இலங்கை இளைஞர்களுக்கு சிங்கப்பூரில் புதிய வேலைவாய்ப்புகள்!
9 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வேலை அனுமதி வழங்க சிங்கப்பூர் அரசு தீர்மானம் – மாதச் சம்பளம் 2,000 சிங்கப்பூர் டொலர்! சிங்கப்பூரில் நிலவும் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், அந்நாட்டு அரசு வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான வேலை அனுமதித் திட்டத்தில் புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது.
சிங்கப்பூர் மனிதவள அமைச்சின் அறிவிப்பின்படி, பாரம்பரியமற்ற பணியாளர் ஆதார நாடுகளுக்கான தொழிற்பட்டியலில் புதிதாக 8 தொழில்கள் மற்றும் பணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் இலங்கையர்கள் உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு உணவகம், விருந்தோம்பல், சமூக சேவை மற்றும் விமானப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இறைச்சி மற்றும் மீன் பதப்படுத்தும் பணியாளர்கள், உணவகப் பணியாளர்கள், விமானப் பணியாளர்கள், குழந்தைப் பராமரிப்பாளர்கள் மற்றும் ஆசிரியர் உதவியாளர்கள் உள்ளிட்ட 8 முக்கிய தொழில்கள் இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இலங்கையுடன் பங்களாதேஷ், பூட்டான், கம்போடியா, இந்தியா, லாவோஸ், மியான்மர், பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளும் இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள், அவர்களுக்கு மாதாந்தம் குறைந்தபட்சம் 2,000 சிங்கப்பூர் டொலர்களைச் சம்பளமாக வழங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், சிங்கப்பூர் நிறுவனங்கள் உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்து அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்ற பின்னரே வெளிநாட்டுப் பணியாளர்களைச் சட்டபூர்வமாக வேலைக்கு அமர்த்த முடியும்.
இந்தப் புதிய மாற்றம் சிங்கப்பூரில் வேலைவாய்ப்பை எதிர்பார்த்துள்ள இலங்கை இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.