நாளை பாராளுமன்றத்தில் 2027 வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்துகிறார் ஜனாதிபதி!
2027ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை (12) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
இதற்கான 2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாம் வாசிப்புக்காக கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையைத் தொடர்ந்து, நவம்பர் 13ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஏழு நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
இதற்கான வாக்கெடுப்பு நவம்பர் 20ஆம் திகதி மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து, குழுநிலை விவாதம் நவம்பர் 21ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது.
இதேவேளை, வரவு செலவுத் திட்ட விவாதங்கள் நடைபெறும் காலப்பகுதியில் அரச விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்ந்த ஏனைய நாட்களில், சனிக்கிழமைகளிலும் பாராளுமன்றம் கூடவுள்ளது.
மேலும், விவாதக் காலப்பகுதியில் பாராளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.