தொழில்நுட்ப உதவியாளர்கள் சங்கத்தின் தலைவர் சமன் துஷார வைத்தியரத்ன எச்சரித்துள்ளார்.
இதேவேளை, அனர்த்த நிவாரண சேவைகளில் ஈடுபடும் தொழிற்சங்கத்தினரும் இன்று முதல் பணிப்புறக்கணிப்பில் குதித்துள்ளனர். கடந்த கால அனர்த்தங்களின்போது முன்வைக்கப்பட்ட நான்கு பிரதான கோரிக்கைகளுக்கு இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை என அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அத்துடன், தமது கோரிக்கைகள் வரவு செலவுத் திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, அனைத்து அனர்த்த நிவாரணப் பணிகளிலிருந்தும் விலகி தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் உபுல் குமார தெரிவித்துள்ளார்.
மறுபுறம், 2024ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டுள்ள களப் பணிகளுக்கான கொடுப்பனவை மீள வழங்குமாறு கோரி, அரச சேவைப் பொறியியலாளர் சங்கமும் இன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.
இதற்கமைய, பொல்துவ சந்தி பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டம் சம்பள உயர்வைக் கோரி முன்னெடுக்கப்படுவதல்ல என்றும், களப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு ஏற்படும் மேலதிக செலவுகளை ஈடுசெய்வதற்கான கொடுப்பனவை மீள வழங்குமாறே கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் சங்கத்தின் தலைவர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்